”தமிழைக் கற்றுக்கொண்டால், எந்த மொழியை வேண்டுமானாலும் எளிதில் கற்றுக்கொள்ளலாம்” என ‘மிஸ் இந்தியா’ பட்டம் பெற்ற அனுக்ரீத்தி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ‘மிஸ் இந்தியா’ பட்டம் பெற்ற அனுக்ரீத்தி கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், `தமிழகத்தைச் சேர்ந்த நான், மிஸ் இந்தியாவாகத் தேர்வானது மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்தகட்டமாக உலக அழகிப் போட்டிக்குத் தயாராகிவருகிறேன். அதை நோக்கி கவனம்செலுத்திவருகிறேன். உலக அழகி பட்டம் பெறுவதே எனது கனவு; உலக அழகி பட்டம் பெற்ற பின், என் படிப்பை மீண்டும் தொடர்வேன். என் தாயார் எனக்கு சுதந்திரம் கொடுத்ததால்தான் என்னால் இந்த இடத்துக்கு வரமுடிந்தது. கட்டுப்பாடுகளை விதித்திருந்தால், நிச்சயம் என்னால் இந்த இடத்துக்கு வந்திருக்க முடியாது. என் தாய்க்கு நன்றி. தமிழ்மொழியைக் கற்றுக்கொண்டால், எந்த மொழியை வேண்டுமானாலும் எளிதில் கற்றுக்கொள்ள முடியும். தமிழ் இலக்கியம் போல வேறு எந்த மொழியிலும் இல்லை. உலக அழகி பட்டம் பெற்றவர்கள், மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும். வெளிநாடுகளில் இந்தியாவின் பிரதிநிதியாகக் கலந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று தெரிவித்தார்.