விண்ணில் ஏவப்பட்ட சில நொடிகளில் வெடித்துச் சிதறிய ‘மொமொ -2’ ராக்கெட்!

ஜப்பானில் உள்ள தனியார் நிறுவனம் ‘மொமொ -2’ என்ற ராக்கெட் ஒன்றை விண்ணில் ஏவியது. ராக்கெட் புறப்பட்ட சில நொடிகளிலேயே பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறி கீழே விழுந்தது. ராக்கெட் வெடித்துச் சிதறும் வீடியோ காட்சி தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

மொமொ -2 ராக்கெட்

ஜப்பானில், இன்டர்ஸ்டெல்லர் டெக்னாலஜிஸ் என்ற தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் ராக்கெட் தயாரிக்கும் பணியைச் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ‘மொமொ -2’ என்ற ராக்கெட்டை தயாரித்தது. 32.8 அடி உயரத்துடன் 150 கிலோ எடையில் தயாரானது மொமொ -2. சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் வரை பறக்கும் வகையில் தயாரிக்கப்பட்டது.  இதனை, ஹோக்கைடோவை அடுத்த தக்கி என்ற நகரில் உள்ள விண்வெளி ஏவுதளத்தில் இருந்து சோதனை செய்தனர். அப்போது, 10 மீட்டர் நீளம் கொண்ட ‘மொமொ -2’ புறப்பட்ட சில நொடிகளிலேயே வெடித்துச் சிதறி கீழே விழுந்தது.

இன்டர்ஸ்டெல்லர் டெக்னாலஜிஸ் நிறுவனம் தயாரித்த ராக்கெட்  ஒன்று  வெடித்துச் சிதறுவது முதல் முறையல்ல. இதற்குமுன், இதேபோன்று ராக்கெட் ஒன்றைத் தயாரித்து கடந்த ஆண்டு விண்ணில் ஏவி சோதனை செய்தது. விண்ணில் ஏவப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த ராக்கெட் வெடித்துச் சிதறியது. அந்த சோதனையும் தோல்வியில் முடிந்தது.