“ஒரு வாரம் ஃபேஸ்புக்குக்கு விடுமுறை விட்டால் என்ன ஆகும்?” – புதிய ஆய்வு

ஃபேஸ்புக் பயன்டுத்தாமல் இருப்பதால் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “எங்கள் சமூக வாழ்வே கேள்விக்குறியாகிவிடும். சமூகத்தில் இயங்க முடியாமல் தனித்து விடப்பட்டிருக்கிறோம்” என்ற பதில் வந்திருக்கிறது.

தினமும் வழக்கமாகச் செய்யும் செயல்களிலிருந்து எப்போதாவது விடுப்பு எடுத்துக் கொள்வது அவசியமான ஒன்று. அது உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். தினமும் செய்யும் செயல்களில் ஃபேஸ்புக் பயன்படுத்துவதும் ஒன்றுதானே. அதிலிருந்தும் ஒரு வாரம் விடுப்பு எடுத்துக் கொண்டால், மனமும், மூளையும் அதற்காக உங்களை கையெடுத்துக் கும்பிடும்.

டீ, காபி போல தினமும் ஒரு ஃபேஸ்புக் போஸ்டாவது போட்டுவிடுவது என நம்மில் நிறைய பேர் சபதம் செய்திருப்போம். நாம் சமூகத்துடன் (டிஜிட்டல் சமூகம்) எப்போதும் தொடர்பில் இருக்கவே விரும்புகிறோம். முகம் தெரியாத யாரோ ஒருவரால் நம் புகைப்படத்திற்கு போடப்படும் அந்த லைக்குக்காகவே நாம் ஃபேஸ்புக்கின் முன் மண்டியிட்டுக் கிடக்கிறோம். சமூகத்தின் மீது நமக்கிருக்கும் விருப்பு, வெறுப்புகளை கொட்டித் தீர்த்து நாம் ஜென் நிலையை அடைவதற்கான ஒரு வழியாகவும் அதனைப் பார்க்கிறோம். ‘அதெல்லாம் இல்ல ட்யூட், நா நினைச்சா உடனே இதை கண்ட்ரோல் பண்ணுவேன்’என்ற உதார் எல்லாம் வேண்டாம். உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள், ஒரு வித அழுத்தத்தை உணர்கிறீர்களா இல்லையா என்று. மற்றவர்களுக்காக இல்லை, உங்களுக்காக மட்டுமே நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். அதற்குள் சில ஆராய்ச்சிகளின் முடிவுகளையும் தெரிந்து கொள்வோம்.

ஃபேஸ்புக்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் எரிக் வான்மன் நடத்திய ஓர் ஆர்ய்ச்சி. 128 ஃபேஸ்புக் பயனர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்களின் மனநிலை, மன அழுத்தம், எவ்வளவு திருப்திகரமான வாழ்வை மேற்கொள்கிறார்கள் என ஆழமாகச் சோதனை செய்யப்படுகிறார்கள். அதோடு அவர்களின் எச்சில் மாதிரிகளையும் சேகரித்துக் கொள்கிறார்கள். நமது எச்சிலில்,  மன அழுத்தத்துடன் சம்பந்தப்பட்ட கார்டிசோல் என்ற ஹார்மோன் ஒன்று உள்ளது. எவ்வளவு தூரம் உங்கள் எச்சிலில் கார்டிசோலின் அளவு அதிகமாக உள்ளதோ அவ்வளவு தூரம் நீங்கள் மன அழுத்தத்துடன் இருக்கிறீர்கள் என அர்த்தம்.

இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களின் பாதி பேர் ஒரு வாரம் ஃபேஸ்புக் பயன்படுத்தாமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஃபேஸ்புக் பயன்டுத்தாமல் இருப்பதால் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “எங்கள் சமூக வாழ்வே கேள்விக்குறியாகிவிடும். சமூகத்தில் இயங்க முடியாமல் தனித்து விடப்பட்டிருக்கிறோம்” என்ற பதில் வந்திருக்கிறது. ஒரு வாரம் கழித்து மீண்டும் அவர்களைச் சோதனை செய்திருக்கிறார்கள். இப்போது எப்படி உணர்கிறீர்கள் என்ற கேள்விக்கு,  “எங்கள் சமூக வாழ்க்கையே பாதாளத்திற்கு சென்றுவிட்டது போலிருக்கிறது” என்று பதிலளித்திருக்கிறார்கள். குறைந்தது அவர்கள் சமூக வாழ்க்கை மட்டும் அல்ல, அவர்களது எச்சிலில் இருந்த கார்டிசோல் அளவும் தான். முன்பை விட மன அமைதியுடன் இருக்கிறார்கள், ஆனால் அவர்களால் அதை உணர முடியவில்லை. ஆனால் அந்த ஒரு வாரத்தில் நிஜ உலகில் அவர்கள் சமூகத்துடன் நல்ல உறவு ஏற்பட்டிருந்திருக்கிறது. நிஜ மனிதர்களுடன் நிறைய கலந்துரையாடி இருக்கின்றனர். கிடப்பில் இருந்த நிறைய வேலைகள் முடிந்திருக்கின்றன.

இதே போல் 2015ல் கோபன்ஹேகனின், ஹேப்பினஸ் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 1000 பேரிடம் ஒரு வாரம் ஃபேஸ்புக்கை கைவிடும்படி கேட்டுக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு அந்த ஒரு வாரத்தில் மட்டும் 55 சதவிகிதம் வரை மன அழுத்தம் குறைந்திருந்தது தெரியவந்தது. அதோடு நிஜ சமூகத்தில் அவர்களது வாழ்வில் தரமும் சில மடங்கு உயர்ந்திருந்தது. ஒன்று தெளிவாக சொல்லிக் கொள்கிறேன், இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட அனைவரையும் ஃபேஸ்புக்கை முழுவதுமாக கைவிடுமாறு கூறவில்லை. ஒரு வாரம் மட்டும் அதற்கு ஓய்வு கொடுக்குமாறு தான் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அறிவியல் ஆயிரம் கூறும் அதை எல்லாம் கேட்க முடியுமா எனக் கேட்க வேண்டாம். உங்களுக்காக, உங்கள் மனதிற்காக ஒரு வாரம் அல்லது ஒரு ஐந்து நாள் ஃபேஸ்புக்கிலிருந்து விலகி இருங்களேன் முடிவுகள் உங்களை ஆச்சர்யப்படுத்தலாம்!