தமிழ்நாடு நெல்லையில் இளைஞர்கள் சிலர் காட்டுப் பகுதியில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள், வாட்ஸ்அப்பில் வைரலாகப் பரவின.
இதுபற்றி காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், சிவந்திபட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர், தனது நண்பர்கள் அந்தோணி, சுனில், வசந்த், பாலசந்தர் ஆகியோருடன் சிவந்திபட்டி அருகே உள்ள காட்டுப்பகுதியில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய விவரம் தெரியவந்தது.
ஜூன் 19-ம் திகதி அந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டது என்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். ராமச்சந்திரன் அரிவாளால் கேக் வெட்டி நண்பர்களுக்கு ஊட்டி மகிழ்ந்ததை, அவரது நண்பர்கள் செல்போன் மூலம் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட விவரம் தெரியவந்தது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிவந்திபட்டி காவல்துறையினர், ராமச்சந்திரன் உள்ளிட்ட 5 பேரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். மேலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பொது இடங்களில் நடந்து கொள்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.