விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் ஏற்படுத்த வேண்டும்! யாழில் அமைச்சர்

தமிழ் மக்களின் சுதந்திரமாக அச்சமின்றி வாழ வேண்டுமாயின் விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டுமாயின் வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பின் கையோங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற அரச வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் பெண்கள் கடுமையான கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் அண்மையில் 6 வயதான பாடசாலை மாணவி கொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் அமைப்பு இருந்திருக்குமாயின் இப்படியான குற்றச் செயல்கள் நடக்காது.

அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கட்சியை முன்னேற்றுவதை மாத்திரம் செய்து வருகிறார். வடக்கு வாழ்மக்கள் சம்பந்தமாக எதனையும் தேடி அறிவதில்லை. ஜனாதிபதி தமிழ் மக்களை காப்பற்ற தவறியுள்ளார்.

யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் நடக்கும் இந்த சம்பவங்கள் காரணமாக போர் முடிந்த 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதிக்கு முன்னர் தமிழ் மக்கள் வாழ்ந்த விதம் குறித்து மீண்டும் உணர்வு பூர்வமாக உணர்கின்றோம்.

இன்றைய நிலையானது தமிழீழ விடுதலைப் புலிகளை உருவாக்க வேண்டும் என்பது எமது முக்கிய நோக்கம். நாங்கள் உயிருடன் வாழ வேண்டுமானால், நாங்கள் நிம்மதியாக வீதியில் நடக்க வேண்டுமாக இருந்தால், எங்கள் பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று மீண்டும் வீடு திரும்ப வேண்டும் என்றால், வடக்கு கிழக்கிலே தமிழீழ விடுதலைப் புலிகளின் கையோங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.