கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார்?

வடமாகாண சபைக்கு தமிழரசு கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை இதுவரையிலும் முடிவு செய்யவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை நிறுத்த வேண்டும் என அதிகளவான உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

எனினும், தமிழரசு கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை இதுவரையிலும் முடிவு செய்யவில்லை.

எவ்வாறாயினும், தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்களின் தெரிவாக மாவை சேனாதிராஜாவே இருக்கின்றார்“ என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, வடமாகாண சபையின் பதவி காலம் நிறைவடையுள்ள நிலையில், வடமாகாண சபைக்கான தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நியமிக்கப்பட மாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, முதலமைச்சர் வேட்பாளராக தன்னை நியமித்தால் போட்டியிட தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

எனினும், கடந்த சில ஆண்டுகளாக சி.வி. விக்னேஸ்வரனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழ் அரசுக் கட்சிக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை நிறுத்துவதற்கு தமிழரசு கட்சியின் சில உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.