தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தலையால் நடந்தான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வம். இவரது வீட்டில் ஏராளமான எலித்தொல்லை இருந்து வந்தது. இதனால் எலிகளை கொல்ல எலிமருந்து விஷம் தடவிய கேக்கை வாங்கி வீட்டின் மறைவான பகுதிகளிலும், வீட்டின் வெளிப்பகுதியிலும் வைத்துள்ளனர். இதில் ஏராளமான எலிகள் இறந்து போயின.
இதைத்தொடர்ந்து மறுநாளான நேற்று முன்தினம் அதுபோல் கேக்கில் எலி மருந்து தடவி வைத்துள்ளனர். ஆனால் எலிகள் இறந்துவிட்டதால் வீட்டுக்குள் வைக்கப்பட்ட கேக்குகள் அப்படியே இருந்துள்ளன. இதை தெய்வம் நேற்று காலையில் அகற்ற தவறிவிட்டார்.
இந்த நிலையில் நேற்று 3-ம் வகுப்பு படிக்கும் அவரது மகன் முத்து (வயது 8), வீட்டில் விளையாடும் போது மறைவான இடத்தில் எலிக்கு வைக்கப்பட்ட கேக் கிடப்பதை பார்த்துள்ளான். அது தவறி கீழே விழுந்துள்ளது என்று நினைத்து, எலி மருந்து தடவிய ‘கேக்’கை சாப்பிட்டு விட்டான். சிறிது நேரத்தில அவன் வாயில் நுரை தள்ளியதால், வீட்டில் விசாரித்துள்ளனர்.
அப்போது அவன் எலிமருந்து தடவிய கேக்கை சாப்பிட்டதை கூறியுள்ளான். உடனடியாக சிறுவன் முத்துவை நெல்லை அரச வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை பரிதாபமாக இறந்தான்.
தந்தை எலிக்கு வைத்த விஷம் தடவிய கேக்கை மகன் சாப்பிட்டு பலியான சம்பவத்தினால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.