லண்டனில் தமிழீழ அணியால் வெடித்தது சர்ச்சை!

கொனிஃபா (CONIFA) என்ற சுயாதீன கால்பந்து கழகங்களின் கூட்டமைப்பினால் நடத்தப்படும், உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ‘தமிழீழம்’ அணி சேர்க்கப்பட்டமைக்கு, லண்டனில் அமைந்தள்ள பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம், கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளது.

அதன்படி ‘தமிழீழம்’ எனும் தனி பிராந்தியத்தை அடையாளப்படுத்தும் ஒரு அணியை போட்டியில் இணைத்துக் கொள்வது சமூகங்களிடையே வேறுபாட்டை தோற்றுவிக்கும் எனச் சுட்டிக்காட்டியுள்ள உயர்ஸ்தானிகராலயம், தமிழீழம் என்றழைக்கப்படும் ஒரு பிரதேசத்தின் அணியை நிராகரித்து சுயாதீன கால்பந்து கழகங்களின் கூட்டமைப்பிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

இந்தக் கடிதத்தில், சமரசத்துடன் கூடிய ஒன்றிணைந்த நாட்டை கட்டியெழுப்ப, இலங்கை மக்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் ஒரு குழுவை இப்போட்டியில் இணைத்துக் கொள்வது பிரித்தானியா, ஐரோப்பா மட்டுமின்றி இலங்கையில் வாழும் பல்லின மக்களிடையேயும் குழப்பத்தையும், வேறுபாட்டையும் தோற்றுவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபீஃபா என்ற சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பில் உறுப்புரிமை அற்ற நாடுகள், அங்கீகரிக்கப்படாத நாடுகள், சிறுபான்மையினங்கள், நாடற்றோர் மற்றும் சிறு பிராந்தியங்கள் ஆகியவற்றின் தேசிய கால்பந்து அணிகள் இதில் அங்கத்துவம் பெற்றுள்ளன.

கொனிஃபா (CONIFA) என அழைக்கப்படும் இந்த சுயாதீன கால்பந்துக் கழகங்களின் கூட்டமைப்பு 2014ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட கால்பந்துக் கழகங்களின் அமைப்பு என்பதும் 2 வருடங்களுக்கு ஒரு முறை போட்டிகளை நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.