யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுழிபுரம் பகுதியில் கொல்லப்பட்ட 6 வயது சிறுமி சிவனேஷன் ரெஜினா, திட்டமிடப்பட்டு காட்டுப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.கொல்லப்பட்ட சிறுமியின் சித்தப்பா உறவு முறையிலான 22 வயதுடைய பிரதான சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அதனையடுத்தே கொல்லப்பட்ட சிறுமியின் மாமா உறவு முறையிலான 17, 18 வயதுகளை உடைய இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.பின்னர் கைது செய்யப்பட்ட இந்த மாமா உறவு முறையினைக்கொண்ட இரு சந்தேக நபர்களில் ஒருவரே சிறுமிக்கு பிஸ்கட் கொடுத்து ஏமாற்றி காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளமையும், மற்றைய நபர் பிரதான சந்தேக நபரின் நடவடிக்கைகளுக்கு உடன் இருந்து ஒத்தாசை புரிந்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், அதனையடுத்தே அவர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகத்தின் குறித்த உயர் அதிகாரி சுட்டிக்காட்டினார்.
இதனிடையே கொலை செய்யப்படும்போது சிறுமி ரெஜினா அணிந்திருந்ததாக சந்தேகிக்கப்படும் உடையின் பாகங்கள் பல பிரதேசத்தின் காட்டுப் பகுதிக்குள் இருந்து வட்டுக்கோட்டை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
சிறுமி கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து 500 மீற்றர்வரையிலான தூரத்திலுள்ள காட்டுப் பகுதியில் பாயொன்றுக்கு அருகே வைத்து இவை மீட்கப்பட்டதாகவும், அவை சிறுமி கொலை செய்யப்படும்போது அணிந்திருந்த உள் ஆடைகளின் பகுதிகளாக இருக்க வேண்டும் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .