டில்லியில் 11 பேர் மர்மமாக இறந்த விடயத்தில் சாமியார் ஒருவருக்கு தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் அந்த சாமியாருக்கு தற்போது வலை விரித்துள்ளனர்.
டில்லி புராரி பகுதியில் ஒரு வீட்டிலிருந்து 11 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவ் வீட்டில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையில் கடிதங்கள், நாட் குறிப்புகள் என்பன கைப்பற்றப்பட்டன.
எப்படி தற்கொலை செய்தால் மோட்சம் கிடைக்கும் என்று அக் குறிப்புகளில் உள்ளது. ஏதோ ஒரு மத சடங்குக்காக இவர்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதை வைத்து பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இம் மர்ம மரணங்களின் பிரேத பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி இவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் தற்கொலை செய்திருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.
அவ் வீட்டில் பொலிஸார் நடத்திய சோதனையில், துணி வைக்கும் இடத்தில் கைபேசி ஒன்று “சைலன்ட் மோட்” இல் இருந்துள்ளது. அதை சுவருடன் “டேப்” போட்டு ஒட்டி வைத்து இருந்துள்ளனர். இதற்கும் கூட, என்ன காரணம் என்று பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, இந்த முக்தி அடையும் சடங்குக்கு கைபேசி ஆகாது. அதை பக்கத்தில் வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஒரு சாமியார் சொல்லியிருக்கிறார். அக் கைபேசி மூலம் பல தகவல்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அக் கைபேசி உரையாடலின் படி ஒரு சாமியாரிடம் இக் குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி தொலைபேசியில் பேசியுள்ளனர். அக் கைபேசி உரையாடல்கள் அனைத்தும் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், தற்கொலை செய்து கொண்டவர்கள் குடும்பத்துக்கும் காடா பாபா என்ற மந்திரவாதி ஒருவருக்கும் இடையே நல்ல தொடர்பு இருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது. அவ்வப்போது அம் மந்திரவாதி குடும்ப உறுப்பினர்களை அழைத்துச் சென்று ஆலமரத்தில் பூஜை நடத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒருவேளை இம் மந்திரவாதி, அக் குடும்ப உறுப்பினர்கள் 11 பேரையும் மூளைச்சலவை செய்து தற்கொலைக்குத் தூண்டியிருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரித்து வருகின்றனர். வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட நாட்குறிப்பிலும் ஆலமரத்தை வழிபடுவது குறித்து குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன.
ஆலமரத்தில் விழுதுகள் தொங்குவதுபோல் வீட்டில் அனைவரின் உடல்களும் தொங்கின. மேலும், அந்த நாட்குறிப்பில் “கடவுள் ஆலமரம் போன்றவர். நாம் விழுதுகள் போல் இருக்க வேண்டும்” என்றிருந்த குறிப்புகளையும் இவர்கள் விழுதுகள் போல் தூக்குப்போட்டுத் தொங்கியதையும் பொலிஸார் ஒப்பிட்டுப் பார்த்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதையடுத்து தலைமறைவாக இருக்கும் மந்திரவாதி காடா பாபாவைத் தேடும் முயற்சியில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.
அங்கு கிடைத்த நாட்குறிப்பில் மிக முக்கியமான விடயமொன்று இருந்துள்ளது. அதில், “நீங்கள் அனைவரும் மிகவும் நல்ல பூஜை செய்து கடவுளுடன் ஐக்கியம் ஆனவர்கள். உங்களுக்கு தூக்கு மூலம் மரணம் வராது. நீங்கள் தூக்கு மாட்டி சடங்கு செய்யுங்கள். ஏதாவது தவறாக நடந்தால் கடைசி நேரத்தில் சாமியார் வந்து காப் பாற்றுவார்” என்று அந்த மர்ம சாமியார் கூறியதாக நாட்குறிப்பில் எழுதப்பட் டுள்ளது.