தமிழர்கள் எதிர்பார்த்த தீர்வு வருமா? – எம்.ஏ.சுமந்திரன்

ஐந்து வருட ஆட்சிக்காலத்துக்குள் எங்களுடைய மக்கள் மத்தியில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பது என்பது சவாலான விடயமாகும். இருந்தாலும் எங்களுடைய மக்கள் நம்பிக்கை வைத்து ஏற்படுத்திய இந்த ஆட்சி மாற்றத்தை எவ்வளவு தூரம் பயன்படுத்தி இந்தக் காலத்திற்குள் தமிழ் மக்கள் எதிர்பார்த்த எதிர்பார்ப்புகளை ஒரு தீர்வுக்குள்ளாக கொண்டுவர வேண்டிய கடப்பாடு எங்களுக்குள் இருக்கிறது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கேள்வி: 2015 ஆட்சி மாற்றம் தமிழ் மக்களைப் பொறுத்தவரை பல எதிர்பார்ப்புகளைக் கொண்டதாக அமைந்திருந்தது. அதில் புதிய அரசியலமைப்புத் திருத்தம் அந்த அடிப்படையில், தொடர்ந்தும் நீங்கள் ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனும் இது சம்பந்தமான பேச்சகளில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் அதில் முன்னேற்றங்கள் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஆட்சி நிறைவு பெறுவதற்கு முன்னர் அரசியல் தீர்வொன்று தமிழ் மக்களுக்கு கிடைக்கும் என நீங்கள் நம்புகிறீர்களா?

பதில்: நிச்சயமாக அந்த நம்பிக்கை எங்களிடம் இருக்கிறது. நம்பிக்கை இருப்பதனால்தான் தொடர்ந்தும் இந்த முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். நம்பிக்கை இல்லாவிட்டால் முயற்சி எடுப்பதில் பயனில்லாமல் போய்விடும்.

ஐந்து வருட ஆட்சிக்காலத்துக்குள் எங்களுடைய மக்கள் மத்தியில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பது என்பது சவாலான விடயமாகும். இருந்தாலும் எங்களுடைய மக்கள் நம்பிக்கை வைத்து ஏற்படுத்திய இந்த ஆட்சி மாற்றத்தை எவ்வளவு தூரம் பயன்படுத்தி இந்தக் காலத்திற்குள் தமிழ் மக்கள் எதிர்பார்த்த எதிர்பார்ப்புகளை ஒரு தீர்வுக்குள்ளாக கொண்டுவர வேண்டிய கடப்பாடு எங்களுக்குள் இருக்கிறது.

கேள்வி: ஆனால், கூட்டமைப்பின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய அரசியலமைப்பு விடயத்தில் தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று கூறுகிறார்களே?

பதில்: இந்தக் கேள்விக்கு அவர்கள் தான் பதில் கூற வேண்டும். ஆனால் இங்கு நான் ஒரு விடயத்தைக் கூற விரும்புகிறேன். அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் நானும் தான் வழிநடத்தல் குழுவில் அங்கத்தவர்களாக இருக்கிறோம். அதேபோல் அந்தப் பணியில் நாங்கள் இருவரும் தான் ஈடுபாட்டோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

அந்த அடிப்படையில் சம்பந்தன் தனக்கு நம்பிக்கையிருப்பதாகத் தான் இன்றும் கூறிக் கொண்டிருக்கிறார். என்னென்ன விடயங்கள் அரசியலமைப்புப் பணியில் நடந்திருக்கிறது. இன்னும் என்னென்ன விடயங்கள் நடக்கவிருக்கிறது என்பதை தெரிந்த எங்களுக்கு அந்தப் பணி நிறைவு பெறும் சாத்தியங்கள் இருப்பதாகத் தெரிகிறது.

நேரடியாக இந்தப் பணியில் ஈடுபடாதவர்களுக்கு சில வேளைகளில் இந்தப் பணி நடைபெற்று முடியாது என்று தோன்றலாம். அல்லது அதற்கான நம்பிக்கையை அவர்கள் இழந்து போயிருக்கலாம்.

இன்னுமொரு விடயத்தையும் நான் இங்கு கூறவேண்டும். தமிழ் மக்களுக்கு அரசியலமைப்பு பணி நிறைவேறும் என்ற நம்பிக்கையில்லை என்பது உண்மை. அதற்கு மக்களைக் குறை கூற முடியாது. ஏனென்றால் கடந்தகால கசாப்பான வரலாறுகள் அவ்வாறுதான் அமைந்திருக்கின்றன.

தொடர்ந்தும் தமிழர்கள் ஏமாற்றப்பட்டு வந்ததுதான் வரலாறு. அந்த அடிப்படையில் இன்று முன்னெடுக்கப்படும் முயற்சியும் தோல்வியில், ஏமாற்றத்தில் தான் முடிவடையும் என்ற எண்ணத்தை தான் அநேகமான தமிழர்கள் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய மனநிலைதான் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஆட்கொண்டிருக்கக் கூடும்.

கேள்வி: இன்று அரசாங்கத்துக்குள் ஏற்பட்டிருக்கின்ற முரண்பாடுகள், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மீள் எழுச்சி போன்ற சூழ்நிலைகளைத் தகர்த்தெறிந்து புதிய அரசியலமைப்புப் பணிகளை முன்கொண்டு செல்வதற்காக கூட்டமைப்பு எவ்வாறான பணிகளை ஆற்றி வருகின்றது?

பதில்: இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னரான காலத்தில் என்று மில்லாதவாறு இரண்டு தேசிய கட்சிகளும் இணைந்து கூட்டாட்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.

இதுதான் எங்களுடைய நம்பிக்கைக்கான அடிப்படை. முன்னர் ஒரு பிரதான கட்சி ஒரு தீர்வைக் கொண்டுவர எத்தனித்தால் மற்றைய பிரதான கட்சி எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு எதிர்த்து வந்தது தான் வரலாறு.

ஆனால் இன்று அந்த இரண்டு கட்சிகளும் ஒன்றாக இணைந்து ஆட்சியமைத்த காரணத்தால் அரசியலமைப்புக்கான முயற்சியை ஒரு வித்தியாசமான முயற்சியாக நாங்கள் பார்த்தோம்.

ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இரண்டாக பிரிந்திருந்த வேளையில்கூட புதிய அரசியலமைப்புப் பணியை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை எங்களிடம் வலுவாக இருந்தது. ஆனால் இன்று அரசாங்கத்திலிருந்த 16 பேர் பிரிந்து எதிர்க்கட்சியில் இணைந்திருக்கின்ற சூழ்நிலையில் மாற்று வழிகளைக் கையாள வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.

அதன் அடிப்படையில் தான் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேருடன் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அண்மையில் அரசியலமைப்புப் பணி தொடர்பில் கதைத்திருந்தார்.

அதேபோல் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களுடனும் நாங்கள் பேச்சுக்களை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

இன்று ஏற்பட்டிருக்கின்ற சூழ்நிலைகளில் பொது எதிரணி உறுப்பினர்களுடனும் பேச்சுக்களை ஆரம்பித்திருக்கின்றோம். கடந்த வாரம்கூட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் சிறிது நேரம் அரசியலமைப்புப் பணி தொடர்பில் நான் உரையாடியிருந்தேன்.

அந்த உரையாடலில் சில யோசனைகளை முன்வைத்திருந்தேன். அது தொடர்பில் ஆராய்வதாக மகிந்த ராஜபக்ஷ என்னிடம் கூறியிருந்தார். அத்தோடு எங்களுடைய யோசனைகளை ஒரு குழுவிடம் அவர் கையளித்திருக்கிறார்.

அந்தக் குழுவைச் சேர்ந்தவர்களும் என்னுடன் பேசியிருந்தார்கள். எதிர்வரும் சில நாட்களில் எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தனுக்கும் மகிந்த ராஜபக்ஷவுக்குமிடையில் இந்த விடயம் குறித்து உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை நடக்கவிருக்கிறது. எனவே, புதிய அரசியலமைப்புப் பணியில் அனைவருடைய ஒத்துழைப்பையும் பெற்று முன்னேறுவது தான் சாலச்சிறந்தது என்பது எங்களுடைய நிலைப்பாடு.

மகிந்த தரப்பு அணியில் இருக்கின்ற மூவர் அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவில் அங்கத்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இறுதியாக நடந்த வழிநடத்தல் குழுக் கூட்டத்திலும் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். அதேபோல் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேர் கொண்ட குழுவில் அங்கம் வகிக்கும் சுசில் பிரேம் ஜயந்தவும், டிலான் பெரேராவும் கூட இறுதியாக நடந்த வழிநடத்தல் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்கள்.

எனவே மேற்படி கருமம் நிறைவேற வேண்டுமாகவிருந்தால் எல்லாத் தரப்பினருடைய ஒத்துழைப்பும் எங்களுக்குத் தேவையாக இருக்கிறது. ஏனென்றால் நாங்கள் உருவாக்கவிருக்கின்ற அரசியலமைப்புச் சட்டம் என்பது இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து இன மக்களும் ஏற்றுக் கொள்கின்ற ஒரு சட்டமாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய எதிர்பார்ப்பு. அவ்வாறு அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சட்டமாக அது இருந்தால் தான் நிலைக்கக் கூடியதாகவும், நீடித்து நிற்கக் கூடியதொன்றாகவும் அது இருக்கும்.

அந்த அடிப்படையில் தான் நாங்கள் தற்பொழுது விசேடமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.

கேள்வி: வடக்கு மாகாண அபிவிருத்தி குறித்து சில தினங்களுக்கு முன்னதாக பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தீர்கள். இதனூடாக வடமாகாண மக்கள் எவ்வாறான அபிவிருத்திகளை எதிர்பார்க்க முடியும்?

பதில்: ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான கடந்த மூன்று வருடங்களில் பல தடவைகள் அபிவிருத்தி பற்றிப் பேசப்பட்டிருந்தாலும் எதுவும் பெரிதாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் விஷேட கவனம் எடுத்திருக்கிறார். அதேபோல் ஜனாதிபதியும் இது தொடர்பில் கவனமெடுத்திருப்பதாக தோன்றுகிறது.

அதற்காக அவர் ஒரு செயலணியையும் உருவாக்கியிருக்கிறார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சில தடவைகள் யாழ்ப்பாணம் சென்று கூட்டங்களை நடத்தியிருந்த அடிப்படையில், அதனை மிளாய்வு செய்யும் நோக்கின் அடிப்படையில் சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் எங்களைச் சந்தித்திருந்தார்.

அதற்கிணங்க காணி விடுவிப்பு, பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பான விசாலமான திட்டம், பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக மாற்றுவது, காங்கேசன் துறை துறைமுகத்தை சர்வதேச பயணிகள் பயன்படுத்துகின்ற துறைமுகமாக அபிவிருத்தி செய்து அதனூடாக பொருளாதார வாய்ப்புகளை அதிகரிப்பது, கைத்தொழில் பேட்டைகளை காங்கேசன் துறை, பரந்தன் ஆகிய பிரதேசங்களில் உருவாக்குவது, காணி விடுவிப்பில் எஞ்சியிருக்கின்ற காணிகள் தொடர்பிலும் அவற்றை எவ்வாறு, எந்த அடிப்படையில் விடுவிப்பது என்பது தொடர்பிலும் அந்த சந்திப்பில் நாங்கள் பேசியிருந்தோம்.

அதே போல் கிளிநொச்சியில் இராணுவம் கையகப்படுத்தி நடத்திக் கொண்டிருக்கின்ற பண்ணைகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். அதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக எங்களிடம் உறுதியளிக்கப்பட்டது.

வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பிலும் பேசியிருந்தோம். இந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் அடிக்கடி மீளாய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு முன்னேற்றங்கள் பற்றியும் அதில் இருக்கின்ற தடைகள் பற்றியும் தொடர்ந்து பேச்சுகள் நடத்தி மேற்படி அபிவிருத்தி வேலைகள் நிறுத்தப்படாது தொடர்ந்து நடைபெறும் என நம்புகின்றோம். அதற்கான முன்னேற்றங்களை எதிர்வரும் வாரங்களில் காணக்கூடியதாக இருக்கும்.

கேள்வி: தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்ட பல பிரச்சினைகளில் ஒன்று அரசியல் கைதிகளுடைய விடுதலை. இந்தப் பிரச்சினைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஆட்சி முடிவடைவதற்குள் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கலாமா?

பதில்: முழுமையான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு. 2015 நவம்பரில் ஜனாதிபதியுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்திய வேளையில் அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எங்களுக்கு வாக்குறுதியளித்திருந்தார்.

பிரதமரும் இந்தவிடயம் சம்பந்தமாக சட்டமா அதிபருடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார். அதற்கிணங்க அரைவாசிக்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

ஏனையவர்களுடைய விடுதலை தொடர்பில் நாங்கள் தொடர்ச்சியாக அழுத்தங்களைக் கொடுத்து வருகின்ற போதிலும் கூட, பல்வேறுபட்ட காரணங்களினால் அவர்களுடைய விடுதலை தள்ளிக் கொண்டே போகிறது.

அண்மையில் ஜனாதிபதியை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அரசியல் கைதிகளுடைய விடுதலை தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்ற வேளையில் பிரதமருடன் இணைந்து இந்த விவகாரம் தொடர்பில் பேசி ஒரு முடிவை எட்டுவதற்கான முயற்சிகளை எடுப்பதாக உறுதியளித்திருந்தார்.

எனவே எதிர்வரும் வாரமளவில் இந்த விவகாரம் சம்பந்தமான சந்திப் பொன்று நடைபெறும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அந்த சந்திப்பின் பின்னர் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதற்கான
வாய்ப்பு உருவாகும் என நம்புகின்றோம்.

கேள்வி: நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வீழ்ச்சியொன்று ஏற்பட்டதை அவதானிக்க முடிந்தது. இந்த வீழ்ச்சிக்கான காரணம் என்ன என நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பாரிய வீழ்ச்சி இது. இது தொடர்பாக பல வழிகளிலும் நாங்கள் ஆராய்ந்திருக்கின்றோம். இந்த விடயத்தில் பல்வேறு காரணங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன.

கடந்த தடவை உள்ளூராட்சி சபைகளை நாங்கள் நிர்வகித்தது சம்பந்தமாக மக்களுக்கு ஏற்பட்ட அவநம்பிக்கை ஒரு காரணம். அதேபோல் அங்கு ஏற்பட்ட ஊழல்களை சரியான முறையில் சபைகள் கையாளப்படாமை என்று பல காரணங்களை நாங்கள் அடையாளம் கண்டிருக்கின்றோம்

அதேபோல் கடந்த மூன்று வருடங்களாக மைத்திரி ரணில் அரசாங்கத்தின் ஒரு அங்கமாக கூட்டமைப்பு மத்தியில் செயற்பட்டது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருக்கிறது. அது தவறான எண்ணமும் இல்லை.

ஆனால் மத்திய அரசுடன் இருந்தும் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் எதுவும் முழுமையடையவில்லை என்ற ஆதங்கமும் மக்களிடம் இருக்கிறது. இவை போன்ற விடயங்கள் தான் இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என நாங்கள் அடையாளம் கண்டிருக்கின்றோம்.

மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் பாரியளவில் இருந்தமையினாலும் அவை முழுமை பெறாமல் இருப்பதனாலும் பல விடயங்கள் இழுத்தடிப்பு செய்யப்படுவதனாலும் அதனால் ஏற்பட்ட நம்பிக்கையிழப்பு விரக்தியைக் கூட்டமைப்புக்கு எதிரான வாக்குகளாக மக்கள் வாக்களித்துள்ளார்கள். அவ்வாறு எதிர்த்து வாக்களிக்கின்ற பொழுது ஒரு திசையில் செல்லாது பல திசைகளிலும் தங்களுடைய வாக்குகளை வாக்களித்திருக்கிறார்கள்.

எனவே இதனை கொள்கை மாற்றத்தினால் மக்கள் அளித்த வாக்குகளாகவோ அல்லது இன்னொருவர் மீது ஏற்பட்ட நம்பிக்கையின் காரணமாக அளித்த வாக்குகளாகவோ நாங்கள் கருதவில்லை. எங்கள் மீது ஏற்பட்ட
நம்பிக்கையீனம் காரணமாக எல்லா வழிகளிலும் தங்களுடைய வாக்குகளை அளித்த தேர்தலாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

கேள்வி : வடக்குகிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் தெரிவுகள் எந்தக்கட்டத்தில் இருக்கின்றன.

பதில்: இதுவரை அது சம்பந்தமாக எந்தவித முடிவையும் நாங்கள் எடுக்கவில்லை. வட மாகாண சபைக்கான காலம் முடிவடைவதற்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கின்றன.

வடக்குக்கும் கிழக்குக்கும் ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. எனவே அவ்வேளையில் இரு மாகாண சபைகளுக்குமான வேட்பாளர்களை ஒரே நேரத்தில் தீர்மானிப்போம்.

கேள்வி: கிழக்கு மாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பின் வியூகம் எவ்வாறு அமையும். கடந்த முறை போன்று விட்டுக் கொடுப்புகள் ஏதாவது நடைபெறுமா?

பதில்: கடந்த ஆட்சிக்காலத்தில் எங்களுடைய விட்டுக் கொடுப்பு எங்களுடைய பங்களிப்பின் காரணமாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இந்தத் தடவை எங்களுக்கு இறுதிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் கூட நாங்கள் (கூட்டமைப்பு) ஆட்சியை அமைப்பதற்கான தார்மீக உரிமை எங்களுக்குக் கிடைத்திருக்கிறது.

எனவே இந்தத் தடவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடனும் பேச்சுகளை நடத்தி எங்களுடைய முதலமைச்சர் ஒருவரின் தலைமையில் முஸ்லிம் மக்களோடும் இணைந்த கூட்டு ஆட்சியொன்றை கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்துவோம்.

கேள்வி: வடமாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் எதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பை விட்டு வெளியேறி தனியாகக் களமிறங்குவார் என்ற பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றன. அவ்வாறு அவர் ஒரு முடிவை எடுத்தால் கூட்டமைப்பு அதனை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது?

பதில்: அவர் அவ்வாறு ஒரு முடிவை எடுக்கக் கூடாது என்பது எங்களுடைய திடமான நிலைப்பாடு. அவரை முதலமைச்சர் வேட்பாளராகக் கொண்டு வருவதில் சம்பந்தன் முக்கியமான பங்கு வகித்திருந்தார்.

அதே வேளை எனக்கு அதில் பங்கு இருக்கிறது. அவரை ( விக்னேஸ்வரனை) வற்புறுத்தி முதலமைச்சராகக் கொண்டு வந்திருந்தோம். அன்று அதற்கான ஒரு தேவை இருந்தது. அதற்கிணங்க அவரும் அதனைப் பூர்த்தி செய்திருந்தார்.

அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் இதுவரை திர்மானிக்கவில்லை. அந்தத் திர்மானத்தை நாங்கள் எடுக்கின்ற பொழுது என்னவிதமாகக் கடந்த முறை விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நாங்கள் திர்மானித்த பொழுது கட்சியிலிருந்தவர்கள் ஆரம்பத்தில் அதற்கு இணங்கியிருக்காத போதிலும் கூட ஒற்றுமையைக் கருதி அனைவரும் ஒன்று சேர்ந்து அவரை ஏற்றுக் கொண்டது போன்று இந்தத்தடவையும் விக்னேஸ்வரன் உட்பட அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த முடிவை எடுக்க முன்வர வேண்டும்.

அவ்வாறான தொரு சூழலைத்தான் எங்களுடைய மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த சூழல் தான் இன்று எங்களுடைய மக்களுக்கு தேலையானது என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு. கட்சி தீர்மானிக்கின்ற வேட்பாளரை பங்காளிக்கட்சிகளும் விக்னேஸ்வரனும் ஏற்று ஒத்துழைப்பு தர வேண்டும். அது தான் எங்களுடைய மக்களுக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு.

கேள்வி: முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நிறுத்தப்படலாம் என்ற பேச்சுகள் அடிபடுகின்றனவே?

Mavai_Senathirajahபதில்: முதலமைச்சர் வேட்பாளரை நாங்கள் தீர்மானிக்கவில்லை. மாவை சேனாதிராஜாவினுடைய பெயர் அடிபடுவதற்கான காரணம், கடந்த முறை அவர் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று கூட்டமைப்பின் அனைத்து பங்காளிக் கட்சிகளும் தீர்மானம் எடுத்திருந்த போதிலும் அவர் தானாக முன்வந்து விட்டுக் கொடுத்ததன் காரணமாக விக்னேஸ்வரனை நாங்கள் முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்திருந்தோம்.

விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராவதற்கு சம்மதித்த பொழுது இரண்டு வருடங்கள் மாத்திரம் தான் முதலமைச்சராக இருப்பேன், அதன் பிறகு மாவை சேனாதிராஜா அந்தப் பொறுப்பை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். ஆனால் அவர் பல்வேறு காரணங்களுக்காக ஐந்து வருடங்களும் முதலமைச்சராக இருந்திருக்கிறார்.

கடந்த முறை அனைத்துக் கட்சிகளும் இணைந்து மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க தீர்மானித்திருந்தன் காரணத்தினாலோ என்னவோ அவருடைய பெயர் தற்பொழுது பேசப்பட்டு வருகிறது. ஆனால் யார் வேட்பாளர் என்பதைக் கூட்டமைப்பு இன்னமும் தீர்மானிக்கவில்லை.

vikneswaranகேள்வி: முதலமைச்சர் விக்னேஸ்வரனுடைய ஐந்து வருட கால நிர்வாகத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்: பல சந்தர்ப்பங்களை அந்த நிர்வாகம் தவறவிட்டிருக்கின்றது. இது சுய விமர்சனமாக இருந்தாலும் கூட இது தான் பெரும்பாலானவர்களுடைய கருத்தாக இருக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினுடைய ஆட்சிக்காலத்தில் ஒரு இராணுவ அதிகாரியின் ( ஆளுநர்) கீழ் பல விடயங்களைச் செய்ய முடியாமல் இருந்தது.

அந்த நாட்களில் ஆளுநருடன், ஜனாதிபதியுடனான சந்திப்புகளில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் நானும் கலந்து கொண்டிருக்கிறேன். அன்று பல கட்டுப்பாடுகள் இருந்த வேளையிலும் கூட அவற்றை எதிர் கொள்கின்ற ஆளுமை விக்னேஸ்வரனிடம் இருந்தது. அவற்றை அவர் செய்துமிருந்தார்.

ஆனால் பின்னர் ஆளுநரை மாற்றி மத்தியுடன் இணைந்து செயலாற்றக்கூடிய சூழல் ஏற்பட்ட வேளையில் அதனை மாகாண சபை சரியாகப் பயன்படுத்தியிருக்கவில்லை.

எனவே அடுத்த வரவிருக்கின்ற மாகாண சபை நிர்வாகத்தில் அவ்வாறான தவறுகள் இடம் பெறக் கூடாது என்பதில் நாங்கள் கரிசனையாக இருக்கின்றோம். மாகாண சபைக்கு அதிகாரங்கள் இல்லை என்பது அனைவரும் அறிந்த விடயம். அதன் காரணத்தினால் புதிய அரசியலமைப்புச் சட்டமொன்றை உருவாக்குவதற்கு முயற்சிகளை எடுத்து வருகின்றோம்.

நாங்கள் மாகாண சபைத் தேர்தலில் பங்கெடுத்ததன் நோக்கம் இருக்கிற அதிகாரங்களையாவது வைத்துக் கொண்டு போருக்குப் பின்னரான காலத்தில் எங்களுடைய மக்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் தான்

1987 ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் நிராகரித்து வந்த மாகாண சபை முறையிலேயே 2009க்கு பின்னர் பங்கு பெற வேண்டும் என்று நாங்களும் மக்களும் தீர்மானித்தற்குக் காரணம் போரில் ஏற்பட்ட அமிவுகளிலிருந்து மீண்டுவருவதற்கு இந்த மாகாண சபையைப் பயன்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காகவே.

ஆனால் அந்த மாகாண சபைக்குத் தெரிவானவர்கள் பதவிகளை எடுத்தார்களே தவிர, அதனைச் சரியான முறையில் நிர்வகித்து மக்களுக்கு வழங்கக் கூடிய நிவாரணங்களை சரியாக வழங்கவில்லை என்பது தான் இன்று எல்லோருடைய சிந்தனையாகவும் இருக்கிறது.

எனவே வரவிருக்கின்ற மாகாண சபைக்கு சரியான வழியில் அந்த சபையை நிர்வகிக்கக் கூடியவராக இணைந்து செயற்படக் கூடியவராக ஆற்றலுள்ள ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என்ற சிந்தனையை நாங்கள் கொண்டிருக்கின்றோம்.

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தினக்குரல் ஊடகத்துக்கு அளித்த செவ்வி