இருண்ட யுகத்திற்கு மீண்டும் செல்லமாட்டோம்! – மங்கள கடும் கண்டனம்

நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியுடன் தொடர்புபடுத்தி இரு பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்து அது தொடர்பில் தாம் கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்வதாக ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ள அமைச்சர்,

முன்னைய அரசாங்கத்துடன் தொடர்புடைய பாரிய நிதிமோசடி குறித்து நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்ட செய்திக்கு பங்களிப்பு செய்த இரு பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து நான் அச்சமடைந்துள்ளேன்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கையை எடுக்கவேண்டும் குற்றவாளிகளுக்கு எதிராக எந்தவித தயவு தாட்சண்யமும் இன்றி நடவடிக்கை எடுக்கவேண்டும்;.

அதேவேளை இந்த செய்திக்காக பணியாற்றிய நிருபர்கள் மீது பொது எதிரணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த தனிநபர்கள் அச்சுறுத்தும் நோக்கில் மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் குறித்தும் நான் கலக்கமடைந்துள்ளேன்.

ஊடக அமைச்சர் என்ற அடிப்படையில் பத்திரிகையாளர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்வதற்காக தாக்கப்படுவதை நான் கடுமையாக கண்டிக்கின்றேன்.

இவ்வாறான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவேண்டும்.மேலும் இவ்வாறான தாக்குதல்களிற்கான பொறுப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் ஏற்கவேண்டும்,இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாததை உறுதி செய்யவேண்டும்.

ஊடகசுதந்திரம் மற்றும் முன்னையை அரசாங்கத்தின் வன்முறைப்போக்கிலிருந்து விடுபடல் ஆகியவற்றை முன்னிறுத்தி இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகயிருந்த இருண்ட காலங்களில் பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதையும் தாக்கப்பட்டதையும், அச்சுறுத்தப்பட்டதையும் ஊடக நிலையங்கள் தாக்கப்பட்டதையும் சந்தித்துள்ளது.

உண்மையை பகிரங்கப்படுத்தியதற்காகவும் தகவல்களை வெளியிட்டமைக்காகவும் தனிநபர்கள் தாக்கப்பட்ட இருண்ட யுகத்திற்குள் நாங்கள் மீண்டும் செல்லமாட்டோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.