பெண்களுக்கான பதிவு… ஆண்கள் கட்டாயம் படிக்கவும்

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு ரிசல்ட் வரும் போதெல்லாம் பார்ப்போம்,
ஆண்களை விட பெண்களின் தேர்ச்சி சதவீதம் கூடுதலாய் இருக்கும். டாப் ரேங்கர்ஸ் என்று எடுத்துக் கொண்டாலும் ஆண்களை விட பெண்களே அதிக எண்ணிக்கையில் சாதனைகளை நிகழ்த்தியிருப்பார்கள்.

நினைவு தெரிந்த நாள் முதலாய் இன்று வரை இதே சூழல் தான் தொடர்கிறது. ஆனால் அத்தனை புத்திசாலிகளான பெண்கள் உயர் தரத்திற்கு பிறகு என்ன ஆகிறார்கள்?

தனது திறமையைப் பயன்படுத்தி ஏதேனும் ஒரு துறையில் தொடர்ந்து உழைத்து, வெற்றிகளைப் பதித்து, தானும் மிளிர்ந்து, தேசத்தையும் உயரச் செய்திருக்க வேண்டுமே? என்ன ஆயிற்று? எங்கே போனார்கள்??
அந்த சாதனை ஜீவன்கள் எல்லாம் நாலு சுவருக்குள் அடைக்கப்பட்டு “அம்மா” – என்னும் அடிமைப் பிழைப்புக்கு பயிற்சி எடுக்கத்தொடங்கி விடுகிறார்கள்.
கருமுட்டையும், கருப்பையும் பெண்ணுக்கு மட்டுமே உரியதுதான். எனவே பிள்ளைப் பேறு என்பது அம்மாக்களால் மட்டுமே சாத்தியம்.
ஆனால் அந்தச் சிரமத்தை பரிவுடன் பார்க்கத் தவறுகிறது இந்தச் சமூகம். அக்கொடுமையின் விளைவாக குழந்தை வளர்ப்பும், அது சார்ந்த பொறுப்பும் கூட அம்மாவுக்கு மட்டுமே உரியது என ஒட்டு மொத்த சமூகப் பொறுப்பை, சுமையை அவள் மீது திணிப்பதைக் காணமுடிகிறது.

இப்படி, மனித குலத்தின் அடுத்த தலைமுறையை வளர்த்தெடுப்பதற்காக “அம்மா”  என்னும் அடிமை விலங்கு அவளுக்கு மாட்டப்படுகிறது.
தனக்கான வாழ்வை தன் விருப்ப , வசதி, தேவைப்படி வாழ்வதிலிருந்து முற்றிலுமாய் தடுக்கப்பட்டு, ” பிள்ளை பெற்று வளர்ப்பது”  என்ற ஆணாதிக்க தேவைக்கு பலிகடாவாக சமூக ஆதிக்க தேசத்தில் “அம்மா” என்னும் அடிமை உருவாக்கப்படுகிறாள்.

“அம்மா தெய்வம்” என்றும், அம்மா “தியாகத் திருவுரு” என்றும் அடையாளம் இட்டு, அந்த புனித வட்டத்தை எந்தப்பெண்ணும் தாண்டி விடாத வண்ணம் தாய்ப்பாசம், சமூக ஒழுக்கம் என்ற மூளைச் சலவைகளை நிகழ்த்தி ஒரு மாபெரும் வன்முறை மறைமுகமாய் அவள் மீது திணிக்கப்படுகிறது!
நியாயத்துக்குப் புறம்பாக அம்மாவிடம் இருந்து பறிக்கப்பட்ட அவள் உரிமைகள், ஆசைகள், தேவைகளை அவளுக்கு மீட்டுக்கொடுக்க வேண்டும்.

அவளின் தெய்வ கிரீடச் சுமைகளை இறக்கி வைத்து சக ஜீவனாக்கி கைகோர்த்தபடி பயணம் செய்ய வேண்டும். இந்த புகழ்ச்சியும், சுரண்டலுமான மாய வளையத்திலிருந்து அம்மாவை மீட்டெடுத்து, குடும்பமும், சமூகமும் அவளை சகமனுஷியாய் மதிக்கும் தொடக்கத்தை அமைத்துக் கொடுக்கட்டும்.