சென்னை பெசன்ட் நகரில் பணிப்பெண் மீது சுடு தண்ணீர் ஊற்றி சித்தரவதை செய்து கொலை செய்த தொழிலதிபர் மனைவி உட்பட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெசன்ட் நகர் பெசன்ட் அவென்யூ சாலையில் வசிப்பவர் முருகானந்தம். தொழிலதிபரான இவர் காஞ்சிபுரம் அருகே கேஸ் ஏஜென்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இவரது வீட்டில் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்த இளம்பெண் மகாலட்சுமி என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக பணிப்பெண்ணாக இருந்துவந்துள்ளார்.
இந்நிலையில் பணிப்பெண் மகாலட்சுமி நேற்றிரவு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த சாஸ்திரிநகர் பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது மகாலட்சுமியின் உடலில் ரத்தக்காயங்கள் மற்றும் கொப்பலங்கள் இருந்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதைத் தொடர்ந்து மகாலட்சுமியின் மரணத்தில் சந்தேகமடைந்த பொலிசார், தொழிலதிபர் முருகானந்தனை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
முருகானந்தம் மற்றும் அவரது மனைவி சுஷ்மிதா பிரியா வெளிநாட்டிலிருந்து வாங்கி வந்த நாய் ஒன்று சமீபத்தில் உயிரிழந்துள்ளது.
அதற்கு காரணம் பணிப்பெண் மகாலட்சுமிதான் எனக்கூறி முருகானந்தனின் மனைவி சுஷ்மிதாபிரியா மற்றும் அவரது உறவினர் மித்ராக்ஷி ஆகியோர் மகாலட்சுமியை சமையல் கரண்டியால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதனால் மகாலட்சுமிக்கு உடலில் ரத்தக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. பின்னர் இருவரும் சேர்ந்து சுடு தண்ணீரை கொதிக்க கொதிக்க மகாலட்சுமியின் மீது ஊற்றி சித்ரவதை செய்துள்ளனர்.
இதில் துடிதுடித்துபோன பணிப்பெண் மகாலட்சுமி உடலில் கொப்பலங்கள் ஏற்பட்டு படுகாயமடைந்துள்ளார்.
இதையடுத்து மகாலட்சுமி உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றால் உண்மை தெரிந்துவிடும் எனக்கருதி, தனியார் மருத்துவமனை செவிலியர் ஒருவரை வீட்டிற்கு அழைத்துவந்து சிகிச்சை பார்த்துள்ளனர்.
இதில் மகாலட்சுமி சிகிச்சை பலனின்றி தொழிலதிபர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து தொழிலதிபர் முருகானந்தன், அவரது மனைவி சுஷ்மிதாபிரியா மற்றும் அவரது உறவினர் மித்ராக்ஷி ஆகியோர் மகாலட்சுமி இயற்கையாக இறந்ததாக நாடகமாடியுள்ளது பொலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து தொழிலதிபரின் மனைவி சுஷ்மிதாபிரியா, அவரது உறவினர் மித்ராக்ஷி ஆகிய இருவரை சாஸ்திரிநகர் பொலிசார் கைது செய்துள்ளனர்.
நாய் இறந்ததற்கு காரணமென அப்பாவி பணிப்பெண்ணை சுடு தண்ணீர் ஊற்றி சித்திரவதை செய்து பெண்களே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.