மும்தாஜ் தனது ரகசிய சவாலை வெற்றிகரமாக முடித்துவிட்டதால், தண்ணீர் தொட்டி காவல் காக்கும் விளையாட்டை பிக் பாஸ் இன்று முடித்துவிடுவார் என்று எதிர்பார்த்தோம். ‘போதும்.. முடியல.. அழுதுடுவோம்’ என்கிற அளவில் போட்டியாளர்களும் கூட நொந்து போயிருந்தார்கள். ஆனால் ‘தண்ணியில கண்டத்தை’ இன்னமும் இழுத்தே தீருவேன் என்கிற கொலைவெறியில் இருந்தார், பிக் பாஸ். எனவே கண்டம் நமக்குத்தான்.
பிக் பாஸ் போட்டியாளர்கள் பல் துலக்கிய கையோடு வந்து தூக்கம் விலகாத கண்களோடு தொட்டியின் பக்கத்தில் சோர்வாக அமர்ந்திருந்தார்கள். வழக்கம் போல் துண்டு ஆங்கில வார்த்தைக்காக ‘பக்கெட் பக்கெட்’டாக சண்டை போட்டுக்கொண்டார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க, தலைவி பதவிக்காக கன்ஃபஷன் ரூமை நோக்கி ஆவலாக ஓடிய அந்த துரதிர்ஷ்டமான நிமிடங்களை நினைத்து வைஷ்ணவி பல சமயங்களில் நொந்து போயிருப்பார் என்று தோன்றுகிறது. அந்த அளவிற்கு ஒவ்வொரு விஷயத்தையும் பஞ்சாயத்தாக்கி, அதற்கு வைஷ்ணவியை ஊறுகாயாக்கி பிரித்து மேய்ந்தார்கள். உள்ளுக்குள் ‘முடியல’ மோடில் இருந்தாலும் வெளியே கெத்தாக இருப்பது போன்ற பாவனையுடன் அல்லாடிக்கொண்டிருந்த வைஷ்ணவியைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
வைஷ்ணவியிடம் உள்ள ஒரு பிரச்னை என்னவெனில், எந்தவொரு பஞ்சாயத்திலும் ‘வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு’ என்று கறாராகவும் அழுத்தமாகவும் தீர்ப்பு சொல்லாமல் இரண்டு தரப்புகளையும் சமாதானப்படுத்துவது போல வார்த்தைகளை இறைத்து பிரச்னையை இழுத்துச் செல்கிறார். தலைமைக் குணத்திற்கு எதிரான விஷயம் இது.
‘ஒவ்வொருவரிடமும் மாற்றி மாற்றி பேசுகிறார்’ என்று ஏற்கெனவே இவர் மீது கொலைவெறியில் இருக்கும் போட்டியாளர்கள், இவர் சொல்வதைக் கேட்காமல் தாங்களே நாட்டாமையாகி ஆளுக்கு ஆள் பேச ஆரம்பிக்கிறார்கள்.
18-ம் நாள் காலை. ‘மதுர குலுங்க.. குலுங்க..’ என்று உற்சாகமாக ஆட வைக்கும் பாடல் ஒலிபரப்பப்பட்டாலும் நள்ளிரவைத் தாண்டியும் விழித்திருந்த காரணத்தினால் மக்கள் சோர்வாக இருந்தார்கள். ரித்விகா மட்டும் உற்சாகத்தோடு நடனம் ஆடினார். நித்யாவும் பொன்ஸூம் பெயருக்கு ஆடினார்கள்.
தண்ணீர் தொட்டி டாஸ்க்கிற்காக காலையிலேயே சைரனை ஒலிப்பி ஏழரையை ஆரம்பித்தார், பிக் பாஸ். ‘டேய்.. உனக்கு மனச்சாட்சியே இல்லையாடா’ என்கிற அலுப்போடு ஒவ்வொருவராக கிளம்பினார்கள். “என்னை இவன் சமையற்காரனா நினைச்சாகூட பிரச்னையில்லை. பொண்டாட்டி மாதிரி ட்ரீட் பண்றான். நடுராத்திரி வந்து காஃபியைப் போடு,. ஆம்லேட்டைப் போடு”-ன்னு டார்ச்சர் பண்றான்” என்று மஹத்தைப் பற்றி கேமராவிடம் ஜாலியாக புகார் சொல்லிக்கொண்டிருந்தார், டேனி.
தூக்கம் சொக்கிய கண்களோடு தொட்டியின் பக்கத்தில் அமர்ந்திருந்த, மஹத், ரணகளத்திலும் கொடூரமாக ஜோக் அடிக்கத் தவறவில்லை. ‘டேங்க்கை தலைகீழா கவிழ்த்தாதான் 2000 பாயிண்ட்டிற்கு வரும் போல” என்று ரித்விகாவிடம் சொன்னார். இதைப் புரிந்துகொள்ள விரும்பாத ரித்விகா, “ஐஸ்வர்யா சொன்னது போல, பிக் பாஸோட கடைசி நாள் டாஸ்க் இதுதான்ன்னா ஜெயிக்கறதுக்காக உயிரைக் கொடுத்து முயற்சி பண்ணுவல்ல. அப்படியே ஒவ்வொரு டாஸ்க்கையும் பண்ணு” என்று கண்டிப்பான குரலில் உபதேசித்தார்.
உடல்நலம் குன்றியிருந்த மும்தாஜ் தூங்கியதாலும், பாலாஜி ஆங்கிலம் கலந்து பேசியதாலும் பரஸ்பரம் ஒரு பக்கெட் தண்ணீரை விவாதங்களுக்குப் பிறகு பரிமாறிக்கொண்டார்கள். (அதுக்கு பருத்தி மூட்டை குடோன்லே இருந்துருக்கலாம் மொமன்ட்!)
‘இங்க நாம ரெண்டு டீமா பிரிஞ்சி சண்டை போட்டுக்கறோம்ல… இதே மாதிரி குடும்பத்துலேயும் இருந்தா அது நடக்குமா?” என்று தத்துவம் பேசிக்கொண்டிருந்தார், அனந்த். மனிதர், காலையில் தொடும் டூத்பேஸ்ட் முதல் இரவு வைக்கும் கொசுவர்த்தி சுருள் வரை எல்லாவற்றையும் தத்துவமாகவே பார்க்கிறார். எங்க போயி முடியப் போகுதோ!
ஐஸ்வர்யாவிற்கு தீவிரமானதொரு உபதேசத்தை தந்துகொண்டிருந்தார், மும்தாஜ். அவசியமான உபதேசம்தான். “பெண்கள் படுக்கைல விளையாட்டுக்குகூட ஆண்கள் வந்து பக்கத்துல படுக்க அனுமதிக்காதே. எனக்கு அசெளகரியமா இருக்கு. ஷாரிக் நல்ல பையன்தான். இருந்தாலும் பொண்ணுங்கதான் ஜாக்கிரதையா இருக்கணும். இதை முடிச்சிட்டு வெளியுலகத்தையும் நீ பார்க்க வேண்டியிருக்கு. இன்னொரு முறை இது நடந்தா.. நான் ஷாரிக்கை கத்திடுவேன்” என்று அவர் சொல்லிய உபதேசத்தை கவனமாக கேட்ட ஐஸ்வர்யா..”பிராமிஸா நீங்க சொல்றதைக் கேட்பேன். நான் யாருக்கும் பொதுவா பிராமிஸ் பண்ண மாட்டேன்’ என்று சொல்லிவிட்டு, சில நிமிடங்களிலேயே ஷாரிக்கை அழைத்து விஷயத்தைச் சொல்லி.. “மும்தாஜ்.. இப்படில்லாம் சொல்றாங்க, எதுவுமே ஆகலையே, அப்புறம் ஏன்?” என்று சலித்துக்கொண்டார். இது வரைக்கும் ஒடைச்சதெல்லாம் பத்தாதா?!
‘இன்னாவாம்?” என்று இது குறித்து ஷாரிக்கை விசாரித்த மஹத்.. ‘நீ எதுக்கும் பயப்படாத.. பயந்தாதான் நம்மள மிதிப்பாங்க.” என்று அவருக்கு தைரியம் தந்தார். (பின்னே.. இவரும் அதே கேட்டகிரிதானே? பாசம் இருக்காதா?”).
கிச்சன் ஏரியாவில் மறுபடியும் பிரச்னை. பாத்திரம் சுத்தம் செய்யும் அணி சரியாக இயங்கவில்லை போல. அதனால் சமையல் அணியில் இருந்த பாலாஜியே எரிச்சலுடன் பாத்திரங்களை சுத்தம் செய்து வைத்திருந்தார். ‘அவசரத்திற்கு தேவைப்படுவதை மட்டும் சுத்தம் செய்ங்க, மத்ததை விட்ருங்க. அவங்களுக்கு பாயிண்ட்ஸ் போயிடும்ல’ என்று நாட்டாமையும் மும்தாஜூம் சொன்னதைக் கேட்டு எரிச்சலான பாலாஜி, கழுவிய பாத்திரங்களை மறுபடியும் சிங்க்கில் போட்டு விட்டுச் சென்றார். ‘ரொம்ப matured’ என்று சலித்துக்கொண்டார் மும்தாஜ்.
தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மஹத் படுத்திருக்க, நாய் குலைத்தது. எதிரணியினர் உற்சாகமாக பக்கெட்டை தூக்கினார்கள். “பிக்பாஸ் பெர்மிஷன் தர்றாம ஏன் அவனைப் படுக்க அனுமதிச்சீங்க?” என்று வைஷ்ணவியை பாலாஜி எகிறினார். “மஹத் தூங்கினதுக்கு தண்ணி எடுத்துக்கலாமா?” என்ற கேள்வியுடன் அசந்தர்ப்பமாக நித்யா உள்ளே நுழைய, மஹத் அவர் மீது எரிந்து விழுந்தார். உணவு, தூக்கம் போன்ற அடிப்படை விஷயங்களை இழந்தால் மனிதர்கள் எளிதில் மிருகங்கள் ஆகிவிடுகிறார்கள். ஒவ்வொருவர் பக்கமும் பரிந்து பேசியும் பேச முடியாமலும் சோர்ந்து போனார், வைஷ்ணவி.
ஒரு கட்டத்தில் சைரன் அடிக்க, நீர்த் தொட்டியை அடைத்துக்கொண்டிருந்த மும்தாஜ் உற்சாகத்துடன் கூவி கைகளை விலக்கிக்கொள்ள தண்ணீரும் அதே உற்சாகத்துடன் வெளியே பாய்ந்தது. மற்றவர்கள் திகைத்துப் போக, இவருடைய அணியினர் நொந்து போயினர். ‘டாஸ்க் முடிஞ்சது –ன்னு நெனச்சேன்” என்றார் மும்தாஜ். உண்மையிலேயே அப்படி நினைத்து விட்டாரா அல்லது இன்னமும் ‘டபுள் ஏஜெண்ட்’ மோடில் இருக்கிறாரா என்று தெரியவில்லை.
‘தண்ணியில கண்டத்தை’ இன்னமும் இழுக்க முடிவு செய்தார், பிக்பாஸ். இரண்டு அணிகளுக்கும் மறுபடியும் ஒரு போட்டி. ‘விடாது நிரப்பு’ என்பது இதன் பெயராம். ‘விடாது கறுப்பு’ என்று வைத்திருக்கலாம். ஒவ்வொரு அணியிலிருந்தும் மூன்று நபர்கள் வர வேண்டும். கார்டன் ஏரியாவில் மூன்று பைப்கள் இருக்கும். அதன் உள்ளே பந்துகளும் இருக்கும். நீச்சல் குளத்தில் இருந்து குவளையில் தண்ணீர் எடுத்து பைப்பில் ஊற்றி மிதந்து வரும் பந்துகளைச் சேகரிக்க வேண்டும். எவர் முதலில் அனைத்துப் பந்துகளையும் சேகரிக்கிறார்களோ.. அவரே வெற்றியாளர்.
ஆரவாரக் கூச்சல்களுடன் நடந்த இந்தப் போட்டியில் நித்யா அணி வெற்றி பெற்று மூன்று பக்கெட் நீரைப் பரிசாகப் பெற்றது. அவர்களுடைய தொட்டி ஏறத்தாழ நிரம்பி விட்டது. தண்ணீர் தொட்டியை காவல் காக்கும் விளையாட்டு மறுபடியும் துவங்கியது. எதிரணியில் இருந்த சென்றாயனை, விளையாட்டாக வம்பிழுத்தார் மும்தாஜ். அதற்கு சென்றாயன் அளித்த எதிர்வினையை மற்றவர்கள் கிண்டலடித்துகொண்டிருந்தனர்.
‘மொழிப்போர்’ மறுபடியும் ஆரம்பித்தது. தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த மஹத்தைப் பார்த்து ..’ஐய்யய்யோ.. தேங்காய் பொறுக்கி வர்றானே.. சும்மா இருக்க மாட்டானே.. வாயைப் பிடுங்குவானே” என்று பாலாஜி பயந்ததைப் போலவே ஆயிற்று. ‘என்னம்மா கண்ணு செளக்கியமா?’ என்று இவர்கள் மாறி மாறிப் பாடியதில் ஒரு கட்டத்தில் ‘ஹேப்பி பர்த்டே டே’ என்று பாலாஜி சொல்லிவிட பஞ்சாயத்து களைகட்டியது. ‘வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா?” என்று பாலாஜியைக் கண்டித்த நித்யா, தான் ஆங்கிலத்தில் பேசவில்லை என்று பாலாஜி மறுக்க முயலும்போது ‘உண்மைன்னா.. உண்மை.. “ என்று சத்தியத்தின் பக்கம் நின்று பிரமிக்க வைத்தார். “அப்படின்னா.. மஹத் இந்தில பேசினதுக்கு நாங்களும் ஒரு பக்கெட் எடுத்துக்குவோம்” என்று இரண்டு மணி நேரத்திற்கு முன்பு நடந்த விஷயத்தை இவர்கள் இழுக்க.. ‘அதெல்லாம் நான் விடமாட்டேன்’ என்று பிடிவாதம் பிடித்தார், மஹத் ‘கூப்பிட்றா நாட்டாமைய’ என்று வைஷ்ணவிக்கு தாக்கீது போக.. அவரோ ‘விட்டுடுங்கப்பா… முடியல’ என்பது போல் சோர்வுடன் படுத்திருந்தார்.
‘இனிமே நாங்க டீ கப்ஸ், கிளாஸ் எல்லாம் வாஷ் பண்ண மாட்டோம். அவங்க அவங்களே. வாஷ் பண்ணிக்குங்க’ என்று அதிரடியான ஓர் அறிவிப்பை அந்த அணியின் தலைவியான மும்தாஜ் அறிவிக்க, எப்போதும் கூல் ஆக இருக்கும் டேனியே டென்ஷன் ஆகிவிட்டார். ‘பாத்திரம் சுத்தம் செய்யும் அணியில் எவருமே இங்கு இருப்பதில்லை. நாங்கள்தான் அதையும் சேர்த்து செய்ய வேண்டியிருக்கிறது’ என்பது அவரின் புகார். “இதை முறையான தொனியில் சொல்லியிருக்கலாமே” என்று மும்தாஜ் ஆட்சேபிக்க.. மறுபடியும் ‘கூப்பிட்றா நாட்டாமைய’.
இரண்டு பக்கமும் பேசி பேசி வைஷ்ணவி சோர்ந்து போனார். ‘சம்பந்தப்பட்ட அணியில் இருப்பவர்களின் வேலையை மற்றவர்கள் செய்யக்கூடாது’ புத்தகத்தில் இருக்கும் விதிகளை தக்க சமயத்தில் சுட்டிக் காட்டினார் வல்லுநர் ஜனனி.
இத்தனை கலாட்டா நடந்துகொண்டிருந்தபோது, ஓரமாக அமர்ந்து மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொன்னம்பலத்தைக் கூட சகித்துக் கொள்ளலாம். ஆனால் யாஷிகாவைக் கட்டியணைத்து ரொமான்ஸ் செய்து கொண்டிருந்த மஹத்தை மட்டும் மன்னிக்கவே முடியாது. (இரக்கமில்லையா உனக்கு!) ரோம் முழுக்க பற்றி எரிந்துகொண்டிருந்தபோது, பிடில் வாசித்துக்கொண்டு இருந்தாராம் ரோம் மன்னர் நீரோ. பிக்பாஸ் பற்றி எரிந்தாலும், ரொமான்ஸில் கண்ணும் கருத்துமாக இருக்கும் மஹத், ஒரு ‘ ரொமான்டிக் நீரோ ‘ .
‘டேனி இதைச் சொல்லும் விதத்தில் சொல்லியிருக்கலாம். வேலைக்காரங்க கிட்ட பேசறா மாதிரி பேசறாரு” என்று வைஷ்ணவியிடம் பிறகு பேசிக்கொண்டிருந்தார், மும்தாஜ். (இனிமேல் தலைவியாக ஆசைப்படவே மாட்டார் வைஷ்ணவி).
‘டீ கப்ஸ்ல எல்லாம் ‘கப்’ அடிக்குது பாருங்க’ என்ற புகாருடன் வந்தார், டேனி. “ஒண்ணுமில்லையே.. நல்லா இருக்கே” என்று சமாளித்தார் அதைச் சுத்தம் செய்த பொன்னம்பலம். “உன் வயது வேற.. என் வயசு வேற.. உன் பிரெண்ட்ஸ் கிட்ட எப்படி வேணா பேசிக்க.. என் கிட்ட வேண்டாம்’ என்று டேனியை பிறகு நட்பாக எச்சரித்தார், பொன்னம்பலம்.
“மச்சான். உனக்கும் வேற வேலை தெரியாது.. எனக்கும் தெரியாது. வந்த வேலையைப் பார்ப்போம். ஜெயிக்க டிரை பண்ணுவோம்” என்று டேனிக்கு உபதேசித்துக் கொண்டிருந்தார், சென்றாயன்.
‘தண்ணியல கண்டம்’ போட்டியின் இறுதிப்பாகம். ‘ஆடாமல் அசையாமல்’ என்பது இதன் பெயர். ‘மாங்குயிலே பூங்குயிலே’ என்று வைத்திருக்கலாம்.
தண்ணீர் நிரப்பப்பட்ட பானைகளை தலை மீது வைத்து, கைகளால் பிடிக்காமல், ஏற்ற இறக்கங்களுடன் சிக்கலாக அமைக்கப்பட்டிருக்கும் மரப்பலகை பாதையின் மீது நடந்து வர வேண்டும். கிராமப்புறங்களில் தாய்மார்களும் சிறுமிகளும் நடைமுறையில் எளிதாக செய்யும் விஷயம்தான். ஆனால் நமக்கு அது சாகசமான செயல்.
மஹத், சென்றாயன் ஆகியோர் சுமந்த பானைகள் சில விநாடிகளிலேயே விழுந்து உடைய ‘பானைக்கே பட்ஜெட் போயிடும் போலயே’ என்று திகில் அடைந்த பிக்பாஸ், போட்டியின் விதியை சற்று மாற்றினார். அதன்படி வெறும் பானையைச் சுமந்து சென்றால் போதும். (இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்).