சிறிலங்கா அரசாங்கத்தின் சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விஜயகலா மகேஷ்வரன் விலகியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடல்களை அடுத்து தனது பதவி விலகல் கடிதத்தை இன்றைய (05.07.2018) தினம் மாலை விஜயகலா மகேஷ்வரன் ஒப்படைத்திருக்கின்றார்.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் தீவிரமடைந்துள்ள போதைப் பொருள் பாவணை மற்றும் சிறுமிகள் உள்ளிட்ட பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பில் கவலைவெளியிட்ட சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் இந்த நிலை மாற வேண்டுமானால் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
யூலை இரண்டாம் திகதி யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஆற்றிய இந்த உரைக்கு எதிராக தென்னிலங்கை அரசியல்வாதிகள் கடும் கண்டனத்தை வெளியிட்டுவருவதுடன், விஜயகலாவை கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தக் கருத்தை மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் மாத்திரமன்றி விஜயகலாவின் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினரும், அவரது அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மஹிந்த அணியினர் விஜயகலாவின் கூற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யூலை 3 ஆம் திகதியான நேற்று முன்தினம் பாராளுமன்ற அமர்வுகளையும் முடக்கியிருந்தது.
இதனையடுத்து சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விஜயகலாவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில் அவர் இன்றைய தினம் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்திருக்கின்றார்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் யூலை இரண்டாம் திகதி தேசிய நடமாடும் சேவையின் போது உரையாற்றிய போது கைதட்டிய ஆரவாரம் செய்த அரச உத்தியோகத்தர்களுக்கு எதிரான விசாரணையொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம் அறிவித்துள்ளார்.