புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடி அருகே உள்ளது அம்மா பட்டிணம். இங்கு வசித்து வரும், பழனி – லட்சுமி தம்பதியரின், மகளுக்கு 12 வயது. இவர், ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இந்தக் குடும்பத்தினருக்கு மிதமிஞ்சிய கடவுள் பக்தி உண்டு. சொல்லப் போனால், இந்தக் கிராமத்தினரே கடவுள் பக்தியில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர், அந்தச் சிறுமிக்கு சாதகம் பார்த்துள்ளனர். அப்போது, அந்த சோதிடர், சிறுமிக்கு 12 வயதாகும் போது, பக்தியின் காரணமாக, கற்சிலையாகி விடுவார் எனத் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய பெற்றோர் மற்றும் கிராமத்தினர், சமீபத்தில் சிறுமியின் பிறந்த நாளைக் கோலாகலமாக கொண்டாடினர். பின்னர், அவரை அலங்கரித்து, மணமேல்குடி வடக்கூர் அம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்துள்ளனர்.
கிராமத்தினரும் அங்கு கூடிவிட்டனர். சிறுமியைப் பார்த்த அந்த ஊர் பெண்கள், சாமி வந்தும் ஆடினார்கள். நீண்ட நேரம் காத்திருந்தும், சிறுமியின் உடலில் எந்த மாற்றமும் நிகழவில்லை. பெண்கள் சிலர் அந்தப் பெண்ணைச் சுற்றி வந்து, அருள் வர முயற்சித்தனர். அந்த மாறுதலும் நிகழவில்லை.
இதனைக் கண்ட கோயில் பூசாரி, பெற்றோரை எச்சரித்ததால், அனைவரும் கலைந்து சென்றனர். இந்தச் சம்பவம் பலரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
பள்ளிச் சிறுமி கற்சிலையாகப் போவதாக உலா வந்த தகவல், பரபரப்பை ஏற்படுத்தினாலும், வதந்தியாக மட்டுமே, உருமாறி அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது.