மங்களூரில் தனது சொந்தக் குழந்தையுடன் ஆட்டோவில் கடைக்குச் சென்றவரை, ‘குழந்தையைக் கடத்திச் செல்கிறார்’ என்று பரவிய வதந்தியால் பொதுமக்கள் சேர்ந்து கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கர்நாடக மாநிலம் மங்களூரில் கலீத் என்பவர் தனது குழந்தையுடன் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தார். அப்போது குழந்தை எதையோ கேட்டு அடம்பிடிக்க கலீத் குழந்தையைத் திட்டி, அடித்திருக்கிறார். இதனால் குழந்தை அடம்பிடித்து அழுதிருக்கிறது. அப்போது இருசக்கரத்தில் சென்றவர்கள் ஆட்டோவை மறித்து நிறுத்தியிருக்கிறார்கள். அத்தோடு இல்லாமல் கலீத்தை ஆட்டோவை விட்டுக் கீழிறக்கி என்ன ஏதுவென்று கேட்காமல் கண்மூடித்தமாகத் அடித்து உதைத்துத் தாக்கியிருக்கிறார்கள்.
கலீத், “இது என் குழந்தை. அடிக்காதீர்கள்” என்று கூறிக் கெஞ்சியிருக்கிறார். ஆனால், அவர் கூறியதைப் பொருட்படுத்தாத பொதுமக்கள் தொடர்ந்து தாக்க, தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று மீட்ட அவலம் அரங்கேறியிருக்கிறது.
கலீத்தைத் தாக்கிய அனைவரையும் காவல்துறையினர் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். குழந்தையுடன் சென்ற தந்தையையே பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.