சென்னையில் மாணவியைக் கொல்ல முயன்ற ஜிம் பயிற்சியாளர் கைது

சென்னையில் காதல் தகராறில் பெண்ணை கொல்ல முயன்ற ஜிம் பயிற்சியாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் கீதா (17). இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் பிஏ முதலாமாண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் கீதா நேற்று வகுப்பறையில் இருந்தபோது, அவரது வகுப்பறைக்குள் புகுந்த வாலிபர் ஒருவர், அவரை கத்தியால் குத்த முயன்றுள்ளார். உடனே அருகிலிருந்த மாணவர்கள் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்துக் கத்தியைப் பிடுங்கியுள்ளனர். விடாத அந்த இளைஞர் உன்ன கொன்னே தீருவன் டீ என கூறியபடியே அந்த மாணவர்களிடம் மல்லுக்கட்டிகொண்டிருந்தார்.

இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அந்த இளைஞனை கைது செய்து விசாரித்ததில், தனது பெயர் மதன் (22) என்றும், அயனாவரம், ரங்கநாதன் தெருவைச் சேர்ந்தவர் என்றும் ஜிம் பயிற்சியாளர் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தானும் கீதாவும் நான்கு ஆண்டுகளாக காதலித்ததாகவும், கல்லூரியில் சேர்ந்ததிலிருந்து தன்னை சந்திப்பதையே அறவே கீதா தவிர்த்து வந்ததாகவும் கூறினார். எவ்வளவு முறை கெஞ்சியும் கீதா என்னை கண்டுகொள்ளவில்லை. இதனால் அவரைக் கொல்ல திட்டமிட்டதாக தெரிவித்தார். மதனின் எதிர்காலம் கருதி எழுதி வாங்கிய பிறகு பொலிஸார் அவரை எச்சரித்து அனுப்பினர்.