பிக்பாஸ்.. இவ்ளோ பாசக்காரங்களை டார்ச்சர் பண்றியே! (பிக்பாஸ் சீசன் 2 : 19-ம் நாள் -வீடியோ)

நீருக்கும் பிக் பாஸ் வீட்டிற்குமான பந்தம் இன்னமும் விடாது போலிருக்கிறது. நேற்று தண்ணீரை வைத்து விளையாடிய பிக்பாஸ் இன்று போட்டியாளர்களின் கண்ணீரை வைத்து விளையாடினார்.

‘எந்தவொரு நபரின் பிரிவினால் தாங்கள் அதிகம் துயருகிறோம்?’ என்பதை ஒவ்வொரு போட்டியாளரும் சொல்ல வேண்டும். இந்தப் பகுதியின் மூலம் போட்டியாளர்களின் இன்னொரு முகங்களை அறிய முடிந்தது. ‘பாசக்காரப் பயலுவளா’ இருக்கிறார்கள். குறிப்பாக டேனி, ரித்விகா போன்றவர்களின் பேச்சுக்கள் உருக்கமாக இருந்தன.

இதன் மூலம் போட்டியாளர்கள் ஒருவரையொருவர் அதிகம் புரிந்து கொள்ளவும் ஒருவரையொருவர் ஆறுதலாக அணைத்துக் கொள்ளவும் இந்தப் பகுதி நிச்சயம் உபயோகமாக இருக்கும்.

காலையில் சென்றாயனிடம் ஆக்ரோஷமாக சண்டை போட்ட மஹத், இந்தப் பகுதி முடிந்ததும் ‘மன்னிச்சிர்ரா சென்றயான்’ என்று தானாக முன்வந்து சொன்னது ஒரு நல்ல உதாரணம். ஆத்மார்த்தமான இரண்டு துளி கண்ணீரால் பல வருட மனக்கசப்பை ஒரு நொடியில் கழுவி விட முடியும் என்பதை நிரூபித்தது இந்தப் பகுதி.

காலையில் சண்டை, மாலையில் நெகிழ்ச்சி என்று சமநிலையுடன் காணப்பட்டது பிக்பாஸ் வீடு.

‘சுப்பம்மா.. சுப்பம்மா..’ என்கிற குத்துப்பாடலுடன் பிக்பாஸ் வீடு எழுந்தது. (இதுவே எங்கள் வீடாக இருந்தால், ‘கருமம் பிடிச்சவனே…காலைல.. ஏதாவது நல்ல சாமிப்பாட்டா போடக்கூடாதா?’ என்று என் அம்மா திட்டுவார்).

இந்தப் பாடலுக்கு மும்தாஜூம் நித்யாவும் ஏற்கெனவே நடனமாடியிருப்பதாலோ என்னமோ, நித்யா உற்சாகமாக ஆடினார். (இப்பல்லாம் ‘குட்மார்னிங் போஷிகா’ சொல்ல மறந்துடறீங்க மேடம்).

முதல் சீஸனைப் போல் இந்த சீஸனில் ‘ஹோம் சிக்னஸ்’ துயரோடு காமிராவைப் பார்த்து அழுகிறவர்கள் குறைவு. இந்த வகையில் வையாபுரியை நினைவுப்படுத்தி அந்தக் குறையைப் போக்கினார் சென்றாயன். தன் மனைவி ‘கயல்விழி’ மற்றும் பெற்றோரை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.

தண்ணியில கண்டம்’ போட்டியில் அத்தனை கஷ்டப்பட்டதற்கு ‘சிறப்புச் சலுகை’ வழங்கப்படும் என்று பிக்பாஸ் ஏற்கெனவே அறிவித்திருந்தார். ‘என்னடா அது சிறப்புச்சலுகை’ என்பதற்கு விடை இன்று கிடைத்தது.

நாலு பாக்கெட் நூடுல்ஸாம்.. அடச்சை.. அதை ஒரு பூட்டப்பட் பெட்டியில் வைத்து தருவாராம்.. நாலு பாக்கெட் மட்டும் எடுத்துக் கொண்டு மறுபடியும் சாவியை பிக்பாஸிடமே தந்து விட வேண்டுமாம்.

‘சீரியல் மாமியார்களை’ விட டெரராக இருக்கிறார் பிக்பாஸ். இதற்கான அறிவிப்பை படித்த மஹத் ‘கேப்டனை அதிகம் பேசாமல் ஓரமாக உட்காரச் சொல்லவும்’ என்று எக்ஸ்ட்ரா பிட்டை அதில் இணைத்தது ஜாலியான நகைச்சுவை.

3_08390  பிக்பாஸ்.. இவ்ளோ பாசக்காரங்களை டார்ச்சர் பண்றியே!  (பிக்பாஸ் சீசன் 2 : 19-ம் நாள் -வீடியோ) 3 08390

சமையல் உதவியில் ஐஸ்வர்யா சரியாக செயல்படாதது குறித்து மறுபடியும் ஒரு பஞ்சாயத்து கிளம்பியது. ‘காய்கறி வெட்டச் சொன்னால் பாதியில் கிளம்பி விட்டாராம்’ நாட்டாமையின் பணி ஓவர்டைமையும் மீறி சென்று கொண்டிருப்பதால் ‘நீங்களே பார்த்துக்கங்க’ என்று கழன்று விட்டார்.ஐஸ்வர்யாவின் சண்டித்தனத்தினால் பாலாஜி அதிகம் எரிச்சலாகி விட்டார்.

‘நான் உன்னை என்ன வாங்கிட்டு வரச்சொன்னேன்’ என்கிற கவுண்டமணி மாதிரி ‘ஐஸூம்மா.. நான் உன்கிட்ட என்ன சொன்னேன்..’ என்று காய்கறி வெட்டும் பிரச்னையை நிதானமாக விளக்கினார் டேனி.

‘என்னை குழந்தை மாதிரி டிரீட் பண்ணாதீங்க’ என்று சலம்பல் செய்யும் ஐஸ்வர்யா குழந்தை மாதிரிதான் பிஹேவ் செய்தார். திருவிழாவில் தன் பெற்றோரை தொலைத்து விட்டு அழுது கொண்டு நிற்கும் சிறுமியை விசாரித்தால், கடும் அழுகையுடன் திக்கித்திணறி விவரங்களைச் சொல்வாள் அல்லவா? ‘மழலைத் தமிழில்’ பிரேக் பிரேக் அடித்து ஐஸ்வர்யா தன் தரப்பு விளக்கத்தைச் சொன்னதும் அப்படித்தான் இருந்தது. எதிராளியால் பதிலுக்கு எதுவும் பேசவே முடியாது. புரியாது என்பது பாதி காரணம்.

தொடர்ந்து தொடரை வீடியோவில் பாருங்கள்