ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகேயுள்ள தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த 50 பேர் நேற்று ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.
ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் அவர்கள் அளித்த மனு விவரம்:
எங்கள் பகுதியில் கடந்த 22 ஆண்டுகளாக இயங்கிய ஸ்டெர்லைட் ஆலை தற்போது மூடப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை சார்பில், எங்கள் பகுதியில் பல்வேறு சமுதாய பணிகள் செய்யப்பட்டன. தற்போது, ஆலை மூடப்பட்டுள்ளதால் எங்கள் கிராம மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாரி உரிமையாளர்கள்
இதேபோல், லாரி உரிமையாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர், ஆட்சியரிடம் அளித்த மனுவின் விவரம்:
ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 22 ஆண்டுகளாக லாரி தொழில் செய்து வந்தோம். தற்போது ஆலை மூடப்பட்டுள்ளதால் எங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். வங்கிகளில் வாங்கிய கடன் தவணையை செலுத்த முடியவில்லை. லாரிகள் மற்றும் சொத்துகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.