கதறக் கதற எரிச்சுக் கொன்ற பாவி அவன்! சிறுமி ஹாசினியின் தந்தை உருக்கம்

சென்னையில் கடந்த 2017 பிப்ரவரி மாதம் சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில், ஐடி பொறியாளர் தஷ்வந்த் என்பவர் கைதுசெய்யப்பட்டார். சிறுமி ஹாசினி கொலை வழக்கில், செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தஷ்வந்துக்கு தூக்குத்தண்டனை அளித்து கடந்த பிப்ரவரி 19-ம் திகதி தீர்ப்பு வழங்கியது.

மொத்தம் 31 வருடங்கள் கடுங்காவல் தண்டனையும், குழந்தைகள் பாலியல் தடுப்புச் சட்டத்தின்கீழ் 15 வருட சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது.

இந்த மரண தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீடு வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று தூக்கு தண்டனை வழங்கியுள்ளது.

இதுகுறித்து சிறுமியின் தந்தை பாபு கூறியதாவது, தஷ்வந்தை என்னைக்குத் தூக்கில் போடறாங்களோ, அன்னைக்குத்தான் எங்க கவலை முழுசா தீரும். ஆசை ஆசையா வளர்த்த பொண்ணை, கதறக் கதற எரிச்சுக் கொன்ற பாவி சார் அவன். அந்த அதிர்ச்சியிலிருந்து எங்களால் எப்பவும் மீளவே முடியாது.

எனது மனைவியின் பிரார்த்தனை வீண் போகலை. தீர்ப்பைக் கேட்டதும் கண்ணீர்விட்டு அழுதாங்க .

இனியும் நாள் கடத்தாமல் தஷ்வந்த்தைத் தூக்கில் போடணும். அதுதான் இங்குள்ள குழந்தைகளுக்குச் சுதந்திரத்தையும் எங்களை மாதிரியான பெற்றோருக்குத் தைரியத்தையும் கொடுக்கும். சட்டத்தின் மேலே நம்பிக்கையை உண்டாக்கும் என்று கூறியுள்ளார்.