தாய்லாந்து குகையில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மரணமடைந்த நீர்மூழ்கி வீரரின் மனைவி, தனது கணவரின் இறப்பு குறித்து உருக்கமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
தாய்லாந்து நாட்டு குகையில் சிக்கியிருந்த சிறுவர்களை மீட்கும் பணியில், நீர்மூழ்கி வீரரான சமன் குனான் ஈடுபட்டிருந்தார். குகையின் நுழைவு வாயிலில் இருந்து 4 கிலோ மீற்றர் தொலைவில் சிறுவர்கள் இருப்பது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து, நீர்மூழ்கி வீரர்களின் உதவியுடன் அவர்களுக்கு தேவையான உணவுகள், மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், குகைக்குள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருந்ததால், சிறுவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மூலமாக அனுப்பப்பட்டது.
இந்த பணியை நீர்மூழ்கி வீரர்கள் மேற்கொண்டனர். அப்போது சிலிண்டர்களை கொடுத்துவிட்டு திரும்பும் வழியில், போதைய ஆக்ஸிஜன் கிடைக்காததால் சமன் குனான் மரணமடைந்தார். ஆனால், அவருடன் சென்ற வீரர்களுக்கு வெளியில் வந்தபோது தான் இந்த விடயம் தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து, குனானின் உடல் மீட்கப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அதன் பின்னர், குகைக்குள் சிக்கிய 13 பேரும் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், மரணமடைந்த சமனின் மனைவி தனது கணவர் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை, கடந்த 7ஆம் திகதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், ‘நீங்கள் எப்போதும் என்னுடன் தான் இருக்கிறீர்கள். உங்களைப் போன்று யாரும் இருக்க முடியாது. நீங்கள் என்னுடன் இல்லாத நேரத்தில் நான் சுவாசிக்க விரும்பவில்லை. ஏனென்றால், நாம் ஒரே மூச்சை சுவாசிப்பதாக இருவரும் சத்தியம் செய்துள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, நேற்று அவர் பதிவிட்டதில் ‘நான் உன்னை இழந்து தவிக்கிறேன். நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். நீதான் எனக்கு எல்லாம்’ என தெரிவித்துள்ளார்.