ஷாப்பிங் செல்லும் போது, பட்ஜெட், சைஸ், கலர் இதில் மட்டுமே பெரும்பாலான பெண்கள் கவனம் செலுத்துகிறார்கள். எவ்வளவு தான் பார்த்து பார்த்து வாங்கினாலும் ஏதாவது ஒரு விஷயத்தில் கோட்டை விட்டுவிடுவது உண்டு.
அப்படி இல்லாமல் ஆடையைத் தேர்வு செய்யும்போது, என்னவெல்லாம் கவனிக்க வேண்டியது அவசியம் என்று மனதுக்குள் பட்டியல் போட்டுக் கொண்டு, ஷாப்பிங் செல்லத் தயாராகுங்கள்.
நல்ல குவாலிட்டியில் வாங்கும் ஆடைகள், உங்கள் உடல் வாகுக்குப் பொருத்தமாக இருக்கிறதா என்று அணிந்து பார்த்துக் கொள்வது நல்லது. அதிலும் இடுப்பு, மார்பு மற்றும் தோள்பட்டையின் அளவுகளைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆடை பொருத்தமாக இருந்தால் அப்படியே தூக்கிக் கொண்டு வந்துவிடாமல் அந்த துணியின் வகை மற்றும் ரகத்தை ஆராய்ந்து பார்த்துவிட வேண்டும்.
காட்டன், சில்க், கம்பளி ஆடைகள் மற்ற சிந்தடிக் ஆடைகளை விட அதிக நாட்கள் உழைக்கும். அணிவதற்கும் வசதியாக இருக்கும். பருவ நிலைக்கு ஏற்ப அவற்றைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
அடுத்ததாக, ஆடை வடிவமைப்பிலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.
தேர்ந்தெடுத்த ஆடையில் எங்காவது தையல் பிரியும்படி லூசாக தைக்கப்பட்டிருக்கிறதா? அல்லது தையல் இறுக்கமாக இல்லாமல் பிரியும்படி இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
துணியில் ஏதேனும் சுருக்கம் அல்லது நிறம் மங்கியிருக்கிறதா என்று கவனிப்பது மிக அவசியம். அப்படி கவனிக்காமல் வாங்கும் சில ஆடைகள் ஒரு சில முறை துவைத்தவுடனேயே நிறம் மங்கிவிடும்.
ஆடை வடிவமைப்பில் உங்களுக்குத் தேவையான வசதிகள் இருக்கின்றனவா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும். பாக்கெட், தோள்பட்டை, காலர், பட்டன்கள் ஆகியவை சரியாகப் பொருந்தியிருக்கின்றனவா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அணிந்த பிறகு அவை அசௌகரியமாகத் தோன்றும்.