சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் பொன்ராம் இயக்கியுள்ள ‘சீமராஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்து தற்போது டப்பிங் உள்பட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது.
இந்த படத்திற்காக சொந்தக்குரலில் டப்பிங் செய்யும் நடிகை சமந்தா, இன்று தனது பகுதியின் டப்பிங்கை முடித்தார். அதேபோல் நடிகர் சூரியின் டப்பிங்கும் இன்று முடிந்தது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் டப்பிங்கும் முடிந்துவிட்டதால் டப்பிங் பணி ஏறக்குறைய முடிவடையும் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பாளர் சங்கத்தின் திரைப்பட வெளியீட்டு குழு தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இதன்படி இந்த படத்தை ரிலீஸ் செய்ய செப்டம்பர் 13 அன்று தயாரிப்பாளர் கேட்ட தேதிக்கு குழு அனுமதி அளித்திருப்பதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து வரும் வினாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 13ஆம் தேதி ‘சீமராஜா’ ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி, யோகிபாபு, மனோபாலா, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் கீர்த்திசுரேஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்து வரும் இந்த படத்தில் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவும், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.