‘எங்கள் வாழ்நாளில் ஒபாமா தான் சிறந்த அதிபர்’ என அமெரிக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில், கடந்த ஜூன் 5-ம் தேதி சுமார் 1,22,002 பேரிடம் ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. உங்கள் வாழ்நாளில் யார் சிறந்த அதிபர்? என்ற கேள்விதான் அது. இந்த முடிவை அறிக்கையாக வெளியிட்டுள்ளது, ஆய்வை நடத்திய பியூ ஆராய்ச்சி மையம் ( Pew Research Center).
அதில், 44 சதவிகிதம் பேர் பராக் ஒபாமாவுக்கும், 33 சதவிகிதம் பேர் பில் கிளின்டனுக்கும், 32 சதவிகிதம் பேர் ரொனால்டு ரீகனுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், 19 சதவிகிதம் பேர் தற்போதைய அதிபரான டொனால்ட் ட்ரம்ப் பெயரைக் கூறியுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து, ஜார்ஜ் ஹெச்.டபில்யூ புஷ் (சீனியர்) மற்றும் ஜார்ஜ் புஷ் ஆகிய இருவருக்கும் 14 சதவிகிதம், 10 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். இதே ஆய்வு, கடந்த 2011-ம் வருடம் பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது நடத்தப்பட்டது. அதில், ஒபாமாவுக்கு 20 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்ததாகத் தகவல் வெளியானது. தற்போது நடைபெற்றுள்ள ஆய்வில், 62 சதவிகிதம் இளைஞர்கள் ஒபாமாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.