கோவையில் உள்ள தனியார் கல்லூரியில், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பயிற்சியில் ஈடுபட்ட மாணவி, இரண்டாவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தார்.
கோவை நரசீபுரம் பகுதியில், கலைமகள் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டுவருகிறது. இந்நிலையில், அந்தக் கல்லூரியின் நாட்டுநலப் பணித்திட்டம் சார்பாக, பேரிடர் மேலாண்மைப் பயிற்சி நடைபெற்றிருக்கிறது. அப்போது, பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு பயின்றுவந்த லோகேஸ்வரி (19) என்ற மாணவி, இரண்டாவது மாடியில் இருந்து, கீழே வலை கட்டிக் குதித்து, பேரிடர் மேலாண்மைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இதனிடையே, திடீரெனத் தவறிவிழுந்து, முதல் மாடி சன் சேடில் லோகேஸ்வரிக்கு பலத்த அடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
முறையான பாதுகாப்பு சாதனங்கள் எதுவும் இல்லாததும், குதிக்க மறுத்த மாணவியை தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைக் கழகத்தின் பயிற்சியாளர் ஆறுமுகம் தள்ளிவிட்டதுமே, மாணவியின் உயிரிழப்புக்குக் காரணம் என மாணவர்கள் கூறியுள்ளனர். ஆனால், மாணவி தவறி விழுந்ததால் உயிரிழந்ததாகக் கல்லூரி தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர். அதிர்ச்சியும், சோகமும் அளித்துள்ள இந்தச் சம்பவம்குறித்து, போலீஸார் வழக்குப்பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.