பொதுவாக காபி மற்றும் டீ போன்றவற்றை தூக்கம் வரும் நேரத்திலோ அல்லது சோர்வாக இருக்கும் போதோ குடித்தால், மனநிலை மேம்படும்.
கர்ப்பிணிகள் எந்த ஒரு உணவையோ அல்லது பானத்தையோ குடித்தாலும், அது நஞ்சுக்கொடி மூலம் கருவை அடையும். மேலும் நஞ்சுக்கொடி குழந்தைக்கு வேண்டிய சத்துக்கள் மற்றும் உணவுகளை வழங்குவதோடு, நச்சுமிக்க பொருட்கள் கருவை அடையாதவாறு தடையை ஏற்படுத்தி நல்ல பாதுகாப்பை வழங்கும். கர்ப்பிணிகள் காபி, டீ குடித்தால் தீங்கு விளையும், ஆனால் அது அளவுக்கு அதிகமாக எடுத்தால் தான்.
ஒரு நாளைக்கு 200மி.கி-க்கு மேல் அதிகமாக காப்ஃபைனை எடுக்கக்கூடாது. அப்படியெனில், ஒரு நாளைக்கு 2 கப் காபி குடிக்கலாம். அதுவும் பாலில் அளவாக காபித் தூள் சேர்த்து குடிக்க வேண்டும். இருப்பினும் கர்ப்ப காலத்தில் காபி குடிக்காமல் இருப்பதே பாதுகாப்பானது.
200 மிலி அளவு கொண்ட கப்பில் அளவாக காபி தூள் சேர்க்கப்பட்ட காபி குடிக்கலாம். ஆனால் மிகவும் தூளாக்கப்பட்ட காபித் தூள், எஸ்பிரஸ்ஸோ போன்றவற்றில் காப்ஃபைன் அதிகம் இருக்கும் என்பதால், இவற்றைத் தவிர்க்கவும்.
ஒரு நாளைக்கு ஓர் கர்ப்பிணிப் பெண் 200 மிகி-க்கு அதிகமாக காபியை குடித்து வந்தால், கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி. குழந்தை மிகவும் குறைவான எடையுடன் பிறக்கவும் வாய்ப்புள்ளது. எனவே ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க நினைத்தால், காபி குடிப்பதை ஒர் 10 மாதத்திற்கு நிறுத்தி வைக்கலாமே!
நன்கு வளர்ந்த மனிதருக்கே காப்ஃபைன் தீங்கான ஓர் பொருளாக இருக்கும் போது, முழுமையாக வளர்ச்சியடையாமல் கருவில் உள்ள குழந்தைக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சற்று யோசித்துப் பாருங்கள். அதுவும் கர்ப்பிணிகள் காபியைக் குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் நஞ்சுக்கொடி வழியாக குழந்தையின் இரத்தத்தில் கலந்துவிடும். நஞ்சுக்கொடி இதனை தடுக்காது. எனவே காபி குடிப்பதைத் தவிர்ப்பதே நல்லது.
காபியுடன் ஒப்பிடுகையில் டீ குடிப்பது சிறந்தது எனலாம். ஏனெனில் காபியை விட டீயில் காப்ஃபைன் அளவு குறைவாக உள்ளது. கர்ப்பிணிப் பெண் டீ குடிப்பதாக இருந்தால், அளவாக டீ தூள் சேர்த்து தயாரிக்கப்பட்ட டீயைக் குடிப்பது நல்லது. அதுமட்டுமின்றி கர்ப்பிணிகள் க்ரீன் டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் காப்ஃபைன் அளவு அதிகமாக இருப்பதோடு, இதில் உள்ள வேறு சில சேர்மங்கள் கருச்சிதைவிற்கு வழிவகுக்கும்.