சட்டையில் குழம்பு கொட்டியதால் 2 வைத்தியர்களுக்கு இடையில் கடும் மோதல் இடம்பெற்ற சம்பவமொன்று கராபிட்டிய வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வைத்தியசாலையின் உணவகத்தில் வைத்தியர் ஒருவர் உணவு உட்கொண்டுவிட்டு எழுந்து சென்ற போது, மேசையில் வைக்கப்பட்டிருந்த குழம்பு, சக மருத்துவர் ஒருவரின் சட்டையில் கொட்டியதனால் இந்த முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
காலியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் ஒரே வகுப்பில் ஒன்றாக கல்வி கற்று, மருத்துவ கல்லூரியிக்கும் ஒன்றாகவே தெரிவாகிய நண்பர்களே இவ்வாறு சட்டையில் குழம்பு கொட்டியதற்காக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
அவசர சிகிச்சைப் பிரிவு வைத்தியர் ஒருவரும், பல்மருத்துவர் ஒருவரும் இவ்வாறு மோதிக் கொண்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சக வைத்தியரினால், தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய சாத்தியம் உண்டு என குறித்த வைத்தியர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டுள்ளனர்.
வைத்தியர்கள் ஒருவருக்கு ஒருவர் மரண அச்சுறுத்தல் விடுத்துக் கொண்ட இந்த சம்பவம் குறித்து காலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.