பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி வைரல் வீடியோ வரிசையில் பிளாஸ்டிக் கோழிக்குஞ்சும் இணைந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னால் `பிளாஸ்டிக் அரிசி’ குறித்த விஷயங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. ஆளாளுக்கு வீடியோக்களை வெளியிடத் தொடங்கினர். இதனால் பிளாஸ்டிக் அரிசி குறித்த பீதி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அரிசி விற்பனையாளர் சங்கம் தாமாக முன்வந்து `பிளாஸ்டிக் அரிசி என்ற ஒன்று இல்லை’ என்று தெளிவுபடுத்தியது. தமிழக அரசு ஒருபடி மேலே போய் பிளாஸ்டிக் அரிசி குறித்த புகார் எண்கள் வரை அறிவித்தது. அதைத் தொடர்ந்து பிளாஸ்டிக் முட்டை குறித்த வீடியோவும் வெளியானது. அதனால் மக்கள் அந்த உணவில் பிளாஸ்டிக் இருக்குமோ, இந்த உணவில் பிளாஸ்டிக் இருக்குமோ என்ற அச்சத்துடன் காணப்பட்டனர். இந்த அச்சத்துக்கு பிளாஸ்டிக் பற்றிய பயம்தான் முக்கியக் காரணம். அந்த பிளாஸ்டிக்தான் இப்போது அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், இப்போது வந்திருப்பது சமைக்கும் உணவுப்பொருள்களில் அல்ல… பெரும்பாலானோர் அதிகமாக உட்கொள்ளும் கோழிகளில்..ரப்பர் கோழி என்ற வீடியோ இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது
தற்போது வைரலாகி வரும் வீடியோவில், கோழிக்குஞ்சுகளை ஒருவர் விற்பனை செய்துகொண்டிருக்கிறார். அப்போது அவர் கோழிக்குஞ்சுகளை வைத்து வித்தைக் காட்ட தொடங்குகிறார். அதைப் பார்க்கும்போது வெறும் வித்தைதான் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஒருவர் வலைக்கூண்டுக்குள்ளிருந்து ஒரு கோழிக்குஞ்சை எடுக்கிறார். அதன் இருகால்களையும் பிடித்துக்கொண்டு சுழற்றுகிறார். பழைய அம்மன் படங்களில் மனிதர்களின் தலையைத் திருகுவதுபோல, கோழிக்குஞ்சின் தலையைத் திருகுகிறார். ஒருமுறை அல்ல… தொடர்ந்து நான்குமுறை. அதன்பின்னர், இரண்டு கால்களையும் சேர்த்து கழுத்தைச் சுற்றி மடக்குகிறார். அப்போது கோழிக்குஞ்சு ஜிம்னாஸ்டிக் செய்யும் என்றும் சொல்கிறார். அதன்பின்னர் கோழிக்குஞ்சை தரையில் விடுகிறார். அது இறந்ததுபோல படுத்துக்கிடக்கிறது. மீண்டும் தனது அடுத்த சாகசத்துக்கு வந்துவிடுகிறார். ஒரு துண்டில் கோழிக்குஞ்சை வைத்துக்கட்டி, துண்டை இறுக்குகிறார். கோழிக்குஞ்சு இருக்கும் இடம் பெரிய அளவிலான கோலிக்குண்டாக மாறுகிறது. பின்னர் மீண்டும் துண்டின் முடிச்சை அவிழ்க்கிறார். அதன்பின்னர் கோழிக்குஞ்சு சாதாரண நிலையிலிருந்து வெளிவருகிறது. எலாஸ்டிக் போல.
இம்முறை கூண்டுக்குள் கையைவிட்டுக் கிடைக்கும் கோழிகளைத் தனது ஜீன்ஸ்பேன்ட் பாக்கெட்டுக்குள் கர்ச்சிப்பை வைப்பதுபோல, மடக்கி வைத்துக் கொள்கிறார். பேன்ட் பாக்கெட்டுக்குள் கிட்டத்தட்ட எட்டுக் கோழிக்குஞ்சுகளை வைத்துக்கொண்டு அப்படியே தரையில் அமர்ந்து எழுகிறார். மீண்டும் தனது பேன்ட் பாக்கெட்டுக்குள்ளிருந்து கோழிக்குஞ்சுகளை எடுத்து வெளியே விடுகிறார். பாக்கெட்டுக்குள் போட்ட அனைத்துமே உயிருடன் அப்படியே இருக்கின்றன. அடுத்ததாக ஒரு கோழிக்குஞ்சை எடுத்து இரண்டு கால்களையும் பிடித்து இருபக்கமும் இழுக்கிறார். இம்முறையும் ஒன்றும் ஆகவில்லை. இப்போது முதன்முதலாக ஜிம்னாஸ்டிக் காட்டிய கோழி மெள்ள் எழுந்து நடக்க ஆரம்பிக்கிறது. இறுதியாக ஒரு கோழியின் படத்தைக் காட்டி, இது ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட கோழிக்குஞ்சுகள் என்று சொல்கிறார். அதற்குச் சுற்றியிருந்தவர்கள் “படத்தில் இருப்பது ஈமு கோழி மாதிரி தெரியுதே” என்கிறார்கள். அதைக் கோழிக்குஞ்சு விற்பனை செய்யும் இளைஞர் மறுக்கிறார். இந்த வீடியோ வடமாநிலத்தில் எடுக்கப்பட்டதுபோல இருக்கிறது. ஆனால், இதைச் சமூக வலைதளங்களில் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் கோழிகளா?.. என்று பரப்பி வருகிறார்கள்.
இதைப் பற்றி காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் முனைவர் தேவகியிடம் பேசினோம். “இது உண்மையா என்று தெரியவில்லை. சாதாரணமாக கோழிக்குஞ்சின் தலையை இத்தனை முறை திருக முடியாது. பார்ப்பதற்கு மேஜிக் போல இருக்கிறது. நான் பார்த்தவரையில் இந்த மாதிரி கோழிகளைச் செய்ய முடியாது. உடனடியாக என் சீனியர்களிடம் விஷயத்தைக் கொண்டு போகிறேன். இது எப்படி எனக் கண்டுபிடிக்க வேண்டும்” என்றார்.
ரப்பர் கோழி என்று கூறி வாட்ஸ் அப்பில் பகிரப்படும் வீடியோ:
ரப்பர் கோழியென்று ஒன்று கிடையாது. சிலர் விஷப்பாம்புகளை லாகவமாகக் கையாள்வார்கள். புதிய பாம்பென்றாலும் அவர்கள் சொல்பேச்சு கேட்டுவிடும். அது போல கோழிகளை மிருதுவாகக் கையாளத் தெரிந்தவர் செய்ததாக இருக்கலாம். மற்றபடி, கோழியில் ரப்பர் கோழியெல்லாம் நிச்சயம் கிடையாது.
பிளாஸ்டிக் முட்டை, அரிசி வைரல் வீடியோ வரிசையில் “இது பிளாஸ்டிக் கோழி, இது ரப்பர் கோழி” என வைரலாகி வருகிறது.