கர்நாடகாவில் கணவருடைய நண்பரை, பொறாமையின் காரணமாக மகனுடன் இணைந்து மனைவியே அடித்து கொலை செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம் மண்டியா அருகே சோழதேவனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் பஷீர் அஹ்மத் (வயது 35 ). அங்கண் வாடி தரகராக பணியாற்றி வரும் பஷீருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இவர் தனது நண்பர் இலியாஸ் என்பருடன் இணைந்து பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்தார்.
இலியாஸ் அவரது மனைவி ஜுபீனா (42) மற்றும் அவரது மகன் ரோஷனுடன் (20) இருந்து வருகிறார்.
இந்த நிலையில் வேலை தொடர்பாக வெளியூருக்கு சென்று வீடு திரும்பிய இலியாஸ் பஷீர் எங்கே மனைவியிடம் கேட்டுள்ளார். வேலைக்கு போன பஷீர் 2 நாட்களாக வீடு திரும்பவில்லை என்று பதிலளிக்க, உடனடியாக காவல்துறையில் இலியாஸ் புகார் கொடுத்துள்ளார்.
இதனடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளும்பொழுது, ஜுபீனா முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார்.இதனால் சந்தேகமடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தும்பொழுது, பயந்துபோன ஜுபீனா 30 தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக அவரை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையில் அவரது மகன் ரோஷனிடம் மேற்கொண்ட விசாரணையில், தந்தை இலியாஸ் பஷீர் மீது காட்டிய அன்பும் ஆதரவும் தங்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை எனவும், தொழிலில் பங்கு கேட்டதால் ஆத்திரமடைந்து தான் நானும், தாயும் திட்டமிட்டு கொலை செய்தோம் என ஒப்புக்கொண்டார். மேலும் அவரது உடலை கே ஆர் பெட் என்ற இடத்திலுள்ள கால்வாயில் புதைத்தாகவும் ஒப்புக்கொண்டார்.
தற்போது இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர்.