நமது நாட்டை பொறுத்தவரை நீதி அரசியல்வாதிகளால் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. ஒருவர் குற்றம் இழைத்தவர் என்றால் அவர் சிறைக்கு அனுப்பப்படுகின்றார்.
அதேவேளை இன்னொருவர் குற்றவாளி என தீர்ப்பு கூறப்பட்ட பின் சிறைக்கு அனுப்பப்பட்டு அவர் அரசுக்கு அறிமுகமானவராக இருந்தால் ஒரே வாரத்தில் பிணை வழங்கப்படும் நாட்டில் நாம் வாழ்கிறோம் என உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் குறித்த கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமது ஒவ்வொரு செயலுக்கும் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும் என்ற பக்தியுணர்வு கொண்ட பொலிஸாரும், நீதிபதிமாரும், ஆட்சியாளரும் உருவாகாமல் தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவதை அமுல்படுத்துவது அரசியல் ரீதியிலும், இனவாத ரீதியிலும் துஷ்பிரயோகத்துக்கு வழி வகுக்கும்.
பல குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பது நீதியின் அடிப்படை.
அத்துடன் நீதிமன்றங்கள் பெரும்பாலும் பொலிஸாரின் வாக்குமூலத்துக்கே மதிப்பளிப்பதால் பல நிரபராதிகள் உள்ளேயும் பல குற்றவாளிகள் வெளியேயும் உள்ளனர்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான கிழக்கு முஸ்லிம்கள் சிலர் “புலிகள்” என்ற பொய் குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டதையும் கண்டுள்ளோம்.
மேலும், புலிகளோடு தொடர்பு வைத்ததற்காய் பல வருடங்களாக சிறையில் பல தமிழ் இளைஞர்கள் வாடும் போது புலிகளின் போர்த்தளபதிகளாக இருந்தோர் பிரதேச சபை, மாகாண சபை, ஏன் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருக்கும் நாட்டில் இருக்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.