`தமிழிசைக்கு என்னை விமர்சிக்க என்ன உரிமை உள்ளது?’ – கமல்ஹாசன்

`என்னைப் போலி பகுத்தறிவுவாதி எனக் கூற தமிழிசைக்கு என்ன உரிமை உள்ளது’ என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், “என்னைப் போலி பகுத்தறிவுவாதி என்று சொல்ல தமிழிசைக்கு என்ன உரிமை உள்ளது என்று எனக்குத் தெரியவில்லை. நான் பகுத்தறிவாளன்தான், என்னுடன் இருக்கும் அனைவருமே பகுத்தறிவுவாதிதான் என்று வாக்குறுதி கொடுக்க முடியாது. பல்வேறு நம்பிக்கை உள்ளவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். என் மகள் ஸ்ருதியைப் பகுத்தறிவுவாதி எனக் கூற முடியாது. நான்  மூடநம்பிக்கையை ஒழிக்க அரசியலுக்கு வரவில்லை; ஏழ்மையை, ஊழலை ஒழிக்கவே அரசியலுக்கு வந்திருக்கிறேன். ஆழ்வார்பேட்டை ஆண்டவன் என்பது பழைய கூக்குரல் அது தவிர்க்க வேண்டும். அதுகுறித்து வந்த விமர்சனங்கள் எல்லாம் சரியானவையே. அதைத் தவிர்ப்பதற்கு எல்லா முயற்சிகளையும் நானும் எடுப்பேன்” என்றார்.