அவ்வப்போது செய்திகளில் பிரித்தானிய இளவரசிகள் பின்பற்ற வேண்டிய மரபுகள் குறித்து படித்திருப்போம்.
பிரித்தானிய மகாராணி தனது ஒரு நாளை எப்படி செலவிடுவார் என்பதை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.
அவரும் மரபுகளைப் பின்பற்றுபவர், அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையின்போது அவரது சொதப்பல்கள் மகாராணியின் நெற்றியைச் சுருங்கச் செய்ததை உலகமே பார்த்தது.
ஏனென்றால் அவர் பல ஆண்டுகளாக தனது வாழ்வை கட்டுப்பாடுகளுடன் செலவிடுபவர், இன்று வரை அப்படித்தான்.
BBC radio 4இல் Today என்னும் நிகழ்ச்சியைக் கேட்டவாறு காலை 7.30க்கு அவரது நாள் தொடங்குகிறது.
அவரது தனிப்பட்ட உதவியாளர் ஒரு ட்ரேயில் வைக்கப்பட்டுள்ள டீ, சுடு தண்ணீர், குளிர்ந்த பால் (சர்க்கரை கிடையாது) மற்றும் ஒரு பீங்கான் கப் அண்ட் சாஸர் ஆகியவற்றுடன் அவரது அறைக்கதவை மெதுவாகத் தட்டி விட்டு உள்ளே நுழைகிறார்.
ரேடியோவை ஆன் செய்து BBC radio 4இல் Today என்னும் நிகழ்ச்சியை வைக்கிறார் அந்த உதவியாளர்.
மகாராணியார் அந்த நிகழ்ச்சியைக் கேட்டவாறே தனது டீயை சுவைக்கிறார். அவர் டீ அருந்தும்போதே அவரது உதவியாளர் குளியலறைக்கு சென்று மகாராணி குளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார். வெப்பமானி ஒன்றின் உதவியால் பாத் டப்பில் சரியான சூட்டில், ஏழு இன்ச் உயரத்திற்கு மிகாத அளவிற்கு தண்ணீர் ஒழுங்கு செய்யப்படுகிறது. மகாராணியார் குளிக்கும்போதே அவர் அணிய வேண்டிய உடைகளை தயாராக எடுத்து வைக்கிறார் அவரது உதவியாளர்.
அவர் உடையணிந்ததும் சிகையலங்கார நிபுணர் பல ஆண்டுகளாக ராணியார் பின்பற்றும் ஸ்டைலில் அவருக்கு சிகையலங்காரம் செய்கிறார். 8.30க்கு காலை உணவு தயாராக அவரது அறைக்கு கொண்டு வரப்படுகிறது. அவர் அதை உண்ணும் நேரத்தில் பேக் பைப்பர் ஒருவர் ராணிக்கு பிடித்த இசையை வாசிக்கிறார்.
9.30க்கு தனது அலுவலக அறையில் அமரும் ராணியாருக்கு தொடர்ந்து இரண்டு மணி நேரம் பேப்பர் ஒர்க் இருக்கிறது.
பின்னர் தனக்கு வரும் கடிதங்களைப் பார்வையிடும் மகாராணி, சில கடிதங்களுக்கு கைப்பட பதிலளிக்குமாறு தனது அலுவலக உதவியாளருக்கு உத்தரவிடுகிறார், பெரும்பாலும் அவை குழந்தைகள் அல்லது வயது முதிர்ந்தோர் எழுதிய கடிதங்கள்.
தனது பிள்ளைகள் யாராவது உடன் இருந்தாலன்றி பெரும்பாலும் மதிய உணவை மகாராணி தனியாகத்தான் சாப்பிடுகிறார்.
அவரது உணவு பெரும்பாலும் எளிமையானதாகவே இருந்தாலும் அவை மிக நேர்த்தியான முறையில் பிரசண்ட் செய்யப்படும்.
மகாராணியார் உணவுக்குப் பின் மது அருந்துவதில்லை, தண்ணீர் மட்டுமே குடிக்கிறார். உணவை முடித்ததும் உடனடியாக தனியாக தோட்டத்தில் ஒரு வாக்கிங் செல்ல வேண்டும் அவருக்கு, அங்கு அவரை யாரும் தொந்தரவு செய்வதை அவர் விரும்புவதில்லை. பின்னர் ஒரு அரை மணி நேரம் Sporting Life மற்றும் Racing Post ஆகிய பத்திரிகைகளுடன் ரிலாக்ஸ் செய்கிறார் அவர்.
முக்கியப் பணிகள் இருந்தால் அவற்றை 4.30க்கு முன் முடித்து விடுகிறார்.
ஏனென்றால் ஐந்து மணிக்குள் அவர் தனது மாலை நேர டீக்காக தனது மாளிகைக்கு திரும்பி விட வேண்டும். டீக்குப் பின் மீண்டும் ஒரு மணி நேர அலுவலக வேலை. வேறு முக்கிய அலுவல்கள் எதுவும் இல்லையென்றால்ஆறு மணியளவில் தனது அறைக்கு திரும்பி விடுகிறார்.
செவ்வாய்க் கிழமைகள் என்றால் மீண்டும் அலுவலக சந்திப்புகள், நாடாளுமன்ற நடவடிக்கைகளை அறிந்து கொள்ள பிரதமருடன் ஒரு சந்திப்பு.
பின்னர் இரவு உணவு, மகாராணியார் ரிலாக்ஸாக உண்ணும் ஒரே உணவு அதுதான். மீண்டும் சில அலுவல்களுக்குப்பின் 11 மணியளவில் அவர் படுக்கைக்கு சென்றாலும் நீண்ட நேரம் புத்தகங்கள் வாசிக்கிறார்.
மாளிகையில் நீண்ட நேரம் விளக்குகள் அணைக்கப்படாமல் இருக்கும் ஒரே அறை மகாராணியாருடையதுதான்.
மறு நாள் மீண்டும் காலை 7.30 மணிக்கு அன்றைய நடவடிக்கைகள் தொடங்குகின்றன.