பறக்கும் விமானத்தில் 33 பேருக்கு உடல் நலம் பாதிப்பு: நடந்தது என்ன?

குரோஷியா நாட்டுக்கு சென்ற விமானம் ஒன்றில் திடீரென்று 33 பயணிகளுக்கு ஒவ்வமை மற்றும் காதில் இருந்து ரத்தக்கசிவு ஏற்பட்டதால் விமானத்தை ஜேர்மனியில் பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளனர்.

விமானம் 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீரென்று விமானத்தினுள் அழுத்தம் குறைந்ததாலையே பயணிகள் பாதிப்புக்கு உள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

அயர்லாந்தின் டப்ளின் நகரில் இருந்து குரோஷியாவின் ஜடார் நகருக்கு 189 பயணிகளுடன் புறப்பட்டு சென்றுள்ளது Ryanair விமானம்.

சம்பவத்தின்போது விமானம் சுமார் 37,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தது. திடீரென்று விமானத்தினுள் காற்றின் அழுத்தம் சரிவடையவும் பயணிகள் சிலருக்கு காதில் இருந்து ரத்தம் கசிந்துள்ளது.

பலருக்கு குமட்டல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக ஆக்ஸிஜன் மாஸ்க் வழங்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி 37,000 அடியில் இருந்து சுமார் 8 நிமிடத்தில் படிப்படியாக 10,000 அடிக்கு தாழ்வாக விமானத்தை பறக்கச் செய்துள்ளனர்.

பின்னர் அவசரமாக பிராங்க்பர்ட் ஹன் விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளனர். இதனையடுத்து பாதிப்புக்குள்ளான பயணிகளை ஜேர்மன் அதிகாரிகள் மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

பலர் விமானத்தில் நடந்த சம்பவத்தை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளனர்.

ஜேர்மனியில் உள்ள ராணுவ விமான தளத்தில் தரையிறக்கப்பட்டதால் பயணிகளுக்கு போதிய வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என பலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.