குற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா?” என்று பொதுவில் கதைப்பது எல்லோருக்கும் தெரியும்.
அதை எதிரொலித்த முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், “புலிகளை மீண்டும் கொண்டு வர வேண்டும்” என்று பேசியது இலங்கை முழுவதும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.
வடக்கிலும், தெற்கிலும் இதை இரண்டு வகையாக மொழி திரித்து புரிந்து கொண்டனர்.
தெற்கில் உள்ள அரச ஆதரவு சிங்களவர்கள் இதை ஒரு தேசத் துரோக பேச்சாக கருதினார்கள்.
இதை ஒரு சராசரி அரசியல்வாதியின் மக்களை ஏமாற்றும் பேச்சாக கருதாமல், விஜயகலா “உண்மையிலேயே புலிகளை மீளக் கொண்டு வர விரும்பினார்” என்பது போல நினைத்து அவர் மீது வசை பாடினார்கள்.
இது தான் சந்தர்ப்பம் என்று சிங்கள ஊடகங்களும் இனவாதத் தீயில் எண்ணை ஊற்றின. மறுபக்கத்தில், வடக்கில் உள்ள புலி ஆதரவுத் தமிழர்களும் இதை சீரியஸாக எடுத்து விட்டார்கள். “புலிகளின் பெயர் சொன்னால் சிங்களவர்கள் கதறுகிறார்கள்” என்று தமக்குள் சொல்லித் திருப்திப் பட்டுக் கொண்டனர்.
வடக்குத் தமிழ் அரசியல்வாதிகள் வாக்கு வேட்டையை கருத்தில் கொண்டு புலிகளின் புகழ் பாடுவது இதுவே முதல் தடவை அல்ல.
மாகாண சபைத் தேர்தல் காலத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் மேடையில் புலிகளை புகழ்ந்து பேசி சர்ச்சைக்குள் மாட்டிக் கொண்டார்.
அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சே, “வட மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு வென்றால் ஈழம் உருவாகி விடும்” என்று பேசி வந்தார்.
இந்த அரசியல்வாதிகள் சிங்களவராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், புலிகளின் மீளுருவாக்கத்தை சீரியஸாக எடுக்கும் அளவிற்கு முட்டாள்கள் அல்ல.
யானை இருந்தாலும், இறந்தாலும் ஆயிரம் பொன் என்ற பழமொழிகேற்ப புலிகளின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்துவது இலாபகரமானது.
இனரீதியான பிரிவினை கூர்மை அடைந்துள்ள நாட்டில், இது போன்ற பேச்சுக்களை வைத்தே தேர்தல்களில் ஓட்டுக்களை அள்ள முடியும்.
யாழ்ப்பாணத்தில், அண்மைக் காலமாக குற்றச்செயல்கள் அதிகரித்து வருவது குறித்து மாற்றுக் கருத்து எதுவுமில்லை.
அதற்காக, அங்கு முன்பு எப்போதுமே குற்றங்கள் நடக்கவில்லை என்பது போலப் பேசுவதில் உண்மை இல்லை.
ஈழப்போருக்கு முன்னரும் அங்கே நிறைய குற்றங்கள் நடந்துள்ளன. திருட்டுக்கள், கொள்ளைகள், பாலியல் பலாத்காரங்கள் மட்டுமல்லாது, பட்டப்பகலில் கொடூரமான கொலைகளும் நடந்துள்ளன.
எண்பதுகளில் யாழ்ப்பாணம் எப்படி இருந்தது?
1. சாதி ஆணவப் படுகொலைகள் நிறைய நடந்தன. சாதிவெறி காரணமாக பட்டப் பகலில் சந்தையில் வெட்டிக் கொன்ற சம்பவங்களும் நடந்துள்ளன.
குறிப்பிட்ட காலங்களில், குறிப்பிட்ட ஊர்களில், மக்கள் வெளியே நடமாட அஞ்சினார்கள்.
எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற அச்சம் நிலவியது. அன்றிருந்த போலீஸ்காரர்களும் சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்குக் காரணம், சிறிலங்கா காவல்துறையில் அன்றிருந்த தமிழ்ப் போலீஸ்காரர்களும் பெரும்பாலும் உயர்சாதியினர் தான்.
2. உறவினர்களுக்கு இடையில் ஏற்படும் தகராறுகள் காரணமாகவும் நிறையப் படுகொலைகள் நடந்துள்ளன.
குடிமரபுப் படுகொலைகள் (feud) யாழ்ப்பாண சமுதாயத்தில் சர்வ சாதாரணம். தமது குடும்ப உறுப்பினர் கொல்லப் பட்டால், அதற்கு பழிக்குப் பழியாக எதிராளிக் குடும்பத்தில் ஒருவரைக் கொலை செய்வது நீதியாகக் கருதப் பட்டது.
இதில் பலியாகும் நபர் ஒரு அப்பாவியாகக் கூட இருக்கலாம். ஒரு தடவை, யாழ் நகரில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்ஸை வழிமறித்து பத்துக்கும் குறையாத பயணிகள் பட்டப் பகலில் வெட்டிக் கொல்லப் பட்டனர். அதற்குக் காரணமும் குடும்பப் பகை தான்.
மேற்குறித்த குற்றச் செயல்கள் பற்றிய விபரங்கள், ஈழநாடு போன்ற பிராந்தியப் பத்திரிகைகளில் முக்கிய செய்திகளாக இடம்பெற்றன.
இன்று பலர் அவற்றை எல்லாம் மறந்து விட்டது போன்று நடிக்கிறார்கள். இது ஒன்றில் வேண்டுமென்றே மறக்கும் வியாதி (Selective amnesia), அல்லது அரசியல் பிரச்சார காரணங்களுக்காக மறைக்கிறார்கள்.
விடுதலைப் புலிகளின் ஆட்சிக் காலத்தில் எந்தக் குற்றமும் நடக்கவில்லை என்று பலர் சொல்லிக் கேள்விப் பட்டிருப்போம்.
உண்மையில் அன்று சிறிய குற்றங்கள் மட்டுமே நடக்கவில்லை. பெரிய குற்றங்கள் தாராளமாக நடந்து கொண்டிருந்தன!
வர்த்தகர்கள் கொள்ளை இலாபம் அடிப்பதற்கும், கந்துவட்டிக் காரர்கள் வட்டிக்கு பணம் கொடுத்து நகைகள், காணிகளை பறிப்பதற்கும் எந்தத் தடையும் இருக்கவில்லை.
அதே மாதிரி சாதி ஆணவக் குற்றவாளிகளும் தண்டிக்கப் படவில்லை. இதற்குப் பெயர் வர்க்க நீதி.
பெரிய குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அரசியல் செல்வாக்கு காரணமாக தண்டிக்கப் படவில்லை.
இங்கே அரசியல் செல்வாக்கு எனப்படுவது, சிறிலங்கா அரசு, புலிகளின் அரசு இரண்டுக்கும், அல்லது இரண்டில் ஒன்றுடன் நெருக்கமாக இருந்தவர்களை குறிக்கும்.
பெரும்பாலும் வர்த்தகர்கள், பணக்காரர்கள் செய்யும் குற்றங்களை நாங்கள் கண்டுகொள்வதில்லை.
புலிகளின் ஆட்சிக் காலத்திலும் அந்த நிலையில் எந்த மாற்றமும் வரவில்லை. “penny wise, pound foolish” என்றொரு ஆங்கிலப் பழமொழி உண்டு. அதாவது, சிறிய குற்றங்களை கண்டு அலறுவோர், பெரிய குற்றங்களை கண்டுகொள்வதில்லை.
அதிகம் பேசுவானேன். தற்போது புலிகள் மீண்டும் வர வேண்டும் என்று பேசி இருக்கும் விஜயகலாவின் மறைந்த கணவர் மகேஸ்வரன் கூட, புலிகளின் காலத்தில் தீயவழியில் பிரபலமான ஒரு கிரிமினல் குற்றவாளி தான்!
அன்றிருந்த பொருளாதாரத் தடையை பயன்படுத்தி, மண்ணெண்ணெய் கடத்தி வந்து பத்து மடங்கு இலாபத்திற்கு விற்று, பகல் கொள்ளை அடித்த கொள்ளைக்காரன்.
அதனால் “மண்ணெண்ணெய் மகேஸ்வரன்” என்று ஒரு பட்டப் பெயர் கூட கிடைத்திருந்தது.
ஓட்டாட்டண்டியாக இருந்து கோடீஸ்வரனாக மாறிய மகேஸ்வரனின் வாழ்க்கைக் கதை பற்றி யாழ்ப்பாணத்தில் எல்லோருக்கும் தெரியும்.
அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வியாபாரத்தில் ஈடுபட்ட பலர் கொள்ளை இலாபம் சம்பாதித்து பணக்காரர் ஆனார்கள்.
அதை விட, தமிழ் மக்களின் அவல நிலையை பயன்படுத்தி அநியாய வட்டி வாங்கிய கந்துவட்டிக் காரர்களும் இருந்தனர்.
இந்தக் குற்றவாளிகளில் ஒருவர் கூட புலிகளால் தண்டிக்கப் படவில்லை. இப்போதும் இதை வாசிக்கும் சிலர், அத்தகைய குற்றவாளிகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்குவார்களே தவிர, இதையெல்லாம் குற்றமாக பார்க்க மாட்டார்கள்.
வீடுடைத்து நகைகளை திருடினால் அது கிரிமினல் குற்றம் தான். ஆனால், கந்துவட்டிக்காரர் அதே நகைகளை வட்டிக் காசு என்ற பெயரில் திருடினால் நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறோம்.
கடன் பிரச்சினையால் குடும்பமாக தூக்கு மாட்டி செத்தவர்கள் உண்டு. அதைக் கேள்விப் பட்டாலும், வட்டிக்கு கடன் கொடுப்பது கிரிமினல் குற்றம் என்று சொல்லத் தெரியவில்லை.
தெருவில் எம்மிடம் உள்ள பணத்தை வழிப்பறி செய்வது கிரிமினல் குற்றம் தான். அப்படியானால், பொருட்களை பதுக்கி வைத்து பல மடங்கு இலாபம் வைத்து விற்கும் வர்த்தகர்கள் எம்மிடம் பணம் பறிப்பது வழிப்பறி இல்லையா? நியாயமற்ற முறையில் பணம் அபகரிப்பதும் திருட்டு தான். வியாபாரம் என்ற பெயரில் வழிப்பறி செய்யும் வணிகர்களும் கிரிமினல் குற்றவாளிகள் தான்.
அப்படியானால், இங்கே ஒரு கேள்வி எழலாம். விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் குற்றச் செயல்கள் குறைந்திருந்தன என்று சொல்லப் படுவது உண்மை இல்லையா?
அது ஓரளவு மட்டுமே உண்மை. இங்கே நாங்கள் கேட்க வேண்டிய கேள்வி, எத்தகைய குற்றங்கள் குறைந்திருந்தன? எப்படிப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டனர்?
திருட்டு, வழிப்பறி, பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்கள் நடக்கவில்லை. அதற்குக் காரணம், தெருக்களில் எந்நேரமும் புலிகள் ஆயுதங்களுடன் நடமாடினார்கள்.
அதனால் இளம் பெண்களும் இரவில் எந்தப் பயமும் இல்லாமல் தனியாக நடமாட முடிந்தது.
குற்றவாளிகள் பிடிபட்டால் கடுமையான தண்டனை வழங்கினார்கள். குறிப்பிட்ட காலம், தமிழீழ குற்றவியல் சட்டம், நீதிமன்ற விசாரணை என்று நெகிழ்வுத்தன்மை காட்டினாலும் தண்டனைகளின் கடுமை குறையவில்லை.
வழிப்பறி செய்வோர், வீடுடைத்து திருடுவோர் போன்ற குற்றவாளிகள் பெரும்பாலும் ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்திருப்பார்கள்.
கசிப்பு என்ற கள்ளச்சாராயம் காய்ச்சுவோரும் அப்படித் தான். ஊருக்கு ஒதுக்குப்புறமாக குடிசை கட்டி வாழும் ஒடுக்கப்பட்ட மக்கள் தான் அதில் ஈடுபட்டனர்.
அவர்களது குற்றங்களுக்கு தண்டனையாக சுட்டுக் கொன்று தெருவில் போட்டாலும் கேட்பதற்கு யாரும் இருக்கவில்லை.
பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் தான் குற்றச்செயல்களில் ஈடுபடுவார்கள். உலகம் முழுவதும் அது தான் யதார்த்தம். ஈழமும் அதற்கு விதிவிலக்கு அல்ல.
புலிகள் தலைமறைவாக இயங்கிய ஆரம்ப காலகட்டங்களில் சமூகவிரோதிகள் என்ற பெயரில் பலரைச் சுட்டுக் கொன்றனர்.
மின்கம்பத்தில் கட்டப்பட்ட சடலத்தில் என்னென்ன குற்றங்களுக்காக தண்டனை வழங்கப் பட்டது என்று எழுதப் பட்டிருக்கும்.
இந்த நடவடிக்கை காரணமாக, பின்னர் புலிகளின் நேரடி ஆட்சி நடந்த காலத்தில் யாரும் உயிர் அச்சம் காரணமாக குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை.
இதைத் தான் விஜயகலா மகேஸ்வரன் தனது உரையில் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார். அதாவது, புலிகள் செய்த மாதிரி கடுமையான தண்டனை வழங்கினால் குற்றச் செயல்கள் குறையும் என்று சொல்லாமல் சொல்லி இருந்தார்.
இன்னொருவிதமாக சொன்னால், சவூதி அரேபியாவில் உள்ள மாதிரி சாதாரண திருட்டுக்கும் கை வெட்டுவது போன்ற கடுமையான தண்டனைகள் கொண்டு வரப் பட்டால் மட்டுமே நாடு உருப்படும் என்பதே விஜயகலாவின் வாதம்.
இதையே அஸ்கிரிய பௌத்த சங்க மடாதிபதியும் “கோத்தபாய ராஜபக்சே ஹிட்லர் மாதிரி ஆட்சி நடத்த வர வேண்டும்” என்றார். இரண்டு பேரும் ஒரே கருத்தை தான் வெவ்வேறு விதமாகக் கூறி உள்ளனர்.
தமிழ்த் தேசியவாதிகள் விரும்புவது போல புலிகளின் ஆட்சி நடந்தாலும், சிங்களத் தேசியவாதிகள் விரும்புவது போல ஹிட்லரின் ஆட்சி நடந்தாலும், எல்லாக் குற்றங்களையும் முற்றாக ஒழிக்கப் போவதில்லை.
பெரிய குற்றங்களை கண்டுகொள்ளாமல் சிறிய குற்றங்களுக்கு தண்டனை கொடுப்பதால் எந்தப் பிரயோசனமும் இல்லை. அதனால் சமூகம் திருந்தப் போவதில்லை.
குற்றங்கள் நடப்பதற்கான சமூக- பொருளாதாரக் காரணிகள் நீடிக்கும் வரையில் குற்றங்களும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.
சிறிது காலம் ஆயுதங்களுக்கு பயந்து அடங்கி இருக்கலாம். அந்த அச்சம் போன பின்னர் குற்றங்கள் மீண்டும் தலைதூக்கும்.
அது தான் இப்போது யாழ்ப்பாணத்தில் நடக்கிறது. ஒரு நச்சு மரத்தை வேரோடு வெட்டிச் சாய்க்காமல் கிளைகளை மட்டும் வெட்டுவதால் எந்தப் பிரயோசனமும் இல்லை. ஆனால், இதைத் தான் பலர் தீர்வு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
-கலையரசன்-