முன்னைய மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தில் பாதுகாப்பு செயலாளராக நிர்வாக சேவையில் ஈடுபட்டிருந்த கோத்தபாய ராஜபக்ஷ மஹிந்த தரப்பில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என்ற கருத்துக்கள் பலமாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
அவரும் அதற்கான தயார்படுத்தல்களில் ஈடுபட்டு வருவதாகவே தெரிகிறது. இந்நிலையில் கோத்தபாய ராஜபக்ஷ அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடப் போகின்றாராயின் அவரிடம் தமிழ் பேசும் மக்களின் சார்பில் கேட்கப்படவேண்டிய பல கேள்விகள் உள்ளன.
அதன்படி இவ்வாரம் கோத்தபாய ராஜபக் ஷவிடம் பல்வேறு கேள்விகளுக்கான பதிலைப் பெறுவதற்காக அவரை சந்தித்தேன்.
எனக்கு வழங்கப்பட்டிருந்த குறிப்பிட்ட காலநேரத்தில் முடியுமானவரை தமிழ் பேசும் மக்களின் சார்பில் அவரிடம் கேள்விகளை எழுப்பினேன். அவர் எனது கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளித்தார் என்பதைப் பார்ப்போம்.
Q: உங்கள் ஆட்சிக்காலப்பகுதியில் காணாமல்போனோர் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் திருப்தி தருகின்றனவா?
A: யுத்தம் முடிந்ததும் நாங்கள் ஒரு புள்ளிவிபரக்கணக்கெடுப்பை செய்தோம். அந்தக் கணக்கெடுப்பை புள்ளிவிபரத்திணைக்களமே செய்தது.
அந்தக் கணக்கெடுப்பில் சர்வதேச சமூகமோ, புலம்பெயர் மக்களோ மகிழ்ச்சி அடைய முடியாத பெறுபேறே வந்தது.
அந்த அறிக்கையின்படி இக்காலப்பகுதியில் புலிகள் உறுப்பினர்கள் உட்பட 7ஆயிரம் பேரளவிலேயே காணாமல்போயுள்ளதாக கூறப்படுகின்றது.
அதேபோன்று யுனேஸ்கோ அமைப்பு எமது அரசாங்கத்திற்கு தெரியாமல் வடமாகாணத்துடன் இணைந்து ஒரு கணக்கெடுப்பை நடத்தியது.
அதில் மூவாயிரம் பேரளவிலேயே எண்ணிக்கை காணப்பட்டது. இராணுவம் பலரை முகாம்களில் மறைத்து வைத்திருப்பதாக சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். அது முழுமையான பொய்யான தகவலாகும்.
எம்மிடம் இருந்தவர்கள் தொடர்பில் எங்களிடம் தரவுகள் இருந்தன. ஒருதரப்பினரை புனர்வாழ்வு அளித்து சமூகமயப்படுத்தினோம்.
மற்றுமொரு தரப்பினர் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். யுத்தம் முடிந்தபோது இவ்வாறு 4ஆயிரம் பேர் வரையில் இருந்தனர்.
எனினும் 2014ஆம் ஆண்டு ஆகும்போது 290 பேர் இருந்தனர். அவர்களையும் உறவினர்களும் சட்டத்தரணிகளும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தோம்.
எம்மிடம் இன்னும் பலர் இருப்பதாக அதிகமானோர் நம்பினர். ஆனால் அப்படி யாரும் எம்மிடம் இல்லை.
Q: யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ?
A: அவை வெறும் குற்றச்சாட்டுகள் மட்டுமேயாகும். இது தொடர்பில் ஆராய முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தலைமையில் நாம் இராணுவக்குழுவொன்றை நியமித்தோம்.
இந்தக் குற்றச்சாட்டுக்களில் உண்மையுள்ளதா என விசாரிக்குமாறு கோரினோம். யாராவது அவ்வாறு சம்பந்தப்பட்டவர்கள் இருக்கின்றார்களா என கேட்டோம்.
மேலும் இது தொடர்பில் விசாரணை நடத்திய ஐ.நா. ஏன் யுனெஸ்கோவின் அறிக்கையை பரிசீலனை செய்யவில்லை? யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் தப்பித்து வந்தவர்களை இராணுவம் எவ்வாறு பார்த்துக்கொண்டது என்பதை இந்த நாட்டு மக்கள் பார்த்தனர்.
மக்களை எவ்வாறு பார்த்துக்கொண்டனர் என்பது மக்களுக்குத் தெரியும். அது வெளிப்படையாகவே முன்னெடுக்கப்பட்டது.
புல்மோட்டைக்கு கடற்படையினால் மக்கள் மீட்கப்பட்டு கொண்டுவந்து இறக்கப்பட்டபோது அவர்களை முதலில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட மருத்துவக்குழாமே பொறுப்பேற்றது.
யுத்தம் என்பது இனிமையானது அல்ல. உலகில் எங்குமே யுத்தம் என்பது இனிமையற்றதுதான். பயங்கரவாதிகளுடன் யுத்தம் செய்வது அதனை விடக்கடினமானது.
எதிரி எம்மைத் தாக்கும்போதும் நாங்கள் அவர்களை தாக்கும்போதும் வரையறையற்ற சேதங்கள் ஏற்படலாம்.
ஆனால் அது எந்த யுத்தத்திலும் இருக்கும். எமக்கு யுத்தத்தை முடிக்கும் தேவை இருந்தது.பொதுமக்களை யுத்தத்திலிருந்து மீட்டெடுக்க பாரிய அர்ப்பணிப்பை செய்தோம். புலிகள் மக்களை மனிதக்கேடயமாக பயன்படுத்தினர்.
கிளிநொச்சி வீழ்ந்த பின்னர் பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்திற்கு வந்தபோது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டனர்.
தற்கொலைத் தாக்குதலும் நடத்தப்பட்டது. அவ்வாறு மக்கள் தடுக்கப்பட்டனர். இந்நிலையில் இராணுவம் எவ்வாறான மனிதாபிமான சேவையை மக்களுக்கு வழங்கியது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
பொதுமக்களை தாக்குவது தொடர்பான எவ்விதமான பொதுநோக்கமும் இராணுவத்திடம் இருக்கவில்லை. அது அக்காலத்தில் அங்கிருந்த சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்குத் தெரியும்.
ஆனால் இராணுவம் இவ்வாறு பொதுநோக்கத்துடன் செயற்பட்டதாக காட்டுவதற்கு ஐ.நா. அதிகாரிகளும் புலம்பெயர் மக்களும் முயற்சிக்கின்றனர்.
யுத்தத்தின் போது ஏதாவது நடந்திருக்கலாம். ஆனால் பொதுவான நோக்கம் ஒன்று இருக்கவில்லை. நாம் உணவு அனுப்பினோம், மருந்து அனுப்பினோம், பாதுகாப்பு வலயங்களை உருவாக்கினோம்.
கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் இருந்தோம். உலக உணவுத்திட்டத்தின் பிரதிநிதிகள் அங்கிருந்தனர், தமிழ் அரசாங்க அதிகாரிகள் அங்கிருந்தனர்.
அவர்கள்தான் இந்தளவு எண்ணிக்கை பொதுமக்கள் இருப்பதாக எமக்கு தகவல் தந்தனர். அதற்கேற்றவாறு உணவும் மருந்தும் அனுப்புமாறு எமக்குக் கூறினர்.
இலட்சக்கணக்கில் இறந்ததாகவும் 40 ஆயிரம் பேர் இறந்ததாகவும் கூறுவது மிகவும் பொய்யானதகவல்கள்.
Q: யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் வெள்ளைக்கொடியுடன் சரணடையவந்த புலித்தலைவர்களை சுட்டுக்கொன்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ?
A: அது முற்றுமுழுதாக ஒரு பொய்யான குற்றச்சாட்டு. யுத்தம் முடிவடைய முன்பாக அப்போதைய இலங்கைக்கான நோர்வே தூதுவர் என்னைத் தொடர்புகொண்டு 50 பேர்கொண்ட குழுவினர் இருப்பதாக கூறினார்.
பின்னர் அதனை உறுதிப்படுத்துவதாக அவர் என்னிடம் கூறினார். அதன் பின்னர் அவர் என்னைத் தொடர்புகொண்டு தனக்கு அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்த முடியாமல் போனதாக தெரிவித்தார். தற்போது அவர் கூட இந்த விடயங்களை வெளியில் கூறாமல் இருக்கின்றார்.
Q: யுத்தம் முடிவடைய எத்தனை தினங்களுக்கு முன்பாக நோர்வே தூதுவர் உங்களை தொடர்புகொண்டார். ?
A: ஒரு தினத்துக்கு முன்பாகவே என்னைத் தொடர்புகொண்டார். இங்கு ஒரு விடயத்தை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.
யுத்தகளம் தொடர்பான எந்தவிதமான கள அறிவும் அற்றவர்களே இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
நீங்கள் ஒரு விடயத்தை சிந்தித்துப்பாருங்கள். களப்பிலிருந்து வருகின்ற மக்கள் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதை நாம் கண்டோம்.
அதாவது யுத்தகாலத்தில் இந்தப்பக்கம் இருந்து யுத்தம் செய்துகொண்டு இருக்கும் ஒரு இராணுவ வீரரால் புலிகளின் நடேசன் சரணடைய வருகின்றார் என்பதை அறிந்துகொள்ள முடியுமா? அல்லது புரிந்துகொள்ள முடியுமா? வெள்ளைக்கொடி ஏந்திவந்தாலும் அது தெரிந்திருக்குமா? அதுவும் இருளில் அங்கிருந்து வருபவரை எவ்வாறு அடையாளம்காண்பது?
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் இவ்வாறு வந்ததாக எந்தவிதமான உறுதிப்படுத்தும் தகவல்களும் இல்லை. வெள்ளைக்கொடியுடன் வருபவர்களை இராணுவ வீரர்களால் அடையாளம் காண முடியுமா? சரணடைய வந்தவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதற்கு எவ்விதமான ஆதாரங்களும் இல்லை.
Q: சரி.அவர்களுக்கு உயிரைப்பாதுகாத்துக்கொள்ளும் எண்ணம் இருந்திருந்தால் அவர்கள் என்ன செய்திருக்கவேண்டும்?
A: அவர்களுக்கு அதற்கு அதிகளவான சந்தர்ப்பங்கள் இருந்தன. ஆனால் யுத்தத்தின்போது புலித்தலைவர்களை இராணுவ வீரர்கள் உடனடியாக அடையாளம் காண முடியுமா? வேண்டுமெனில் பிரபாகரனை மட்டும் இராணுவ வீரர்களினால் அடையாளம் காண முடியும்.
ஏனையவர்கள் தொடர்பில் புகைப்படம் கூட இருக்கவில்லை.பொட்டு அம்மானை நாம் கண்டிருக்கவில்லை.
பொட்டுஅம்மான் இன்று இந்த கொழும்பு நகரில் நடந்து சென்றால் கூட எம்மால் அடையாளம் காண முடியாது. யுத்தகளத்தில் இருப்பது சாதாரண இராணுவ வீரர்கள்.
அந்த சாதாரண இராணுவ வீரர்களுக்கு புலித்தலைவர்களை அடையாளம் காண முடியுமா? பெயர்கள் கேள்விப்பட்டிருந்தாலும் அவர்களின் உருவம் தெரியாது.
Q: நோர்வே தூதுவர் உங்களிடம் சரியாக என்ன கூறினார்?
A: 50 பேர் கொண்ட குழுவினர் இருப்பதாக கூறினார்.அதாவது விருப்பத்துடன் இருப்பதாக கூறினார். அது தொடர்பில் பின்னர் தான் தகவல் தருவதாக கூறினார். ஆனால் அதன்பின்னர் அவரால் குறித்த 50 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என்று கூறினார்.
எனவே இந்தக்குற்றச்சாட்டை நான் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றேன். அவர்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள எண்ணியிருந்தால் அதற்கான நிறைய சந்தர்ப்பங்கள் இருந்தன.
அவர்கள் பொதுமக்களுடன் வந்திருக்கலாம். நீங்கள் ஒரு விடயத்தை புரிந்துகொள்ளுங்கள். புலித்தலைவர்கள் பலர் மக்களுடன் வந்து இராணுவத்திடம் சரணடையாமல் புனர்வாழ்வும் பெறாமல் இந்தியாவுக்கு சென்று அங்கிருந்து மேற்குலக நாடுகளுக்கு சென்றுள்ளனர். பிரான்ஸில் கூட பலர் இருக்கின்றனர்.
Q: அதில் புலித்தலைவர்கள் உள்ளனரா?
A: ஆம், புலித்தலைவர்கள் இவ்வாறு சென்று வெளிநாடுகளில் இருக்கின்றனர். புலிகளிடம் விமானப்படைப்பிரிவு இருந்தது. விமானிகளும் அவர்களிடம் இருந்தனர். எமது இராணுவம் எத்தனை விமானிகளை பிடித்தது?ஒருவர் கூட எம்மிடம் சிக்கவில்லை.
Q: என்ன நடந்தது அவர்களுக்கு?
A: அதைத்தான் நானும் கேட்கின்றேன் அவர்கள் எங்கே? நாம் அடையாளம் கூட காணவில்லை. அந்த விமானிகள் பிரபாகரனுடன் புகைப்படம் எடுத்திருந்தனர். அது பிரபலமான புகைப்படமாகும்.
அவர்கள் இன்று வெளிநாடுகளில் இருப்பார்கள். எத்தனை பேர் அவ்வாறு தப்பித்துச் சென்றுள்ளனர் தெரியுமா? காரணம் இராணுவத்தினரால் அவர்களை அடையாளம் காண முடியாது.
பிரபாகரனின் தந்தை மற்றும் தாயை பாதுகாப்பாக மீட்டெடுத்தோம். அத்துடன் சூசையின் மனைவியை நாங்கள் மீட்டெடுத்தோம். அவர் தற்போது வெளிநாட்டில் இருக்கின்றார். கடலில் வைத்தே அவரை மீட்டெடுத்தோம்.
அதுபற்றி யாரும் பேசவில்லை.காணாததைப்பற்றி பேசுகிறார்கள். கண்டதைப்பற்றி பேசுவதில்லை.சூசையின் மனைவியை நடுக்கடலில் வைத்து பிடித்ததும் அவர் தான் யார் என்பதை கூறினார். அவர்களை அழைத்து வந்து நாம் பாதுகாத்தோம்.
Q: பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் விவகாரம்?
A: அது ஒரு பொய்யான குற்றச்சாட்டு. பாலச்சந்திரனைப் பிடித்து வைத்திருப்பதாக யாரும் எமக்கு கூறவில்லை. அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி மட்டுமே எமக்குத் தெரியும்.
Q: ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா?
A:மஹிந்த ராஜபக் ஷவுடனேயே மக்கள் சக்தி இருக்கிறது. நான் அரசியல் செய்ததில்லை. நான் பாதுகாப்புச் செயலாளராக எனது சேவையை செய்தேன்.
பாதுகாப்பு செயலாளராவே இந்த நாடு என்னைத் தெரிந்து கொண்டது. யுத்தத்தை நிறைவு செய்தல் மற்றும் நகர அபிவிருத்தி என்பவற்றின் ஊடாகவே மக்கள் என்னைத் தெரிந்து கொண்டனர். அதன்படி மக்கள் மத்தியில் இதுதொடர்பில் ஒரு கருத்து உருவாகியிருக்கிறது.
என்னை சந்திக்கும் அனைவரும் நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டுமென கூறுகின்றனர்.என்னால் வேலைசெய்ய முடியும் என்று மக்கள் நம்புகின்றனர்.
ஆனால் நான் அரசியல் செய்தது இல்லை என்பது உண்மையாகும். எனது குடும்பத்தில் அனைவரும் அரசியல்வாதிகள். நான் அரசியல் செய்யவில்லை. நான் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று வெளிநாட்டில் இருந்தேன். 2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியானதும் பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்தேன்.
தற்போது மஹிந்த ராஜபக் ஷவுக்கே மக்கள் சக்தி இருக்கிறது. எனவே மஹிந்த ராஜபக் ஷவே வேட்பாளரை தெரிவுசெய்து அறிவிப்பார்.
இன்னுமொரு வேட்பாளராக பஷில் ராஜபக் ஷவின் பெயரும் காணப்படுகின்றது.ஆனால் பஷில் ராஜபக் ஷ தான் போட்டியிட மாட்டேன் எனக் கூறியிருக்கின்றார். மஹிந்த ராஜபக் ஷவுக்கும் பஷில் அதனைக் கூறியிருப்பார்.
எப்படியிருப்பினும் யார் வேட்பாளர் என்பதை மஹிந்த ராஜபக் ஷவே தெரிவு செய்வார். யார் வேட்பாளராக வந்தாலும் இந்த நாட்டுக்கு நான் சேவையாற்ற முடியும்.
மஹிந்த ராஜபக் ஷவின் தலைமையில் உருவாகப்போகும் அரசாங்கத்தில் எனது பொறுப்பை நான் வகிப்பேன். அதில் பஷில் ராஜபக் ஷவிற்கும் பாரிய பொறுப்பு இருக்கும்.
மஹிந்தவின் தலைமைத்துவமின்றி மக்கள் யாரையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தற்போதைய அரசியலமைப்பின்படி பிரதமருக்கு பாரிய அதிகாரங்கள் உள்ளன.
பாராளுமன்றத்திற்கு அதிகாரங்கள் உள்ளன. எனவே அந்த அதிகாரம் மஹிந்த ராஜபக் ஷவுக்கே செல்லும்.கடந்த காலத்தில் நாம் சகோதரர்கள் என்ற வகையில் பொறுப்புடன் செயற்பட்டோம்.
Q: மஹிந்த ராஜபக் ஷ என்ன முடிவெடுத்தாலும் ஜனாதிபதி வேட்பாளர் ஆவது தொடர்பில் உங்களுக்கு எண்ணம் இருக்கின்றதா?
A: நான் அதற்கு தயார். என்னை மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்தால் போட்டியிட்டு நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்க நான் தயாராக இருக்கின்றேன். காரணம் என்னை வருமாறு கோரிக்கை எழுந்திருக்கின்றது. மஹிந்த கோரிக்கை விடுத்தால் நான் ஜனாதிபதி வேட்பாளராக தயாராகவே இருக்கின்றேன்.
Q: நீங்கள் அமெரிக்க குடியுரிமை உள்ளவர்., எனவே அது உங்களது வேட்பாளர் ஆகும் எண்ணத்திற்கு தடையாக அமையுமா?
A: இங்குள்ள அரசியல்வாதிகள் அவ்வாறு கூறினாலும் அமெரிக்கா குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட செயற்பாட்டில் இறங்காது என்று நான் நம்புகின்றேன்.
அது தவறானதுமாகும். அமெரிக்கா எப்போதுமே தனிப்பட்ட சுதந்திரம் குறித்து பேசுகின்றது. இது எனது தனிப்பட்ட சுதந்திரம்.அமெரிக்கா அவ்வாறு நடந்துகொள்ளும் என எதிர்பார்க்க முடியாது. அதற்கு எந்தவிதமான ஒரு காரணமும் கிடையாது.
தற்போது அரசாங்கத்தில் இருக்கும் அனைவரும் என்னைத் தடுப்பதிலேயே குறியாக இருக்கின்றனர்.
இதுவா ஜனநாயகம்? . எவராவது ஒருவர் தேர்தலில் நிற்பதற்கு ஏன் பயப்படவேண்டும்? அதனை ஏன் தடுக்க முயற்சிக்க வேண்டும்? அவர்கள் திறமையானவர்கள், மக்கள் செல்வாக்கு உடையவர்கள் என்றால் ஏன் என்னைத் தடுக்க முற்படவேண்டும்? சரியான ஜனநாயகம் இருக்குமென்றால் நான் போட்டியிடுவதை வரவேற்கவேண்டும்.
Q: நீங்கள் சீனாவுக்குச் சென்று ஒரு மாதகாலமாக அரசியல் பயிற்சி பெற்றதாக கூறப்படுகின்றதே?
A: இல்லை, இல்லை. அது தவறான தகவல். 2015ஆம் ஆண்டு தேர்தல் முடிவடைந்ததும் அப்போது இருந்த சீனத்தூதுவர் என்னை அழைத்து சீனாவிலுள்ள பல்கலைக்கழகத்தில் எங்களது அனுபவத்தை பகிர்ந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார்.
நான் சரியென்று கூறினேன். ஆனால் நேரம் கிடைக்கவில்லை. அதேபோன்று தேர்தல் முடிந்த மறுதினமே சிங்கப்பூரின் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் சண்முகம் என்னை அழைத்து அங்குள்ள பல்கலைக்கழகத்தில் உரையாற்றுமாறு கூறினார். நான் அதை ஏற்று சிங்கப்பூர் சென்றேன். அதுபோன்று சீன விஜயமும் அமைந்தது.
Q: கோத்தபாய ராஜபக் ஷவினால் தமிழ், முஸ்லிம் வாக்குகளைப் பெற முடியாது என்ற கருத்து உள்ளது. இதை எப்படி நீங்கள் பார்க்கின்றீர்கள்?
A: 2015ஆம் ஆண்டு சிறுபான்மை மக்களின் வாக்குகள் மஹிந்த ராஜபக் ஷவுக்கு அதிகம் கிடைக்கவில்லை. பொதுபலசேனாவுக்கு நாங்கள் ஆதரவு என்ற பொய்ப்பிரசாரம் நிலவியதால் எமக்கு அந்த நிலைமை ஏற்பட்டது.
ஆனால் இன்று முஸ்லிம் மக்கள் உண்மையை புரிந்துகொண்டுள்ளனர். எனவே முஸ்லிம் மக்களின் வாக்குகளை என்னால் பெற முடியும்.
தமிழ் மக்களின் வாக்குகள் மஹிந்த ராஜபக் ஷவுக்கு கிடைக்கும். மஹிந்த ராஜபக் ஷவை நம்பி தமிழ் மக்கள் வாக்களிப்பர். அப்படியாயின் எனக்கு தமிழ் மக்களின் வாக்குகளையும் பெற முடியும்.
காரணம் தமிழ் மக்கள் மஹிந்த மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால் தமிழ் மக்கள் அவர்களுக்கு நாங்கள் எவ்வளவு சேவையாற்றினோம் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
எம்மைப்போன்று எவரும் தமிழ் பேசும் மக்களுக்கு சேவையாற்றவில்லை. தமிழ் தலைவர்களுக்கு நாம் தேவையற்றவர்களாக இருக்கலாம்.
ஆனால் தமிழ் மக்களுக்கு நாம் தேவைப்படுகின்றோம். நாம் தான் சமாதானத்தைக் கொண்டுவந்தோம். நாம்தான் அபிவிருத்தி செய்தோம். கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நாம் வீடுகள் வழங்கினோம்.
Q: நீங்கள் ஆட்சிக்கு வந்தால் தேசிய பிரச்சினையைத் தீர்க்கும் விடயத்தில் என்ன அணுகுமுறையைப் பின்பற்றுவீர்கள்.?
A: இதனைத்தருவேன் என்று என்னால் இப்போது கூற முடியாது. ஆனால் தமிழ், முஸ்லிம் , சிங்களம் என யாராக இருந்தாலும் அனைவரும் கௌரவமான பிரஜையாக இலங்கையர் என்ற ரீதியில் வாழும் சூழலை நான் உருவாக்குவேன்.
அனைத்து மக்களுக்கும் வீடுகளை பெற்றுக்கொள்ளும் உரிமை, தொழில்பெறும் உரிமை, வாழும் உரிமை கல்வி கற்கும் உரிமை என்பவற்றை சமமான முறையில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.
தமக்கு விருப்பமான மதத்தை பின்பற்றவும் விருப்பமான வியாபாரத்தை செய்யவும் சந்தர்ப்பத்தை உறுதிப்படுத்துவேன். குறிப்பாக பல்கலைக்கழகத்துக்கு 2 இலட்சம் மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டால் அவர்கள் அனைவருக்கும் உயர்கல்வியைப் பெற்றுக்கொடுக்கும் நிலைமையை உருவாக்குவேன்.
Q: தமிழ் பேசும் மக்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்?
A: சிறுபான்மை மக்கள் ராஜபக் ஷமாரைப் பார்த்து பயப்படவேண்டாம். எம்மைப்பற்றி பொய்யான பிரசாரம் செய்யப்படுகின்றது. நாங்கள் ஒரு இனத்தைப் பார்த்து வேலைசெய்பவர்கள் அல்லர்.
ராஜபக் ஷமாரின் நெருங்கிய உறவினர்களாக தமிழர்களும் உள்ளனர். எனவே எம்மை நம்புங்கள். சிறந்த பௌத்தர்கள் அனைத்து இனமக்களையும் நேசிப்பார்கள். பௌத்தர்கள் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரானவர்கள் என்று தவறான பிரசாரம் செய்யப்படுகின்றது. நாம் அனைவருக்கும் சமமாகவே சேவையாற்றுவோம்.
செய்தி மூலம்: வீரகேசரி
நேர்கண்டவர் : ரொபட் அன்டனி