பட்டதாரி பெண் எரித்து கொல்லப்பட்டச் சம்பவம்..! எஸ்.ஐ இடமாற்றம்

ராமநாதபுரம் அருகே தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடலை அடையாளம் காண்பதில் குழப்பம் நிலவுகிறது. இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக எஸ்.ஐ மற்றும் தனிப்பிரிவு காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டியின் மகள் மாலதி(21). பி.ஏ.தமிழ் பட்டதாரியான இவரைக் கடந்த மாதம் 29-ம் தேதி முதல் காணவில்லை. கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரை காதலித்து வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மாலதியின் தாயார் கலைச்செல்வி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கை செல்லும் வழியில் ரயில்வே கேட் அருகில் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டிருப்பதாகவும், எலும்புகள் மற்றும் பெண்ணின் துணிகள் சில கிடப்பதாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் காணாமல் போன  மாலதி தான் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என அவரது குடும்பத்தினர் தரப்பில் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் எஞ்சியிருந்த எலும்புகளை சேகரித்த போலீஸார் உடல் கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் புகார் கூறப்பட்ட சிவக்குமாரை போலீஸார் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து உரிய நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டதாக உத்திரகோசமங்கை போலீஸார் மீது மாலதியின் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாலதி காணாமல் போன புகார் தொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்காத திருஉத்தரகோசமங்கை காவல்நிலைய சார்பு ஆய்வாளர் விவேகானந்தன், தனிப்பிரிவு காவலர் சடாமுனி ஆகிய இருவரும் ராமநாதபுரம் ஆயுதபடைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும். சம்பவ இடத்தில் கண்டு எடுக்கப்பட்ட எலும்புகள் பகுப்பாய்வுப் பரிசோதனைக்கு அனுப்பபட்டு இருப்பதாகவும், அதன் முடிவுகளுக்கு பின்னரே எரிக்கப்பட்டு கிடந்தது மாலதிதானா என தெரியவரும் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்கில் குழப்பம் நீடித்து வருகிறது.