தமிழகத்தில் காதலனை பார்க்கச் சென்ற காதலி கொடூரமான முறையில் எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வீரபாண்டி. இவரது மகள் மாலதிக்கும், கருங்குளத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அது நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு அதிகரித்துள்ளது. ஒரு கட்டத்தில் சிவக்குமார் தான் திருமணமானவன் என்பதை மறைத்து மாலதியை காதலிப்பதாக கூறியுள்ளார்.
மாலதி சென்னையில் படித்து வந்ததால், சென்னைக்கு சென்ற சிவக்குமார் அங்கு பணியாற்றிக் கொண்டே மாலதியுடன் பழக்கத்தை தொடர்ந்துள்ளார்.
இப்படி இவர்களின் பழக்கம் சென்று கொண்டிருந்த போது, ஒரு கட்டத்தில் மாலதி, சிவக்குமாரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தியுள்ளார்.
ஏற்கனவே தனக்கு திருமணமாகியுள்ள நிலையில், மீண்டும் ஒரு திருமணமா என்ற பயத்தில் சிவக்குமார் தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பி, மாலதியுடன் பேசுவதையே நிறுத்தியுள்ளார்.
சிவக்குமார் தன்னை தொடர்ந்து புறக்கணித்து வந்ததால், அதிர்ச்சியடைந்த மாலதி கடந்த 29-ஆம் திகதி சிவக்குமாரை தேடி அவரது சொந்த ஊரான கருங்குளத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு சென்ற அவர் அதன் பின் வீடு திரும்பவே இல்லை. இதனால் மாலாதியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்து, சிவக்குமார் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இதனால் பொலிசார் சிவக்குமாரை அழைத்து விசாரித்த போது, மாலதியுடன் பேசிப் பழகியதையும், அவர் தன்னை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து புறப்பட்டு வந்ததையும் ஒப்புக் கொண்ட அவர், மாலதி தஞ்சாவூர் சென்றிருப்பதாகவும் அவரை திருப்பி அழைத்து வந்து ஒப்படைப்பதாகவும் பொலிசாரிடம் கூறியதால், அவரை கைது செய்யாமல் விசாரிக்காமல் பொலிசார் அவரை விடுவித்துள்ளனர்.
அதன் பின் பின் சிவக்குமார் போன் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. இதனால் விசாரணையை பொலிசார் தீவிரப்படுத்திய போது, சிவகுமாருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து சிவகுமார் ஊரான கருங்குளம் கிராமத்தின் கண்மாய் பகுதியில் முற்றிலும் எரிக்கப்பட்ட எலும்புக் கூடு கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அங்கு சென்று பொலிசார் பார்த்த போது, எலும்புக் கூடுகளுக்கு அருகில், மாலதி அணிந்திருந்த சால்வை மற்றும் வளையல்கள் கிடந்துள்ளன.
இருப்பினும் எரிக்கப்பட்டு எலும்புக் கூடாக இருப்பது மாலதி தான் என்பதை உறுதிப்படுத்த பொலிசார் மரபணு சோதனைக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
தலைமறைவாகியுள்ள சிவக்குமாரை பொலிசார் தேடி வருகின்றனர். அவரை கைது செய்தால் மட்டும் தான் உண்மை தெரியவரும் என்று கூறப்படுகிறது.
மேலும் முதலில் புகார் அளித்த போதே பொலிசார் உரிய விசாரணை மேற்கொண்டு இருந்தால், சிவக்குமார் தப்பித்திருக்க முடியாது என்று உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.