சென்னை மருத்துவர் தன்னை வீடியோ எடுத்து தொடர்ந்து மிரட்டியதால் கொலை செய்தேன் என மாணவி ஈஸ்வரி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருச்சி கல்லணை காவிரிக் கரை ஓரம் கடந்த 12-ஆம் திகதி சென்னையில் பிஸியோதெரப்பிஸ்டாக பணியாற்றும் மருத்துவர் விஜயகுமார் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்த நிலையில் இதில் ஈடுபட்ட மாணவி ஈஸ்வரி, தாராநல்லூர் மாரிமுத்து மற்றும் அவருடைய நண்பர்கள் மாநகராட்சி ஊழியர் கணேஷ், கும்பா (எ) குமார் உள்ளிட்டோரைக் கைது செய்துள்ளனர்.
பொலிசாரிடம் ஈஸ்வரி அளித்துள்ள வாக்குமூலத்தில், சிறுவயதிலேயே எங்கள் அம்மா இறந்ததால் அப்பா கஷ்டப்பட்டு வளர்த்தார்.
2013-ம் ஆண்டு நடந்த 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 498 மதிப்பெண் எடுத்து மாநிலத்திலேயே 2-வது இடம் பிடித்தேன்.
பிளஸ் 2-வில் 1183 மதிப்பெண் எடுத்து மாவட்ட அளவில் 2-ம் இடம் பெற்றேன். இந்நிலையில் சென்னையில் சி.ஏ. சேர்ந்து படித்து வருகிறேன். சி.ஏ. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றதும், நுங்கம்பாக்கத்தில் தங்கியிருந்த நான், சென்னை பாரிமுனையில் ஒரு ஆடிட்டர் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்.
திருச்சிக்கு, சென்னையில் இருந்து ரயிலில் வருவது வழக்கம், அப்படி வரும்போது தான் மருத்துவர் விஜயகுமார் அறிமுகமானார். ரயில் பயணத்தில் என் செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டவர், அடுத்தடுத்து போனில் பேச ஆரம்பித்தார்.
ஒருநாள் எனக்கு உடல்நிலை சரியில்லை. எனக்குப் போன் செய்த அவர், அவரது கிளினிக்கிற்கு கிளம்பி வருமாறு கூறினார்.
நான் அங்கு சென்ற நிலையில் என்னை சீரழித்துவிட்டார். இது குறித்து நான் அவரிடம் கேட்டபோது என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார்.
என்னை திருமணம் செய்ய விஜயகுமாரை நான் வற்புறுத்தி வந்த நிலையில் அவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி, 2 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் என்னோடு இருந்ததை வீடியோவாக எடுத்து வைத்திருப்பதாகவும் அவரின் ஆசைக்கு மீண்டும் பணியவில்லை எனில் வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்றும் என்னை மிரட்டினார்.
இதனால் விஜயகுமாரை கொல்ல திட்டமிட்டேன்.
அதன்படி திருச்சி மாநகராட்சி துப்புரவுப் பணியாளர் மாரிமுத்துவிடம் நடந்த சம்பவத்தை கூறி உதவி கோரினேன்.
அடுத்து, மாரிமுத்து மற்றும் அவரின் நண்பர்கள் துணையுடன் திருச்சியில் விஜயகுமாரை கொல்ல முடிவெடுத்தோம்.
இதையடுத்து அவருக்கு போன் செய்து திருமணம் குறித்துப் பேச வேண்டும் என அழைத்தேன். அவரும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்துக்கு வந்தார்.
அங்கு அவரை மாரிமுத்துவும் அவரின் கூட்டாளிகளும் கத்தியால் குத்தி கொன்றனர் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.