‘கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு இலவச விசா!’ – ரஷ்ய அதிபர் அதிரடி அறிவிப்பு

ரஷ்ய நாட்டுக்கு வரும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு இந்த ஆண்டு முழுவதும்  இலவச விசா வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

விளாடிமிர் புதின்

ஃபிஃபா உலகக்கோப்பைக் கால்பந்தாட்டம் நேற்று நடந்து முடிந்தது. இந்தப் போட்டிகள் ரஷ்யாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றன. கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த கால்பந்துப் போட்டியால் மொத்த ரஷ்யாவும் விழாக்கோலம் பூண்டது. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியைக் காண  ரஷ்யா, பிரான்ஸ், குரோஷியா ஆகிய மூன்று நாட்டு அதிபர்களும் மாஸ்கோ வந்திருந்தனர். கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் குரோஷியா அணிகள் மோதின. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த மகிழ்சியை பிரான்ஸ் வீரர்களுடன் அந்நாட்டு அதிபர் இமானுவல் மேக்ரூன் சிறப்பாகக் கொண்டாடினார். பின்னர் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

புதின்

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், “ரஷ்யாவில் இந்த வருடம் கால்பந்தாட்ட நிகழ்ச்சிகள் நடந்தது மிகவும் மகிழ்சியாக உள்ளது. இந்தத் தொடரை நாங்கள் மிகவும் சிறப்பாக நடத்தி முடித்துள்ளோம் என்பதை நினைக்கும்போது சற்றே பெருமையாக உள்ளது. இந்தப் பெரும் நிகழ்வை வெற்றிகரமாக நடத்த உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள். ரஷ்ய மக்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கால்பந்தாட்ட ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” எனக் கூறினார்.

விளாடிமிர் புதின்

தொடர்ந்து பேசிய அவர், “கால்பந்தாட்ட ரசிகர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் 2018-ம் ஆண்டு முழுவதும் விசா இல்லாமல் ரஷ்யாவுக்கு வரலாம்” என அறிவித்துள்ளார்.  உலகக்கோப்பைப் போட்டிகள் தொடங்கும் முன், ரஷ்யா வரவிரும்பும் கால்பந்தாட்ட ரசிகர்கள் அனைவரும் இலவசமாக வரலாம் என அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. அதன்படி அனைவருக்கும் இலவச விசாவும் வழங்கப்பட்டது. கால்பந்தாட்டப் போட்டியைக் காண ரஷ்யா வந்தவர்களுக்கு சில நிபந்தனைகளுடன்,  ‘ரசிகர் அடையாள அட்டை’ மட்டும் வழங்கப்பட்டது. இந்த அட்டை  வரும் ஜூலை 25-ம் தேதியுடன் காலாவதியாக உள்ளது. ஆனால், தற்போது ரஷ்ய அதிபர் அதே ரசிகர் அடையாள அட்டையைக்கொண்டு இந்த அண்டு முழுவதும் விசா இல்லாமல் ரஷ்யாவுக்கு வரலாம் எனத் தெரிவித்துள்ளார். அதிபரின் இந்த அறிவிப்பு அனைத்து ரசிகர்களையும் மிகுந்த மகிழ்சியில் ஆழ்த்தியுள்ளது.