கேரளாவில் எப்படி நுழைந்தது நிபா வைரஸ்?- ஆய்வில் கண்டுபிடித்த அதிர்ச்சித் தகவல்!

கேரளாவில் நிபா வைரஸ் எப்படிப் பரவியது என்பதுகுறித்து அம்மாநில சுகாதார அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். அதில், தனி ஒருவரால் வைரஸ் பரவியதாகத் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நிபா

கேரளாவில், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பலர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு, அதில் 20-க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அங்கு, வைரஸை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகளை எடுத்தது கேரள அரசு. அதனால், மிக விரைவில் வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த வைரஸ்கள் பழந்திண்ணி வௌவால்கள் மூலம் பரவுவதாக முதலில் கூறப்பட்டது, பின்னர் அவை விலங்குகள், மனிதர்களின் மூலமாகப் பரவுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கேரளாவுக்குள் முதன்முதலாக எப்படி நிபா வைரஸ் வந்தது? என்பது பற்றிய ஆய்வில் அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அதில் 26 வயதான முகமது சபித் என்ற இளைஞரால்தான் நிபா வைரஸ் பரவியதாகத் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

”இந்த இளைஞர், வளைகுடா நாட்டில் எலெக்ட்ரீஷியனாகப் பணியாற்றிவந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் கேரளா திரும்பும்போது அவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. மே 2-ம் தேதி, அதிக காய்ச்சலுடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் புறநோயாளியாகச் சென்றுள்ளார். முதலில் அவருக்கு சாதாரண சிகிச்சையே வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மே 3-ம் தேதி  காய்ச்சல் அதிகமானதால், அவர் அதே மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர், மே 4-ம் தேதி காய்ச்சல் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் சென்று, மே 5-ம் தேதி சபித் மருத்துவமனையிலேயே இறந்துள்ளார்.

மருத்துவமனையில் சபித் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த மூன்று நாள்களில் மட்டும், அதே மருத்துவமனையில் இருந்த 10 பேருக்கு நிபா வைரஸ் பரவியுள்ளதாக சுகாதாரத்துறை  அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், நிபா வைரஸால் இறந்த செவிலியர் லினியும் அதே மருத்துவமனையில் பணிபுரிந்தார் என்றும், அவர்தான் மூன்று நாள்களாக  சபித்தை கவனித்துவந்தார் என்பதும் தெரியவந்துள்ளது. ஆனால், சபித் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது அவருக்கு ரத்தப் பரிசோதனை எதுவும் செய்யவில்லை. அவருக்கு சாதாரண காய்ச்சலுக்கு அளிக்கப்படும் சிகிச்சையே வழங்கப்பட்டுள்ளது. அதன்பின், பலரும் இதே அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, நிபா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இளைஞர் சபித் மூலம் அவரின் குடும்பத்தார் மூன்று பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. பிறகு, மாநிலம் முழுவதும் பலருக்கு பரவத் தொடங்கியதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சபித் மூலம் மட்டுமே 17 பேருக்கு வைரஸ் பரவி, அனைவரும் இறந்துள்ளனர்” என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.