மும்பை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜானவி கபூரிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு “நான் பிரதமர் ஆக முடியும் என நினைக்கிறேன்” என கூறிய பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை:
மராத்தியில் காதலுக்கும், பாடல்களுக்கும் முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்ட படம், ‘சாய்ரத்’ ஆகும். இந்தப் படம் வசூலில் சக்கைப்போடு போட்டது.
இப்போது இந்தப் படம் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜானவி, நடிகர் இஷான் கட்டார் இணைந்து நடித்து ‘தடக்’ என்ற பெயரில் இந்தியில் தயாராகி உள்ளது. சஷாங் கைத்தான் இயக்கத்தில் எடுக்கப்பட்டு உள்ள இந்தப் படம் வரும் 20-ந்தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தை பிரபலம் ஆக்கும் வகையில் மும்பையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் படத்தின் கதாநாயகியான ஜானவி கபூரும், நாயகனான இஷான் கட்டாரும் கலந்துகொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் அவர்களிடம், “உங்கள் இருவரில் யாரால் இந்திய பிரதமர் ஆக முடியும்?” என கேள்வி எழுப்பினார்.
அப்போது சற்றும் தாமதிக்காமல் ஜானவி கபூர், “நான் பிரதமர் ஆக முடியும் என நினைக்கிறேன்” என பதில் அளித்தார். இந்த பதிலை யாரும் எதிர்பார்க்காததால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே ஜானவி சுதாரித்துக்கொண்டார். “சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். தயவு செய்து பத்திரிகைகளில் போட்டு விடாதீர்கள்” என்று கேட்டுக்கொண்டார்.
அதைக் கேட்டு அரங்கில் இருந்த அனைவரும் சிரித்து விட்டனர்.