சென்னை பிசியோதெரபிஸ்ட் கூலிப்படையினரால், திருச்சியில் கொல்லப்பட்ட சம்பவத்தில், கைதான மாணவி கொலை திட்டத்தை நிறைவேற்ற கூலிப்படையினருக்கு தன்னையே விலையாக கொடுத்த அதிர்ச்சி தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சென்னை தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட் ஆக பணிபுரிந்து வந்த விஜயகுமாரை , கடத்திச்சென்று கூலிப்படை வைத்து கொலை செய்ததாக சென்னை நுங்கம்பாக்கத்தில் தங்கி வேலை பார்த்துக் கொண்டே சி.ஏ. படித்து வந்த மாணவி ஈஸ்வரியை காவல்துறையினர் கைது செய்தனர். கூலிப்படையாக செயல்பட்ட மாரிமுத்து , கணேசன், குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நட்பாக பழகிய தன்னை ஆசைக்கு இணங்கவைத்து வாழ்க்கையை சீரழித்ததோடு, அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டு 2வது திருமணம் செய்து கொள்ள மிரட்டியதால் பிசியோதெரபிஸ்ட் விஜயகுமாரை தீர்த்து கட்டியதாக மாணவி ஈஸ்வரி வாக்குமூலம் அளித்திருந்தார்.
ஒரு மாணவி எப்படி கூலிப்படையினரை எளிதாக தொடர்பு கொள்ள முடிந்தது? அவருக்கு கூலிப்படையினரை அறிமுகப்படுத்தி வைத்தது யார் ? கூலிப்படையினருக்கு கொடுக்க 2 லட்சம் ரூபாய் மாணவிக்கு எப்படி வந்தது ? போன்ற கேள்விகளுக்கு விடை தேடி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மாணவி ஈஸ்வரி தன்னையே விலையாக கொடுத்து கூலிப்படையை தயார் செய்த அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உறையூரை சேர்ந்த மாணவியின் நண்பர் மூலமாக கூலிப்படை தலைவன் மாரிமுத்து அறிமுகமாகி உள்ளான். 2 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்ட நிலையில் அவரால் முழுத் தொகையை கொடுக்க இயலவில்லை என்று கூறப்படுகின்றது. பணத்திற்கு பதிலாக படுக்கையைக் பகிர்ந்து கொள்ள கூலிப்படையினர் நிர்ப்பந்தித்து உள்ளனர்.
அதன்படி கொலை நடப்பதற்கு முன்பாக கூலிப்படையினருடன் திருச்சி சித்ரா லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்துள்ளார் ஈஸ்வரி..! விஜயகுமாரை கொலை செய்த பின்னர், கூலிப்படையினர் மூவரும் காவிரி கரையில் மாணவியுடன் தனிமையை கழித்துள்ளனர். அதன் பிறகும் கூலிப்படையினர் அவரை விடாமல் தொடர்ந்துள்ளனர். இதையடுத்து, தான் பகுதி நேரமாக வேலைபார்த்து வந்த ஆடிட்டர் அலுவலகத்துக்கு போன் செய்த ஈஸ்வரி, தனக்கு உடல் நிலை சரியில்லை என்றும் சிகிச்சைக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது என்றும் கூறி உள்ளார் ஈஸ்வரி.
இதையடுத்து அலுவலகத்தில் இருந்து அவரது வங்கி கணக்கிற்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த பணத்தை எடுத்து கூலிப்படை தலைவன் மாரிமுத்துவிடம் கொடுத்த பின்னர் தான் ஈஸ்வரியை கூலிப்படையினர் விடுவித்துள்ளனர் என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, கூலிப்படையினரை மாணவியுடன் தங்குவதற்கு அனுமதித்த சித்ரா லாட்ஜில் விசாரணை நடத்திய காவல்துறையினர், மாணவி ஈஸ்வரிக்கு கூலிப்படையினரை அறிமுகம் செய்து வைத்த நண்பரை தேடிவருகின்றனர்.
செல்போனில் எடுத்து வைத்திருந்த ஆபாச வீடியோ இணையத்தில் வெளியாகி தனது வாழ்க்கை சீரழிந்து விடக்கூடாது என்பதற்காக தனது உடலை விலையாக கொடுத்து எதிரியின் உயிரை எடுத்துள்ளார் மாணவி ஈஸ்வரி என்கின்றனர் காவல்துறையினர்.
கூடா நட்பு என்றும் பெருங்கேடாய் முடியும் என்பதற்கு மாணவி ஈஸ்வரி, பிசியோதெரபிஸ்ட் விஜயகுமாருடன் கொண்ட பழக்கம் மட்டுமல்ல கூலிப்படையினர் உடனான தொடர்பும் ஒரு சான்று..!