சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் அப்பார்ட்மென்ட்டில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் 17 பேருக்கும் சென்னை மகிளா நீதிமன்றம் 15நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
அதே நேரத்தில் நீதிமன்ற வளாகம் பல நாட்களுக்கு பின்னர் பதற்றமான நிலைக்கும் சென்று திரும்பி இருக்கிறது.
12 வயது சிறுமியை கடந்த 7 மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தனியார் அபார்ட்மெண்டில் பணியாற்றி வந்த 17பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு 307,506(II) மற்றும் போக்ஸோ சட்டதின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை எழும்பூர் மாஜிஸ்ட்ரேட் சரிதா முன்பு 17பேரும் ஆஜர்படுத்தப்பட இருக்கவே, பதிவு செய்யபட்ட சட்டதின் படி பதிவு செய்து இருப்பதால் மூன்று ஆண்டுகள் தொடங்கி 10 ஆண்டுகள் வரையும், ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை கொடுக்கப்படும் என்பதால் தான் விசாரிக்க முடியாது என்பதால் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் காலை 11.10 மணி அளவில் 17 பேரும் கொண்டு வரப்பட்டனர்.
17 பேர் என்பதால் உடனடியாக விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாஜிஸ்ட்ரேட்டிடம் முக்கிய இடங்களில் கையெழுத்து பெறப்படாததால் அதற்கு தாமதமானது.
அது வரை 17 பேரும் மகிளா நீதிமன்றத்தின் வெளியில் அமரவைக்கப்பட்டிருந்தனர். அதன் பின்னர் மதியம் 1.20 மணி அளவில் அனைவரும் உள்ளே கொண்டு செல்லப்பட்டு நீதிபதி மஞ்சுளா முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர் .
அப்போது கீழ்பாக்கம் ஏசி சீராஜூதின் உள்ளே அழைக்கப்பட்டார். அதன் பின்னர் வழக்கு குறித்து விவரங்களை நீதிபதி முன்னர் தெரிவித்த பிறகு ஒவ்வொரின் பெயரையும் நீதிபதி உறுதி செய்தார்.
போலீசார் அடித்தார்களா என்று நீதிபதி கேட்டுள்ளார். அதன் பின்னர் ஜூலை 31 ஆம் தேதி(15 நாட்கள்) வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
அனைத்து விதமான நடைமுறைகளும் முடிக்கப் படவே 3.30 மணி நெருங்கியது. அதன் முன்னர் மகிளா நீதிமன்றம் முன்னர் வழக்கறிஞர்கள் குவிந்து கிடந்தனர்.
அதிக அளவில் போலீசார் முன்னர் குவிக்கப்பட்டனர். ஆனால் கூட்டம் அதிகரிக்கவே உயர் நீதிமன்ற துணை ஆணையர் சுந்தர வடிவேல் நீதிமன்றம் சுற்றி பாதுகாப்பை உறுதி செய்யவே மீண்டும் அதிக அளவில் போலீஸ் குவிக்கபட்டனர்.
அதன் பின்னர் சிறப்பு நடவடிக்கை குழு (SAG) அழைத்து வரப்பட்டனர். சரியாக 3.30 மணி அளவில் 17 பேரில் முகங்களும் மறைக்கப்பட்டு நீதிமன்ற அறையின் வெளியில் அழைத்து வரப்பட்டனர்.
எப்போதும் அழைத்து வரப்படும் வழி இல்லாமல் மாற்றுப்பாதையில் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரவே படிக்கட்டுகளில் பெண் காவலர்கள் பாதுகாப்புக்கு நிற்கவைக்கப்பட்டிருந்தனர்.
அதில் 26 வயது ஜெயராமன் என்பவரை முதலிலும் அதன் பின்னர் மற்றவர்களும் அழைத்து வரவே மூன்றாவது மாடியில் இருந்து இரண்டாவது மாடி அழைத்து வரப்படவே படிகளில் காத்திருந்த வழக்கறிஞர்கள் முதலில் வந்த ஜெயராமனை சரமாரியாக அடிக்க தொடங்கினர்.
தொடர்ந்து அவனையும் அதன் பின்னர் வந்த மூவரின் மீதும் கோபத்தை காட்டினார்.
ஜெயராமனை கீழே இழுத்து போட்டு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட கல்லூரி மாணவர்கள் கண்மூடிதனமாக தாக்கவே “ அய்யோ அம்மா “ என்று கத்தவே மொத்த நீதிமன்றமும் அதிர்ந்தது.
அனைத்து வழக்கறிஞர்களும் சம்பவ இடம் நோக்கி வரவே 17 பேரை இரண்டு பிரிவுகளாக பிரித்து சிபிஐ நீதிமன்றத்தில் பாதி பேரும் மகிளா நீதிமன்றத்தில் பாதி பேரும் பிரித்து வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் நீதிமன்ற வளாகம் முழுவதும் தீ-யாக பரவவே மொத்த கூட்டமும் அந்த பகுதியில் சூழ்ந்து கொண்டனர்.
சிறிது நேரத்தில் கூட்டம் கலைந்து விடும் என்று காத்திருக்கவே கூட்டம் கலையாமல் அப்படியே இருக்கவே பொறுத்திருந்து பார்த்த ஜெ.சி அன்பு, கூடுதல் ஆணையர் ஜெயராமன், கீழ்பாக்கம் துணை ஆணையர் ராஜேந்திரன், மாதவரம் துணை ஆணையர் கலைசெல்வன் ஆகியோர் நீதிமன்ற வளாகத்தில் வந்து பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.
அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு வழிகளில் வாகனங்கள் நிறுத்தி வைக்கபட்டு இருந்தது. இறுதியாக 7.45 மணி அளவில் வெளியில் போலீஸ் குவிக்கப்பட்டு சிறப்பு நடவடிக்கை குழு அதிகாரிகள் சுற்றி நிற்கவே உயர் அதிகாரிகள் முன்னிலையில் முகங்கள் மறைக்கப்பட்டு வண்டியில் ஏற்றபட்டனர்.
அப்போது அங்கு இருந்த சில வழக்கறிஞர்கள் வண்டியை அடிக்கவே போலீஸ் சூழ்ந்து கொண்டனர். அங்கு இருந்த வழக்கறிஞர்கள் வண்டியின் சாவியை எடுக்க உள்ளே விழுந்ததால் உடனடியாக ஓட்டுனர் சாவியை எடுத்து வண்டி பறந்தது.
கீழ்பக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லபட்ட 17பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
12 வயது சிறுமியை 17 பேர் வன்கொடுமை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு ஆஜர் படுத்தப்பட்டதால் பல நாட்களுக்கு பின்னர் உயர்நீதிமன்றம் பரபரப்பாக காணப்பட்டது.
மாற்றுத்திறனாளி சிறுமி கூட்டு பலாத்காரம் – 17 காட்டுமிராண்டிகளுக்கும் வழக்கறிஞர்கள் ஆஜராக மறுப்பு!
சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை பல மாதங்களாக கூட்டு பலாத்காரம் செய்த 17 காட்டுமிராண்டுகளுக்கும் ஆதரவாக வழக்கஞறிர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள் என்று வழக்கறிஞர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.
சென்னை அயனாவரத்தில் தொழிலதிபர்கள், அமைச்சர்களின் உதவியாளர்கள், வசதியானவர்கள் வசிக்கும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 3 செக் போஸ்டுகள், 25க்கும் மேற்பட்ட காவலாளிகள், 50 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. வேலியே பயிரை மேய்ந்த கதையாக 7ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை கத்தியைக்காட்டி மிரட்டியும், மயக்கு ஊசி செலுத்தியும், போதை மாத்திரைகள் கொடுத்தும் கடந்த 6 மாதங்களாக 17 பேர் கூட்டு பலாத்காரம் செய்து வந்துள்ள கொடுமை சென்னை நகரத்தையே அதிர வைத்திருக்கிறது.
சிறுமியின் உடலில் உள்ள தழும்புகள், வெட்டுக்காயங்களை கண்டு திடுக்கிட்ட சகோதரியிடம் எல்லாவற்றையும் சொல்லி அழுதிருக்கிறார் சிறுமி. இதையடுத்து போலீசாரிடம் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணையில், மொட்டை மாடியையும், காலியாக இருந்த வீடுகளையும் சோதனையிட்டபோது ஆணுறைகள், போதை ஊசி மருந்துகள் கிடந்ததை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
கூட்டு பலாத்காரம் செய்த காட்டுமிராண்டிகள் ரவிக்குமார்(60), முருகேசன்(54), ஜெய்கணேஷ்(23), பாபு(36), பழனி (40), தீனதயாளன்(50), அபிஷேக்(23), சுகுமாறன்(60), இரால் பிரகாஷ்(58), ராஜா(32), சூர்யா(23), சுரேஷ்(32), ஜெயராம்(26), ராஜசேகர்(40), குணசேகர்(55), உமாபதி(42), சீனிவாசன்(45) 17 பேரும் கைது செய்யப்பட்டனர்.
உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் 17 பேரையும் ஆஜர்படுத்த அழைத்து செல்லப்பட்டபோது ஒட்டுமொத்த வழக்கறிஞர்கள் சூழ்ந்துகொண்டு 17 பேரையும் கடுமையாக தாக்கினர்.
போலீசாரால் சமாளிக்க முடியவில்லை. பின்னர் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். மேலும், போலிசாரின் வலியுறுத்தலின் பேரில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன் மற்றும் முன்னாள் தலைவர் பால.கனகராஜ் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க வழக்கறிஞர்கள் குற்றாவாளிகளை தாக்குவதை நிறுத்தினர்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன்,
’’சென்னை அயனாவரம் பகுதியில் சிறுமிக்கு பல மாதங்களாக பாலியல் பலாத்கார கொடுமை நிகழ்ந்துள்ளது. இன்றைய தினம் குற்றவாளிகளை கைது செய்து சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.
அப்போது வழக்கறிஞர்கள் ஒட்டுமொத்தமாக குற்றவாளிகளுக்கு எதிர்ப்பை காட்டினர். இந்த எதிர்ப்பானது இதுவரை காணாத கடுமையான எதிர்ப்பாகும். ஒட்டுமொத்த வழக்கறிஞர்களும் கூடி இந்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்கில் ஆஜர் ஆகக்கூடாது என்று முடிவெடுத்துள்ளோம். இந்த முடிவானது தமிழகத்தில் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்திற்கும் எழுத்து மூலம் அனுப்பப்படும்.
சிறிது வாய் பேச முடியாத, காது கேளாத சிறுமிக்கு நேர்ந்த கொடுமை மன்னிக்கவே முடியாதது. 17 பேருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். ஜாமின் வழங்கக்கூடாது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கும் ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள். 17 பேர் சார்பாக எந்த வழக்கறிஞராவது ஆஜர் ஆனால் அவர் வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார்’’ என்று தெரிவித்தது அங்கே ஆத்திரத்துடன் திரண்டிருந்த பொதுமக்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.