பிக் பாஸ் வீட்டில் பேய் இருப்பதாக புதிய பிரச்சினையை கொளுத்திப் போட்டுள்ளார் மும்தாஜ்.
பிக் பாஸ் சீசன் 2விற்கான வீடு போன்ற அமைப்பு பூந்தமல்லி அருகே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே அந்த வீட்டில் தீய சக்திகள் நெருங்காமல் இருக்க தாயத்து, தகடு போன்றவை பதிக்கப்பட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியது.
இந்நிலையில், சீசன் 2 ஆரம்பித்து 30 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், அவ்வீட்டில் பேய் இருப்பதாக மும்தாஜ் சக போட்டியாளர்களிடம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பேயை பெண்கள் அறையில் பார்த்ததாக மும்தாஜ் கூறியதாக தெரிகிறது. இது தொடர்பான காட்சிகள் நமக்கு ஒளிபரப்பப்படவில்லை. ஆனால், மும்தாஜ் கூறியது குறித்து கார்டன் பகுதியில் அமர்ந்து பாலாஜியும், டேனியும் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது பாலாஜி, ‘ரித்விகாவிடம் பேயை நேரில் பார்த்ததாக மும்தாஜ் கூறியிருக்கிறார். இதனால் அவர் பயந்து விட்டார்’ என்றார். பின்னர் இது குறித்து தன்னிடம் பேசியதாகவும், ஆனால் இது எலிமினேசனுக்காக நடத்தப்பட்ட நாடகமா என அவர் கேள்வி எழுப்பினார்.
ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என வீடு முழுவதும் சுமார் 60க்கும் மேற்பட்ட கேமராக்கள் வைத்து படமாக்கப்படும் வீட்டில் பேய் இருந்தால், அந்தக் காட்சிகளையும் நமக்கு காட்டலாமே. இதனால் டிஆர்பி இன்னும் எகிறுமே.
கடந்த சீசனில் போட்டியாளர்கள் மத்தியில் பேய் டாஸ்க் அளிக்கப்பட்டது. இம்முறையும் அதுபோல் பிக் பாஸ் டாஸ்க் எதுவும் தருவார் என எதிர்பார்த்தால், நிஜமாகவே பேய் இருக்கிறது என மும்தாஜ் பயமுறுத்தி வருகிறார்.
இதுதவிர பெண் போட்டியாளர்களும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேய் விளையாட்டு விளையாடியுள்ளனர். அப்போது விளையாட்டிற்காக மும்தாஜ் பேயைப் பார்த்ததாகச் சொன்னாரா, இல்லை அவர் ரகசிய டாஸ்க் எதுவும் நடத்தி வருகிறாரா என்பது தெரியவில்லை.
இப்படியாக பார்வையாளர்களைக் குழப்புவதாலேயே போன சீசனை விட, இந்த சீசன் மக்களுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தது போட்டியாளர்கள் பேச்சு மூலமே தெரியவருகிறது. அது தொடர்பான காட்சிகளையும் மக்களுக்கு காண்பித்தால், இன்னும் பார்வையாளர்களின் எண்ணிக்கை கூடலாம்.