திருப்பூர் ஊத்துக்குளி ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் சஞ்சய் பிரசாந்த் (18). இவர் கோயமுத்தூர் பீளமேட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை பாலிடெக்னிக் வந்த மாணவர் சஞ்சய் பிரசாந்த் சக மாணவர்களுடன் வகுப்பறையில் பேசி கொண்டு இருந்த போது வகுப்பில் பாடம் நடத்தி கொண்டு இருந்த கம்ப்யூட்டர் ஆசிரியர் முருகன் மாணவர்கள் தன்னைப் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என நினைத்து மாணவர் சஞ்சய் மற்றும் அவரது நண்பர் ஆகியோரது ஐடி கார்டை பிடிங்கிக் கொண்டு வகுப்பில் இருந்து வெளியே செல்லுமாறு கூறியுள்ளார்.
அப்போது அவர் பெற்றோரை அழைத்து வந்தால் மட்டும் தான் வகுப்பில் சேர்த்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார். ஆனால் சஞ்சய் பிரசாந்த் தனது பெற்றோரை அழைத்து வரவில்லை. ஆனால் அதே வேளை மற்ற சக நண்பர்கள் பெற்றோரை அழைத்து வந்ததால் அவரை வகுப்பில் அனுமதித்து உள்ளனர்.
ஆனாலும் சஞ்சய் பிரசாந்த் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாலிடெக்னிக் வந்து உள்ளார். தன்னை எப்படியும் ஆசிரியர் உள்ளே அழைப்பார். வகுப்பறை சென்றால் திட்டுவார் என கருதி வெளியில் காத்திருந்து உள்ளார். ஆனால் ஆசிரியர் தொடர்ந்து அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து சஞ்சாய் திருப்பூரில் உள்ள தனது வீட்டின் பாத்ரூமில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த மாணவன் சஞ்சய் எழுதியிருந்த சுமார் ஒன்றரை பக்க கடிதம் சிக்கியுள்ளது.
அந்த கடிதத்தில், அம்மா, அப்பா என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். எனக்கு இந்த உலகில் வாழ பிடிக்க வில்லை. இதனால் நான் உங்களை விட்டு செல்கிறேன். நான் எப்போதுமே தனியாக இருப்பதாக உணருகிறேன். திடீர் திடீரென்று எனது கழுத்தை யாரோ நெரிப்பது போன்று இருக்கிறது. இதனால் என்னால் படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை.
உங்களிடமும் சரியாக பேச முடியவில்லை. இதனால் நான் பிரிந்து செல்கிறேன். அன்புள்ள அண்ணா, நான் இல்லை என்று நீ கவலைப்படாதே, நான் சென்ற பின்னர் அம்மா, அப்பாவுக்கு நீ மட்டும் தான் இருக்கிறாய். என்னை பற்றி நினைத்துக்கொண்டே இருக்காதே. நன்றாக வேலை செய், அம்மா, அப்பாவை நன்றாக பார்த்துக்கொள். நான் இல்லை என்ற குறையை அவர்களுக்கு வைக்காதே.
அம்மா, அப்பா, அண்ணா மற்றும் எனது நண்பர்களை விட்டு செல்ல வருத்தமாகதான் இருக்கிறது. ஆனாலும் எனக்கு இந்த உலகத்தில் வசிக்க பிடிக்கவில்லை. எனவே நான் செல்கிறேன். அம்மா, அப்பா என்னை மன்னித்து விடுங்கள், அண்ணனை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று எழுதியிருந்ததாக இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் மாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கு ஆசிரியர் தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில், சஞ்சய் தன்னுடைய கடிதத்தில் கல்லூரியில் நடந்த சம்பவம் குறித்து எதுவும் எழுதவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் நேற்று வகுப்பை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.