இரவோடு இரவாக கொழும்பிலிருந்து வவுனியா சென்ற 50 அம்பியூலன்ஸ் வண்டிகள்

வடமாகாண மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொழும்பிலிருந்து 50 அம்பியூலன்ஸ் வண்டிகள் நேற்று மாலை வவுனியாவை சென்றடைந்துள்ளன.

இலவச அம்பியூலன்ஸ் வண்டி சேவையை செயற்படுத்த வட மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் திட்டமிட்டிருந்தார்.

அந்த வகையிலேயே குறித்த அம்பியூலன்ஸ் வண்டிகள் வடமாகாணத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பின்னர் இரவு 8.00 மணியளவில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் இடம்பெறவுள்ள நிகழ்வு ஒன்றில் வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இந்த அம்பியூலன்ஸ் வண்டிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

வடக்கு மாகாணத்தில் 21 அம்பியூலன்ஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடவுள்ளன. மிகுதி 29 வண்டிகள் ஊவா மாகாணத்தில் சேவையில் ஈடுபடவுள்ளன.

வவுனியாவில் மூன்று, மன்னாரில் மூன்று, முல்லைத்தீவில் மூன்று, மாங்குளத்தில் இரண்டு, கிளிநொச்சியில் நான்கு, யாழ்ப்பாணத்தில் ஏழு அம்பியூலன்ஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

24 மணிநேரமும் நோயாளிகள் 1990 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு இந்த அம்பியூலன்ஸ் வண்டி சேவையினை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்படுகின்றது.