பேஸ்புக் நிறுவனத்தின் அதிரடி தீர்மானம்…

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இன முரண்பாடுகளைக் தோற்றுவிக்கக்கூடிய பதிவுகளை அகற்றும் நடவடிக்கைகளை பேஸ்புக் நிறுவனம் ஆரம்பிக்கிறது.சிட்னி மோர்னிங் ஹெரால்ட் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில், பேஸ்புக் நிறுவனத்தின் உற்பத்தி முகாமையாளர் தெஸ்ஸா லியோன்ஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் பதியப்படுகின்ற சில பகுதிகளில் வெளிசமூகத்தில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில் அமைகின்றன.இது தொடர்பில் பேஸ்புக் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அண்மையில் இலங்கையில் கண்டி உள்ளிட்ட சில இடங்களில் பதிவான வன்முறைகளின் பின்னணியில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பதிவுகளும் காரணமாக அமைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.இதனால் சில தினங்களுக்கு சமூக வலைத்தளங்களுக்கு இலங்கையில் தடைவிதிக்கப்பட்டிருந்தன.

இதனை அடுத்து இலங்கைக்கு விஜயம் செய்த பேஸ்புக் நிறுவனத்தின் பிரதானிகள், முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலான, பதிவுகளை கட்டுப்படுத்துவதற்கு இணங்கியதுடன், அதற்கான வேலைத்திட்டத்தை அமுலாக்குவதாகவும் உறுதியளித்தனர்.எனினும் இவ்வாறான பதிவுகளை கட்டுப்படுத்துவது மாத்திரம் போதாது என்று தெரிவித்துள்ள அந்த நிறுவனத்தின் உற்பத்தி முகாமையாளர், அவ்வாறான பதிவுகளை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.