எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது ராஜபக்ச குடும்பத்திற்கு வெளியிலிருந்து வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,எனக்கு ஜனாதிபதியாகும் கனவு எதுவும் கிடையாது. எனினும், அது குறித்து பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். அது அவர்களின் கருத்து சுதந்திரம்.
ஜனாதிபதியாகுவதற்கு தகுதியானவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். எவ்வாறாயினும், ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பலரின் பெயர்கள் பேசப்பட்டு வருகின்றது.இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலின் போது ராஜபக்ச குடும்பத்திற்கு வெளியிலிருந்து வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படுகின்றது.
எனினும், யார் அந்த வேட்பாளர் என்பது குறித்து தற்போது அறிவிக்க முடியாது.இந்த விடயங்கள் குறித்த மகிந்த ராஜபக்ச நடவடிக்கை எடுப்பார். இது குறித்து அனைவருடனும் ஆலோசித்து முடிவெடுக்கும் உரிமை அவரிடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முடிவெடுக்க பல கட்சிகள், அமைப்புகளுடன் கலந்துரையாடும் முறையான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளர்களாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் சமல் ராஜபகச் ஆகியோரின் பெயர்கள் பேசப்பட்டு வந்த நிலையில், திடீர் திருப்பமாக பசில் ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.